தனது தோழியைக் கொன்ற குற்றச்சாட்டிற்காக விசாரணையைச் சந்திக்கும் டீனேஜ் பெண்! - தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்
எ கேர்ள் வித் பிரேஸ்லெட்
மூலப்படம் தி அக்யூஸ்டு
குற்றமும், குற்றவிசாரணையும், அதில் பார்வையாளர்களுக்கு மெல்ல விரியும் விஷயங்களும்தான் படம்.
காட்சி தொடங்கும்போது, கடற்கரை காட்டப்படுகிறது. அங்கு ஒரு குடும்பம் விளையாடிக் கொண்டிருக்கிறது. பெற்றோர், டீனேஜ் பெண், சிறுவன் ஆகியோர் அங்கு இருக்கிறார்கள். அப்போது அங்கு போலீஸ் குழு மூவர் வந்து டீனேஜ் பெண்ணை விசாரிக்க கூட்டிச்செல்கிறார்கள். இப்படித்தான் படம் தொடங்குகிறது.
அப்பாவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதனை உள்ளே அடக்கிக்கொண்டு வழக்குரைஞரை பார்த்து பேசுவதாக சொல்லுகிறார். பிறகு தான் படம் தொடங்குகிறது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என படம் தொடங்கும்போது, படத்தின் நாயகி லைஸ் படுக்கையில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல் வழியாகவே நாம் அவள் பிணையில் இருக்கிறாள். அவளது காலில் எலக்ட்ரானிக் விலங்கு பூட்டப்பட்டிருப்பதை அறிகிறோம்.
ஆறு மாத சிறை தண்டனைக்குப் பிறகு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள்.
இதில் எந்த விஷயங்களும் நேரடியாக முன்னதாகவே சொல்லப்படுவதில்லை. அனைத்தும் கோர்ட்டில் நடைபெறும் விசாரணை மூலமாகவே தெரிய வருகிறது. இந்த புதிய உத்தி வழியாகத்தான் லைஸ், அவளது பெற்றோர், அவளது வெளியே தெரியாத விஷயங்கள், அவளது நட்பு வட்டாரம், செக்ஸ் வாழ்க்கை என அனைத்துமே தெரிய வருகிறது.
நான் லீனியர் படம் கிடையாது. ஆனால் விசாரணை வழியாகவே அதில் ஈடுபட்டுள்ளவர்களின் குணங்களை சொல்லுகிறார்கள். மறைமுகமான வழியில்.
விசாரணை, பதில்கள், உணர்ச்சிகள், மௌனம், வெறித்த பார்வை என அனைத்துக்குமே லைஸ் ஈடுகொடுத்து பிரமாதமாக நடித்திருக்கிறார். இவர்தான் படத்தை தாங்கிச்செல்கிறார். இரண்டு ஆண்டு விசாரணையில் அவள் அதிகம் பேசுவது தனது தம்பியுடன் மட்டும்தான்.
லைஸின் மனநிலை எப்படியிருக்கிறது என தீர்ப்பிற்கு முன்னர்தான் தெரிய வருகிறது. பெரிதாக இதயம் துடிக்கும் திரில்லர் கிடையாது. ஆனால் உளவியல் ரீதியாக படம் பார்ப்பவர்களை யோசிக்க தூண்டுகிறது.
அதிக வசனங்கள் இல்லாமல் முக உணர்வுகள் மூலமாகவே மனதிலுள்ள வெறுப்பை கசப்பை வெளிக்காட்டுகிறார் லைஸின் அப்பா. அவர் தனது மருத்துவராக உள்ள மனைவியிடம் பேசும் காட்சி முக்கியமானது. முதலில் தனது மகளை பிரச்னையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தன்மையிலிருந்து மெல்ல மாறி, அவளது வாழ்க்கைக்கான முடிவை அவளே எடுக்கவேண்டும் என்ற மனநிலைக்கு முதிர்ச்சி பெறும் காட்சியை நன்றாக எடுத்திருக்கிறார்கள்.
இளம் பெண்களை பெற்றோர் எந்தளவு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் படம் மறைமுகமாக கேள்வி கேட்கிறது. உண்மையில் அவர்கள், அக்காலகட்டத்திற்கான பாலியல் உணர்ச்சி வேகத்தால் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை லைஸின் பெற்றோர் புரியும்போது காலதாமதம் ஆகிவிடுகிறது. இதன் விளைவாக கோர்ட்டில் பெரும் அவமானத்தை சந்திக்கிறார்கள். வெளியே சொல்ல முடியாத வலியை தனது உடல் மொழி வழியாகவே லைஸின் தந்தையாக நடித்தவர் நமது மனத்திற்கு கடத்துகிறார்.
பார்வையாளர்கள்தான் சூழலைப் புரிந்துகொண்டு கொலையை யார் செய்திருப்பார்கள் என்று புரிந்துகொள்ளவேண்டும்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக