காட்டுத்தீக்கும், பனிக்கும் உள்ள தொடர்பு!
pixabay |
அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி!
உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக, ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.
இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார். ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். ஆனால் இது, தற்காலிகமான மகிழ்ச்சிதான்.
ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகளில் வெப்பம் காரணமாக அரிப்பு ஏற்பட்டு பனி கரைவதை தெர்மோகார்ஸ்ட் ( thermokarst)என்று அழைக்கின்றனர். ஆர்க்டிக்கின் காற்றில் இரண்டு மடங்காக வெப்பம் அதிகரித்து வருகிறது. இது உலக நாடுகளில் நிலவுவதை விட அதிகம். 1950 முதல் 2015 வரையிலான ஆர்க்டிக் பகுதி ஆவணங்களைப் பார்த்தால் இந்த மாறுபாட்டைப் புரிந்துகொள்ளலாம்.
ஆய்வாளர்கள், ஆர்க்டிக்கின் எழுபது ஆண்டுகால செயற்கைக்கோள் படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆய்வு செய்தனர். இதில் அலாஸ்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயால், ஆர்க்டிக்கில் உள்ள 10.5 சதவீதம் பனிப்பாறைகள் உருகியுள்ளன என்று தெரியவந்துள்ளது. இதற்கு காரணமான அலாஸ்காவில் காட்டுத்தீயால் எரிந்துபோன பகுதி 3.4 சதவீதம்தான்.
பனி மூடியுள்ள நிலம் எப்படிப்பட்ட தன்மையில் இருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியாது. பனிப்பாறைகள் உருகி நிலத்தில் ஏரியாக, குட்டையாக வெள்ளமாக தேங்கலாம். அப்போது நுண்ணுயிரிகள் இதனை தங்களது வாழிடமாகக் கொள்ளும். திடீரென உருகிய நீர் நிலத்தை சூழ்ந்தால், உயிரினங்களுக்கு கிடைக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடாகும்.இதில் பெருகும் நுண்ணுயிரிகள் பசுமை இல்ல வாயுவான மீத்தேனை வெளியிடுகின்றன. இது சூழலில் கார்பன் டை ஆக்சைடை விட ஆபத்தானது.
உலகிலுள்ள பனிப்பாறைகள் தோராயமாக 20 சதவீத கார்பனை உள்ளே ஈர்த்து வைத்துள்ளன. வெப்பமயமாதல் காரணமாக துருவப் பகுதிகள் உருகத்தொடங்கினால், கடல் நீர் மட்டம் உயரத் தொடங்கும். மேலும் கூடுதல் பக்கவிளைவாக பசுமை இல்ல வாயுக்களும் வெளியாகும். “இப்படி ஏற்படும் சூழல் பாதிப்பு 50 சதவீதம் என்று கூறமுடியாது. 20 சதவீதம் என்று வேண்டுமானால் கணிக்கலாம் ” என்றார் தேசிய வானிலை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளரான டேவிட் லாரன்ஸ்.
ஆதாரம்
Bloomberg
Arctic fires are melting permafrost
eric roston
கருத்துகள்
கருத்துரையிடுக