சட்டத்தை தனது வாழ்வாக கொள்பவனின் மனைவியை ராவணன் கொள்ளையடித்தால்..... - இஷ்வாகு குலத்தோன்றல் - அமிஷ்

 





எழுத்தாளர் அமிஷ்



இஷ்வாகு குலத்தோன்றல்
அமிஷ்
தமிழில் பவித்ரா ஸ்ரீனிவாசன் 
வெஸ்லேண்ட்




ராமாயணத்தை தனது பார்வையில் எழுதியுள்ளார். இதில் மூன்று பாக நூல்கள் உள்ளன. ராவணன் ஆர்ய வர்த்தாவின் எதிரி நூலை முன்பே படித்து அதற்கான விமர்சனத்தை எழுதியுள்ளோம். இப்போது, இந்த நூலைப் பற்றி பார்ப்போம். வாய்ப்பு கிடைத்தால் சீதா - மிதிலாவின் போராளி நூலையும் வாசித்து எழுதுவோம். 

கதை தொடங்குவது தண்ட காரண்யா வனத்தில். லஷ்மணனும், ராமனும் மானை வேட்டையாட தயாராக இருக்கிறார்கள். அதை வேட்டையாடி தூக்கிக்கொண்டு வரும்போது சீதா , ராமனை அழைக்கும் குரல் கேட்கிறது. அதை தேடி வேகமாக போகும்போது ராவணன் சீதாவை புஷ்பக விமானத்தில் கடத்திக்கொண்டு செல்கிறான். பாதுகாப்பிற்கு இருந்த ஜடாயூ ஏறத்தாழ குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறார். 

கதை பின்னோக்கி செல்கிறது. அதில் அயோத்யா நகரம் எப்படி இருக்கிறது, அதன் கலாசாரம், அங்குள்ள மக்கள் எப்படி என மெல்ல வாசகர்களுக்கு தெரிய வருகிறது. 

தசரதன் சப்தசிந்து கூட்டமைப்பில் மன்னராக இருக்கிறார். இதுதான் பல்வேறு சிற்றரசுகளின் கூட்டமைப்பு. இதனை பல்வேறு அடக்குமுறைகளை செய்து மிரட்டி, ஒடுக்கி கப்பம் கட்டும்படி தசரதன் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு பட்டத்திற்கு வரும்படி வாரிசு இல்லை. இதனால் யார் முதலில் குழந்தை பெறுகிறார்களோ அவர்களுக்கு பட்டத்து இளவரசனாகும் தகுதி கிடைக்கும். இதுவே நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கும். 

இதனால் அரச குடும்பத்தில் உள்ள கௌசல்யா, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவருமே குழந்தையைப் பெற்றுக்கொள்ள முயன்று வருகிறார்கள். இந்த நேரத்தில்தான் இலங்கை கப்பத் தொகையை கட்டமாட்டேன்கிறது. அதனை ஒடுக்க செல்கிறார் அப்போது தொடுத்த போரில் எல்லாம் வெற்றி பெற்றதால் இறுமாப்பு உடலில் ஏறியிருக்கிறது. இதனால் இலங்கை அதிபதி குபேரனை சாதாரணமாக எடை போட்டு விடுகிறார். ஆனால் அவனது ராணுவத்தளபதியாக இருப்பவன், கொம்பு வைத்த கிரீடம் அணிந்தவன். 





அவன்தான் போர் வியூகங்களை வகுத்து இலங்கையை வலுவான நாடாக மாற்றிக்கொண்டிருப்பவன். அவனிடம் பேசாமல் குபேரனிடம் பேசுகிறார் தசரதர்.  ராணுவத்தளபதி, தசரதனை பெயர் சொல்லி அழைப்பதோடு நீ தோற்பாய் என உறுதியாக சொல்லுகிறான். இதனால் பதற்றமாகும் தசரதன் எடுக்கும் முடிவு அவனது படைவீர ர்களின் பேரிழப்பிற்கு காரணமாகிறது. அந்த நேரத்தில்தான் நீண்ட காலமாக கர்ப்பம் தரிக்காத கௌசல்யா, கரு தங்கி பிரசவிக்கும் நிலையில் உள்ளாள். அவளுக்கு பிறக்கும் குழந்தைதான் ராமன். 

அவன் பிறக்கும் நண்பகலில்தான் தசரதன் போரில் தோற்று அடிபட்டு வீழ்ந்து அவனது ஆப்த மனைவியான கைகேயி மூலம் உயிர் காப்பாற்றப்படுகிறான். ராவணன் அடிக்கும் அடியில் தசரதனின் வலது கால் ஊனமாகிறது. கணவனைக் காப்பாற்றும் வேகத்தில் கைகேயியின் விரல்கள் வெட்டப்படுகின்றன. அவளும் செத்து பிழைக்கும் நிலையில்தான் இருக்கிறாள். 




