மனது சொன்னதைக் கேட்டால் தொழிலில் வெற்றிபெறலாம்! - சித்திரம் பேசுதடி - ரஷ்மி பன்சால்
சித்திரம் பேசுதடி
ரஷ்மி பன்சால்
வெஸ்ட்லேண்ட் பதிப்பகம்
எழுத்தாளர் ரஷ்மி பன்சால் |
இந்த நூலில் மொத்தம் இருபது தொழில்முனைவோர் உள்ளனர். இவர்கள் யாரும் எம்பிஏ படிக்கவில்லை. அனைவருமே மனதிலுள்ள வேட்கை காரணமாகவே தங்களது தொழில்துறையில் வெற்றியை சந்தித்துள்ளனர்.
இதில் நிறைய சவால்களும் உண்டு. ஆனாலும் அதனை எதிர்கொண்டு சாதித்துள்ளனர். வணிக நூலை சுவாரசியமாக எழுதுவது கடினம். ஆனால் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் லஷ்மி விஷ்வநாதன்.
நூலில் மொத்தம் இருபது தொழில் முனைவோர் உள்ளனர். இவர்களுக்கு பொதுவாக உள்ள விஷயம். முறைப்படியான வணிக நிர்வாக படிப்பை இவர்கள் படிக்கவில்லை. தொழிலில் கடைப்பிடித்த அனைத்து விஷயங்களையும் தன்னார்வமாக கற்றுக்கொண்டனர். மேலும், அனுபவ பூர்வமாக கற்ற விஷயங்களை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை சரிவர அமைத்துக்கொண்டனர். பிறகு சமூகத்திற்கும் அதனை வழங்கியுள்ளனர்.
மேலோரோ கீழோரோ எல்லாம் அவர்களின் செயல்களில் உள்ளது மேலோரிடம் கீழ்மையும், கீழோரிடம் மேன்மையும் கூட காணக்கிடைக்கும் என்பார்கள்.
அதுபோல இந்த நூலில் உள்ள தொழில் முனைவோர் அனைவரிடம் உள்ள சாதிக்கும் வேட்கை அவர்களை உயர்த்தியிருக்கிறது. இதில் சுவாரசியமான வாழ்க்கை கதை கொண்டவர்கள் என சிலரைக் குறிப்பிடலாம்.
தோசா பிளாசாவின் பிரேம் கணபதி. பெரிய கல்வி இல்லாமல் மும்பைக்கு வந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு அவரது உறவினர்களின் வாழ்க்கைக்கும் பொறுப்பேற்று உதவியிருக்கிறார். இவரின் அனுபவ பூர்வமான கல்வி என்பது ஆச்சரியப்படுத்துகிறது. இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா, எப்படி இதை சாதித்தார் என நினைக்கும்படியான சுவாரசியங்களை தனது வெற்றிக்கதையில் சொல்லியிருக்கிறார்.
சூ காம் என்ற எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தியவர் குன்வர். இவர் பள்ளியில் படிக்கும்போது இயற்பியலில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தொழிலாக இயற்பியல் சார்ந்து விஷயங்கள் மாறும்போது படிக்க தயங்கவில்லை. தான் கற்றதை பிறருக்கு சொல்லித்தந்து தொழில் போட்டிகள், துரோகங்களை சமாளித்து வென்ற கதை அயர வைக்கிறது. அனைத்தையும் சாதித்திருக்கிறார். அதனால்தான் அவரைப் பற்றி நாம் படிக்க முடிகிறது.
என் மகாதேவன் தொடங்கிய ஓரியண்டல் குசைன்ஸ் நிறுவனம் இப்போது நம்மை மிரட்டுவது போல தோன்றலாம். அதனை தொடங்கி நடத்துபவரின் லட்சியம் ஆச்சரியப்படுத்துகிறது. தான் இன்று பெரிய நிறுவனத்தை வைத்து நடத்தினாலும் கூட சமூகத்திற்கு பங்களிப்பதையும் முக்கிய கடமையாக கொண்டிருப்பது உண்மையில் நெகிழ்ச்சிகரமான செய்தி. சமையல் தொடர்பாக இவர் கூறும் பல்வேறு செய்திகள் அந்தந்த துறை சார்ந்தவர்களுக்கு முக்கியமான பாடம்.
