ரோபோக்களை அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்திய அமெரிக்க எழுத்தாளர்! - ஐசக் அசிமோவ்

 



எழுத்தாளர் ஐசக் அசிமோவ்




அறிவியல் ஜெகஜால எழுத்தாளர் 

ஐசக் அசிமோவ்

கலையும், அறிவியலும் தனித்தனி உலகம் என்று கூறுபவர்கள் உண்டு. இன்றுவரையிலும் இதனை கோட்பாடாக கருதி விவாதம் செய்பவர்கள் பலர். ஆனால்,  அறிவியல் எழுத்தாளர் ஐசக் அசிமோவ் இரண்டு பிரிவுக்கும் தொடர்புண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என கூறினார். 

கலைஞனின் அறிவுடன் பிரபஞ்சத்தைப் பார்ப்பது என கூறினார் ஐசக் அசிமோவ். இவரும் இதற்கு எடுத்துக்காட்டாகவே வாழ்ந்தார். போஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியல் பேராசிரியராக பணியாற்றினார் ஐசக் அசிமோவ். 

அறிவியல் புனைவுகளை எழுதியதில் இவர் இன்றளவும் மகத்தான எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். இவர் எழுதிய காலாடிக் எம்பயர், ரோபோட் ஆகிய தொடர் கதைகளின் வழியாக மூன்று முக்கிய எழுத்தாளர்களின் வரிசையில் இடம்பெற்றார். இப்பட்டியலில் ஆர்தர் சி கிளார்க், ராபர்ட் ஹெய்ன்லெய்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

சோவியத் யூனியனிலிருந்து இடம்பெயர்ந்த யூதக்குடும்பம் ஐசக்கினுடையது. 1920ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று பிறந்தவர். இவர்களது பெற்றோர் அமெரிக்காவில் தங்களது எதிர்காலத்தை உருவாக்க கடினமாக உழைத்தனர். மிட்டாய், செய்திதாள், மாத இதழ்களை விற்கும் கடையை நடத்தி வந்தனர். தான் கடையைப் பார்க்கும் போது, அங்கு உள்ள ஏராளமான மாத இதழ்களையும், நாவல்களையும் படித்தார். அப்படித்தான் அறிவியல் காமிக்ஸ்களை படித்து அதில் ஈடுபாடு கொண்டார். 

ஐசக் அசிமோவ் தனது முதல் கதையை பதினொரு வயதில் எழுதினார். அவரது தந்தை மகனது ஆர்வத்தைப் பார்த்து நிறைய எழுத ஊக்குவித்தார். தனது முதல் கதையை எடுத்துக்கொண்டு நியூயார்க்கில் உள்ள ஜான் டபிள்யூ கேம்பெல் என்ற ஆசிரியரைப் பார்த்தார். இவர், அஸ்டவுன்டிங் சயின்ஸ் ஃபிக்ஷன் என்ற இதழை நடத்தினார். முதல் கதையை இவர்தான் நிராகரித்தார். ஆனால், ஐசக் அசிமோவிடம் கதைகளை எழுதுவதற்கான ஆர்வம் இருப்பதை பார்த்தார். எனவே, தொடர்ச்சியாக கதைகளை எழுதுவதற்கு ஊக்குவித்தார். தனது முதல் கதையை  1939ஆம்ஆண்டு கஷ்டப்பட்டு முக்கி முனகி பதிப்பித்து அதற்கான தொகையைப் பெற்றார். அந்தக் கதையின் பெயர், மரூன்டு ஆஃப்வெஸ்டா. 

ஐசக் அசிமோவ் தனது வாழ்நாளில் 500க்கும் மேற்பட்ட நூல்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இதனை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரசித்து வரவேற்றுள்ளனர். இவர் எழுதிய நைட்ஃபால் என்ற நாவல் சிறந்த அறிவியல் நாவல் என ரசிகர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். அமெரிக்க எழுத்தாளர்களின் வட்டாரத்திலும் ரசிக்கப்பட்ட கதை என பெயர் பெற்றது. 

இவர்தான் முதன்முதலில் ரோபோட்டிக்ஸ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்திய எழுத்தாளர்.  ரோபோட்டுகள் மனிதர்களை தாக்க கூடாது. மனிதர்கள் சொல்லும் கட்டளையை ஏற்க வேண்டும். ரோபோக்கள் தங்களது முதல் இரண்டு கட்டளையை மீறாமல் தங்களைக் காத்துக்கொள்ளலாம் என பல்வேறு விதிகளை நூலில் எழுதினார். இவரது ஐ ரோபோட் என்ற நூலை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதில் வில் ஸ்மித் நடித்தார். இந்த படத்தை வைத்து பல்வேறு மொழிகளில் மலிவான படைப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால் எவையும் ஐ ரோபோட்டிற்கு இணையானவை அல்ல. 

ஐசக் அசிமோவ் 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று மறைந்தார். இந்த எழுத்தாளர் இறந்து போன 30 ஆவது நினைவு தினத்தை 2022ஆம் ஆண்டு நினைவுகூர்ந்து அனுசரிக்கிறோம். 

டெல் மீ வொய் 

 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்