ராமன் பிறந்த வேளைதான் அவனது தந்தை தசரதன் தோற்றுப்போனார் என்ற செய்தியை நாடெங்கும் கைகேயியின் விசுவாசிகள் பரப்புகின்றன. தசரதரும் தனது ஆணவத்திற்கு விழுந்த அடியை ஏற்க முடியாமல் தனது மகன் ராமனின் மீது பழிச்சொல்லை வீசுகிறார். அவனை தனது மகனாக ஏற்பதேயில்லை. 

இப்படி வாழும் ராமன் வாழ்க்கை என்னவானது என்பதையே இஷ்வாகு குலத்தோன்றல் நாவல் சொல்லுகிறது. 

நாவலில் நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன. அவை நமக்கு புராண ரீதியாகவும் நிறைய அடிப்படை விஷயங்களை புரிய வைக்கிறது. 

வசிஷ்டரின் சீடர்களாக ராமன், பரதன், லஷ்மணன், சத்ருக்கன் என நால்வரும் கலந்துரையாடும் உரையாடல் முக்கியமானது. இதில் தான் நால்வரின் வேறுபட்ட சிந்தனைகளை நாம் தெரிந்துகொள்கிறோம். 

ஆண் சமுதாயம் - உண்மை, கடமை, கௌரவம், பெண் சமுதாயம் - சுதந்திரம், உயிர்ப்பு, சௌந்தர்யம் என அடிப்படை விதிகளை கடைபிடிப்பது. இதில் எதனை கடைபிடிப்பது நல்லது, எது இந்தியாவிற்கு ஏற்றது என ராமன் செய்யும் விவாதம் அற்புதமான வாசிப்பு அனுபவத்தை தருகிறது. ராமன், ஆண் சமுதாயத்தை ஏற்கிறான். பரதன், சுதந்திரம் தரும் பெண் சமுதாயத்தை ஏற்கிறான். அவனுக்கு விதிகளை விட சுதந்திரத்தையே முக்கியம் என்கிறான். 

ராமனைப் பொறுத்தவரை விதிகள்தான் சமூகத்தை உருவாக்கிறது. அதை முறைப்படுத்துகிறது என நம்புகிறான். அவனது வாழ்க்கையை மாற்றுவது மந்தரையின் மகளான ரோஷ்னி தேவியின் மரணம்தான். நாவலில் அவளது இறப்பு ராமனின் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வைப்பதாகவே இருக்கிறது. ஆனாலும் கூட ராமன் எந்த இடத்திலும் தன்னை மாற்றிக்கொள்வதில்லை. நகர, கிராமத்து மக்களுக்கு மருத்துவசேவை செய்து வருகிறாள் ரோஷ்னி. அவளின் கள்ளமற்ற புனித தன்மையை எழுத்தாளர் அழகான தேவதை போன்ற தளத்திற்கு உயர்த்துகிறார். 




ராமனுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்திய சட்டம் முக்கியம் என்றால் பரதனுக்கு கண்ணுக்கு கண் என்ற உணர்ச்சி வசப்பட்ட மனம் உண்டு. ராமனை லஷ்மணன் பின்தொடர்கிறான். ராமன் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் அவன் ஏற்கிறான். ஆனால் தனக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை வெளிப்படையாக கூறி அண்ணனை பின்தொடர்கிறான். ஆனால் பரதனை ஆதரிக்கும் சத்ருக்கனுக்கு பெரிய மாற்றுக்கருத்தில்லை. 

அவனது அம்மா சுமித்ரை சொன்னபடி பரதனை பின்தொடர்கிறான். இருவரின் யார் அரசராக அரியணை ஏறினாலும் அவர்கள் பக்கத்தில் சுமித்ரையின் இரு மகன்களான லஷ்மணும், சத்ருக்கனும் நிற்பார்கள். இந்த அறிவார்ந்த யோசனையால் ஒருமுறை விஸ்வாமித்திரர், மூன்றாவது மனைவியான சுமித்ரையை புத்திசாலி என புகழ்கிறார். 

