தேனீக்களை குணமாக்கும் தேன்!
தேனீக்களை காப்பாற்றும் வேதிப்பொருள்!
தேனீக்களை பூச்சிக்கொல்லி, பருவநிலை மாறுபாடு என பல்வேறு விஷயங்கள் பாதிக்கின்றன. கூடுதலாக வாரோவா எனும் ஒட்டுண்ணி(Varroa destructor) தேனீக்களை கடுமையாக தாக்குகிறது. இது, தேனீக்கூட்டிலுள்ள புழுக்களை உணவாக உண்பதோடு, உடலிலுள்ள வைரஸ்களை தேனீக்களின் காலனிக்கும் தொற்ற வைக்கிறது. இதில் ஏற்படும் தாக்குதலால் தேனீக்களின் இறகு கடுமையாக பாதிக்கப்படுகிறது. வளரும் நிலையில் உள்ள பூச்சிகளுக்கு இறகு வளர்ச்சியில்லாமல் போய்விடுகிறது.
வைரஸ் தேனீக்களின் நினைவுகளையும் பாதிக்கிறது. இதனால் கூட்டை விட்டு தேனை தேட கிளம்பிய வேலைக்கார தேனீ, வீட்டுக்கு திரும்ப முடியாது. எப்படி வருவது என்பதை மறந்துவிடுவதுதான் காரணம். உணவு கிடைக்காததால், தேனீக்களின் கூட்டமே நிலைகுலைந்து அழியும் நிலை உருவாகும்.
தேனீக்களை தாக்கும் வைரஸ்களை அழிக்கும் வேதிப்பொருளை தேசிய தைவான் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. சோடியம் பூடைரேட் (Sodium butyrate) எனும் வேதிப்பொருளை தினசரி தேனீக்களுக்கு கொடுக்கும்போது அவை வலிமையாகின்றன. மனிதர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் போலவே இந்த வேதிப்பொருள் செயல்படுகிறது. இதன் விளைவாக, எளிதாக இறக்கை வைரஸை சமாளித்து தேனீக்கள் வாழ்கின்றன.
சோடியம், ஹைட்ரஜன், கார்பன், ஆக்சிஜன் ஆகியற்றிலிருந்து சோடியம் பூடைரேட் வேதிப்பொருள் பெறப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புதிதானது என்று கூற முடியாது. நார்ச்சத்தை மனிதர்களின் வயிற்றில் செரிக்கும்போது, இயல்பாகவே சோடியம் பியூடைரேட் உருவாகிறது. இயற்கையாகவே நிறைய உணவுப்பொருட்களில் இந்த வேதிப்பொருள் காணப்படுகிறது.
வைரஸ் தாக்குவதற்கு முன்னரே தேனீக்களுக்கு சோடியம் பியூடைரேட் எனும் வேதிப்பொருளை கொடுக்கும்போது, அதன் இறப்பு எண்ணிக்கை குறைகிறது. 90 சதவீத தேனீக்களை இம்முறையில் காப்பாற்றியுள்ளனர். சிகிச்சை வழங்கப்படாத தேனீக்களுக்கு உயிர்பிழைக்கும் வாய்ப்பு 10 சதவீதம்தான் உள்ளது.
சோடியம் பியூடரைட் வேதிப்பொருளை பயன்படுத்தும்போது தேன்கூட்டில் கிடைக்கும் தேன் அளவும் கூடுகிறது. இந்த வேதிப்பொருளின் விலை குறைவாக இருப்பதால், தேனீ வளர்ப்பவர்கள் எளிதாக வாங்கிப் பயன்படுத்தலாம். மகரந்த சேர்க்கைக்கு முக்கியமான கருவியாக தேனீ இருக்கிறது. இயற்கைச்சூழலின் பன்மைத்தன்மைக்கு தேனீக்களை அழியாமல் பாதுகாப்பது மிக முக்கியமாகும்.
தகவல்
bbc science focus nov 2021
A supplement for bees could save colonies from a deadly virus
bbc science focus nov 2021
----------------------
கருத்துகள்
கருத்துரையிடுக