2022இல் நடைமுறைக்கு வரும் பசுமைத்தீர்வுகள்!

 







பசுமைத் தீர்வுகள் 2022

உலகம் முழுவதும் பசுமை ஆற்றல் சார்ந்த கண்டுபிடிப்புகள் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் கவனத்தைக் கவரும் விதமான புதுப்பிக்கும், மாசுபாடு இல்லாத ஆற்றல் சார்ந்த தீர்வுகள், தொழில்நுட்பங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். 






சோலார் ஆற்றல்

தமிழ்நாட்டிற்கு,  அமெரிக்காவின் உலக மேம்பாட்டு நிதி நிறுவனம்(DFC), சோலார் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. 3.3 ஜிகாவாட் அளவுக்கு மின்சாரத்தை தயாரிக்கும் திறனை நிதியுதவி மூலம் அரசு பெற வாய்ப்புள்ளது. சோலார் பேனல்களை அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் பெருமளவு உருவாக்குவதுதான் திட்ட நோக்கம். 

இந்திய அரசு, இந்திய உள்நாட்டு சோலார் பேனல் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகையாக 4,500 கோடி ரூபாயை  ஒதுக்கியுள்ளது. அரசின் ஊக்கத்தொகை, வரிகளை குறைத்தது ஆகியவை காரணமாக நடப்பு ஆண்டில் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 

பசுமை நிதி

ஐரோப்பாவில் மாசுகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஜெர்மன் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுனம் குறைந்த வட்டியிலான கடனை வழங்குகிறது. இதன் காலம் மூன்று ஆண்டுகள். இப்படி சூழலைக் காக்க  வழங்கப்படும் கடன்களில் பசுமைப்பத்திரங்கள், சமூகப்பத்திரங்கள் ஆகியவையும் உள்ளடங்கும். இவ்வகை கடன்களின் அளவு,  375 பில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டது. இதில் புதிய செயல்பாடுகள், கண்டுபிடிப்புகள் கூடும்போது, நிதியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

படகு சவாரி

ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், கண்டேலா .  இந்நிறுவனம், ஸ்பீட் போட் என்ற பெயரில் மின் படகை உருவாக்கியுள்ளது. தற்போது, இதன் சி-7 எனும் மின் படகுகளை உலகம் முழுவதிலும் உள்ள 32 பேர் பதிவு செய்து வாங்கியுள்ளனர். அடுத்து தயாரிக்கவிருக்கும் சி -8 என்ற 8.5 மீட்டர்  படகிற்கான பதிவுகளும் தொடங்கிவிட்டன. விமானத்திலுள்ள தொழில்நுட்பங்களையும், மென்பொருட்களையும் மின்படகு தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். 




மின் வாகனங்கள்

மின் வாகனங்கள், ஏர் டாக்சி ஆகியவற்றில் செய்யும் உலகளவிலான முதலீடுகளும் அதிகரித்து  வருகின்றன. பிரான்ஸ் நாடு, பாரிஸ் நகருக்கு வெளியில் ஏர் டாக்சிக்கான பல்வேறு சோதனைகளை செய்து வருகிறது. இதில் வெற்றி கிடைத்தால், 2024ஆம் ஆண்டு அங்கு நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் கூட ஏர் டாக்சிகள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. 

தானியங்கி வாகனம்

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம், விமானத்தில் உள்ள ஆட்டோ பைலட் போலவே டிரைவ் பைலட் எனும் வசதியை உருவாக்கியுள்ளது. இதனை 13 ஆயிரம் கி.மீ. தூரம் காரை செலுத்தி சோதித்துள்ளது. இந்த வசதியின் மூலம் ஸ்டீயரிங் மீது கைகளை வைத்துக்கொண்டே இருக்க வேண்டிய வசதி இல்லை.  ட்ரைவ் பைலட் வசதியை இயக்கிவிட்டு அலுவலக விஷயங்களை பேசலாம், படம் பார்க்கலாம் என்று ஜெர்மனி கார் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்கா, சீனாவில் பைலட் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இக்கார்கள் நடப்பாண்டிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சோலார் பூங்கா

மத்தியப் பிரதேசத்தில் ஓம்காரேஸ்வரர் அணையில்  சோலார் பூங்கா அமையவிருக்கிறது. 600 மெகாவாட் திறன் கொண்ட பூங்கா இது. விரைவில் இதற்கான ஏலம் நடைபெறவிருக்கிறது. இந்த பூங்காவிற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதில் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய நிறுவனங்களும் இதன்மூலம் கவனம் பெறலாம். 2032ஆம் ஆண்டு புதுப்பிக்கும் ஆற்றல் இலக்கில் 60 ஜிகாவாட் இலக்கை எட்டவேண்டும் என்ற நோக்கத்தில் சோலார் பூங்கா திட்டம் உருவாகி வருகிறது. 

ஆதாரம்

green themes of 2022

vandana gombar

bloomberg 

-------------------

பிக்சாபே




கருத்துகள்