தந்தையும், நாட்டு மக்களும் கூட எதிராக இருக்கும் சூழலில் ராமன் தனது பணியை இயல்பாக எடுத்து நகர்க்காவலை மேம்படுத்துகிறான். பரதனுக்கு, வெளியுறவுத்துறையை வழங்குகிறார்கள். இதிலும் அரசியல் விளையாட்டு உண்டு. ராமனின் நிதானிக்கும் புத்தியால் , அவமானம் பொறுக்கும் பண்பால் பெரிதாக எதையும் எடுத்துக்கொள்வதில்லை. வாசகர்களுக்கு உண்மையில் ராமனின் பண்பு சகோதர ர்களுக்கு வேறுபட்டு தெரிந்தது போல சட்டத்தை மதிக்கும் பண்பு வினோதமாக தெரிவதில்லை. தான் நம்பும் கருத்தில்அவர் உறுதியாக இருக்கிறார். 

ரோஷ்னி தேவி, வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவம், சகோதரர்களின் வேறுபட்ட கருத்துகளை அடையாளம் காட்டுகிறது. இந்த சம்பவம், சமகால சம்பவங்களையும் நினைவுபடுத்துகிறது. அதற்கு மக்கள் ஆற்றிய எதிர்வினைகளும் நினைவுக்கு வருகிறது. அடிப்படையில் முறையான சமூகத்திற்கு சட்டம்தான் சரி என்பதை உணர்ச்சி கொந்தளிப்பற்ற நிலையில் யோசிக்கும்போது யாருமே ஏற்றுக்கொள்வார்கள். 

காட்டில் வேட்டையாட சென்று ராமன் தனது தந்தையை சிறுத்தையிடமிருந்து பாதுகாக்கும் பகுதி, அதற்கு பின்னான உரையாடல் பகுதி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. 

அதற்குப் பிறகுதான் விஸ்வாமித்திரர் வருகிறார். கூடவே காதலையும் அழைத்து வருகிறார்.  மிதிலைக்கு செல்வதும், அங்குள்ள கட்டட அமைப்பு விவரணை சிறப்பாக உள்ளது. சீதா, ராமன் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி, பின்னர் தேன்கூட்டு அமைப்பில் சீதா, ராமரை அடையாளம் கண்டு பேசுவதும், பூங்காவில் பேசுவதும் சிறப்பாக உரையாடல் பகுதி. 

சீதாவும் ராமரும் ஒருவரையொருவர் அடையாளம் கொண்டு மெல்ல விரும்பத் தொடங்குவது அங்கேதான் நடக்கிறது. இந்த பிரியம் எந்தளவுக்கு என்றால், ருத்ரதேவனின் வில்லை எடுத்து பயிற்சி செய்யுங்கள் என சீதா கொடுக்கிறார். ஆனால் அது சட்டத்திற்கு விரோதம் என ராமர் மறுக்கிறார். 




நூலில் சாதி முறைகள் எப்படியிருந்தன என விளக்க ஆசிரியர் சிரத்தை எடுத்திருக்கிறார். தொன்மை அமைப்பு படி சூத்திரர் பிறப்பாக இருந்தாலும் கூட ரிஷி சத்யகாமர், சக்தி என இருவர் சிறப்பான மகாமுனிகளாக வந்தனர் என்று எழுத்தாளர் அமிஷ் குறிப்பிடுகிறார்.  பிராமணர்கள் என்று குறிப்பிடுவது, செய்யும் செயலை வைத்துத்தான் பிறப்பால் அல்ல. 

தனது திருமணம் முடிந்தபிறகு கணவன் ராமனிடம் சீதா சொல்லும் சமூக அமைப்பு முறை அசத்தலான யோசனை. அது நடைமுறைக்கு  வந்ததா என்று தெரியவில்லை. ஆனாலும் இப்படியெல்லாம் ஒரு பெண் தனது கல்வியால் சிந்தனையால் யோசிக்கிறார் என்பது ஆச்சரியகரமானது. 

அரண்மனையில் நடக்கும் காட்சிகளை விட வெளிப்புற சூழல்களில் நடைபெறும் விஷயங்களே பெரிதாக ஈர்க்கின்றன. இதற்கு காரணம், அவமானப்படுத்தும் மக்கள், தந்தை ஆகியோரிடமிருந்து விலகி இருக்கலாம் என ராமன் நினைக்கும் மனநிலை யை வாசகர்களும் பெற்றுவிடுகிறோமா என்று புரியவில்லை. 

படத்தின் அட்டையில் இருக்கும் காட்சிதான் இறுதிப்பகுதி. எனவே அதனை தனியாக விளக்க வேண்டியதில்லை. 

நாவல் நிறைய திருப்பங்களையும் ஏராளமான தத்துவ விளக்கங்களையும் கொண்டுள்ளது. வாசிக்கும்போது எழுத்தாளர் எந்தளவு ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்பதை வாசகரே உணர முடியும். 

கோமாளிமேடை டீம் 

 pinterest


 







கருத்துகள்