திரைப்பட இயக்குநர் எடுக்கும் புனர்ஜென்ம அவதாரம்! ஷியாம் சிங்கா ராய் - தெலுங்கு

 



ஷியாம் சிங்கா ராய் -தெலுங்கு







ஷியாம் சிங்கா ராய்
தெலுங்கு
ராகுல் சாங்கிருத்தியன்
சானு வர்க்கீஸ்
மிக்கி ஜே மேயர் 


நாளைய இயக்குநராகும் ஆசையில் உள்ளவர், வாசு. எப்படியோ தனது குறும்படத்திற்கு கீர்த்தி என்று வெளிநாடு சென்று படிக்கும் ஆசையில் உள்ள பெண்ணை சரிகட்டி நடிக்க வைத்துவிடுகிறார். பிறகு கிடைக்கும் திரைப்பட வாய்ப்பிலும் வெல்கிறார். அந்த  படத்தை இந்தி மொழியில் உருவாக்க முயலும்போது தான் பிரச்னை தொடங்குகிறது. வாசு மீது கொல்கத்தாவை சேர்ந்த எஸ்ஆர் பதிப்பகம் கதை திருட்டு என வழக்கு போடுகிறது. 

உண்மையில் வாசு கதையை திருடினாரா இல்லையா என்பதுதான் படமே...

படம் புனர்ஜென்மம், ஹிப்னோதெரபி என நிறைய விஷயங்களைப் பேசுகிறது. எல்லாவற்றையும் விட படத்தில் கவருவது கல்கத்தாவில் சீர்திருத்தக்காரராக வரும் ராய் தான். அவர் பேசும் விஷயங்கள் அக்காலத்திற்கு மட்டுமல்ல, இப்போதும் முக்கியமானதாக இருக்கிறது. இப்போதும் தொன்மை இந்தியாவை நோக்கி செல்வதால் இப்படிப்பட்ட ராய்கள் தேவைப்படலாம். 




படத்தின் கதை நவீன காலம் 2021, 1969 என இரண்டு காலகட்டமாக உள்ளது. அதற்கேற்ப படக்குழு உழைத்திருக்கிறார்கள். 

படத்தை இரண்டு பாத்திரங்களிலும் வேறுபடுத்தி தாங்கிப் பிடிப்பது நானிதான். தேவதாசிகளின் நடனத்தின்போதே கடவுளுக்கு பெண்கள் ஏன் அடிமையாக இருக்கவேண்டும் என கேள்வி கேட்பது, தீண்டாமையால் நீர் கிடைக்காதவனை கிணற்றில் தூக்கிப்போட்டு பேசும் வசனம், நக்சலில் சேரச்சொல்லி கேட்கும்போது சொல்லும் பதில்,  என நடிப்பில் அசத்துகிறார். வலது கையில் பேனாவும் இடது கையில் சிகரெட்டுமாக தொடக்க காட்சி முதலே தன் மீது கவனம் அகலாமல் பார்த்துக்கொள்கிறார். 

இதற்கடுத்து நம்மை ஈர்ப்பது மைத்ரேயியாக வந்து ரோசியாக மாறும் சாய்பல்லவியும், பத்மாவதியாக வரும் மடோனாவும்தான். இவர்கள் பாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 




கதையை நாம் உள்வாங்கிக்கொள்ள மிக்கி ஜே மேயரின் இசை பெருமளவு உதவியுள்ளது. பிராணவலயா பாடல், காளியின் மீது பரவசத்தை அன்பை சொல்லுவது போல அமைந்துள்ளது. இதனை தமிழில் எழுதியுள்ள சௌந்தர்ராஜனும் தாளத்திற்கு எழுதாமல் பொருந்தும்படி செய்திருக்கிறார். 

படத்தில் வலிய குத்துப்பாட்டு வைக்காமல் எது தேவையோ அதோடு நிறுத்திக்கொண்டதற்கு இயக்குநர் ராகுல் சாங்கிருத்தியனைப்  பாராட்டியே ஆகவேண்டும்.

நெருப்பு! 

கோமாளிமேடை 



கருத்துகள்