லேசர் சாப்ட் இன்போசிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தை போலாரிஸ் வாங்கிவிட்டது. இதனை தொடங்கிய சுரேஷ் காமத்தின் கொள்கைகள் ஆச்சரியப்படுத்துபவரை. கோடிங் எழுதுவதுதான் நிறுவனத்தின் முக்கியமான வாழ்வாதார சமாச்சாரம். அதனை அவர் மாற்றுத்திறனாளி, கோடிங்கில் ஆர்வமுள்ளவர்களை அழைத்து வந்து சொல்லித்தருகிறார். இவர்கள் யாருக்குமே முறையான கோடிங் பயிற்சி கிடையாது. கல்லூரியில் படித்து பட்டமும் வாங்கவில்லை. ஏன் இப்படி? அதனால் என்ன? அவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிப்போம் என்கிறார். மேலும் அலுவலகம், வேலை செய்யும் இடம், பணியாளர்களின் இடம் என அனைத்துமே சாதாரணமாக இருக்கிறது.
வாழ்க்கை நெருக்கடியாக செல்லக்கூடாது. இப்படி இருப்பதே நன்றாக இருக்கிறது. நாங்கள் நிதானமாக வளர்ந்தால் போதும் என புத்த துறவி போல பேசும் முதலாளியை எங்கேனும் பார்த்திருப்போமா? ஆண்டு இலக்கெல்லாம் கிடையாது என உறுதியாக சொல்லும் சுரேஷின் கொள்கை வித்தியாசமானது. ஆனால் வினோதமானது கிடையாது.
கிராஸ்வேர்டு என்ற புத்தக கடை மால்களில் அல்லது தனிக்கடையாக பல்வேறு இடங்களில் பார்த்திருப்பீர்கள். அதனை தொடங்கியவர் ஆர் ஸ்ரீராம். இவர் நூல்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர். அதில் பணம் கிடைக்கும் என்பதற்காகவெல்லாம் கடையைத் தொடங்கவில்லை. படிக்கும் அனுபவம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் கடையை வடிவமைத்தார். ஆனால் அது வெற்றி பெற, கிராஸ்வேர்ட் கடை உருவானது. வணிக வாழ்க்கையோடு ,தனிப்பட்ட வாழ்க்கையும் ஆச்சரியப்படுத்துவதுதான். ஆனால் இது இங்கே முக்கியமில்லை. நூல் விற்கும் கடை எப்படியிருக்கவேண்டும் என்று ஸ்ரீராம் கூறும் கருத்துகள் முக்கியமானவை.
வனவாழ்வு பற்றி புகைப்படம் எடுக்கும் கல்யாணம் வர்மா தனது வாழ்க்கையை ஐடியிலிருந்து மாற்றிக்கொண்டார். இதற்கான காரணங்களையும் அவர் கூறுகிறார். அதுதான் சாதாரணமாக பிறர், யோசிக்கும் விதத்திலிருந்து மாறுபடுகிறது. இன்று தான் விரும்புகிற பணியை அதற்கான சுதந்திரத்தோடு செய்துவருகிறார். இதற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார் என்பதை மறக்க முடியாது. தன்னைப்பற்றியும் தனது வாழ்க்கைப் பற்றியும் கல்யாண் கூறுவது சுவாரசியமாக உள்ளது, கவனிக்கவும் வேண்டும்.
நூலில் உள்ள தொழில்முனைவோர்களைப் பற்றிய பொதுவான விஷயம் படிப்பு மட்டுமல்ல. தங்களின் மனம் சொல்லுவதை அவர்கள் காதுகொடுத்து கேட்டதோடு, அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு தொழிலில் சவால்களை சந்தித்து வென்றார்கள். சிலருக்கு குடும்பத்தின் ஆதரவு இருந்தது. சிலருக்கு மனபலம் மட்டுமே துணை.
முழு மனதையும் தொழில்நோக்கி திருப்பி வேட்கையுடன் உழைத்து தாங்கள் நினைத்ததை அவர்கள் சாதித்தார்கள். எனவே தொழில்முனைவோராக நினைப்பவர்களுக்கு இந்த நூல் பெரும் மன தைரியத்தை தரும் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை.
நம்பிக்கை நாணயம் கைராசி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக