இந்தி, பஞ்சாபி, மலையாளத்தில் கலக்கும் புதிய(!) நடிகர்கள்!

 


நடிகர், பாடகர் - தில்ஜித் தோசன்ஞ்சி







அட்டகாசமான நடிகர்

தில்ஜித் தோசன்ஞ்சி

தில்ஜித் தோசன்ஞ்சி பஞ்சாபி மொழியில் முக்கியமான நடிகர். இப்போது இந்தி மொழி படங்களை, பஞ்சாப் மொழி படங்கள் வருகிறது என்றால் தள்ளி வைக்கும் அளவுக்கு சிறப்பாக தயாரிக்கிறார்கள். சந்தைப்படுத்தலும் அப்படித்தான். பஞ்சாபி மொழியில் தில்ஜித் நடித்த படங்கள் அனைத்துமே வசூல் மழை பொழிந்தவை. இவர் பாடி நடிக்கும் பாடல்களும் அப்படித்தான். பஞ்சாபி பாடல்களை மேற்கத்திய பாணியில் பாடுவது இவரது சிறப்பு அம்சம். 

இந்திப்படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். இவர் நடித்த அர்ஜூன் பட்டியாலா, குட் நியூஸ் ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை நடிப்பிற்காக பேசப்பட்டவை. பஞ்சாபி மொழியில் நடித்த ராக் ஹவுஸ்லா என்ற படம் தியேட்டர் வசூல் மட்டுமே இப்போதைக்கு 54 கோடிக்கும் அதிகம். இன்னும் இப்படம் அமேசானில் திரையிடப்படவில்லை. 

பிலாதூரில் பிறந்தவர் குருத்துவாராவில் உள்ள பஜனைகளைப் பாடி இசையைக் கற்றுக்கொண்டவர். 2011 ஆம் ஆண்டு தொடங்கி படங்களில் நடித்து வருகிறார். 

தில்ஜித்திற்கு பிராண்ட் நிறுவனங்களின் உடை என்றால் கொள்ளைப் பிரியம். வாங்கும் சம்பளத்தில் பாதியை உடைக்காக செலவழித்து அலமாரியில் பிராண்டு துணிகளாக வாங்கி அடுக்கி வருகிறார். 



நடிகர் ஷேன் நிகாம்




சுயேச்சையான கலைஞன்

ஷேன் நிகாம்

2007ஆம் ஆண்டு தொடங்கி மலையாளப் படங்களில் சிறு குழந்தை நடிகராக நடித்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்களில் நடித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கிஸ்மத் என்ற படத்தில் நடித்தார். படம் பைசா பெறவில்லை என்றாலும் ஷேனின் நடிப்பு அனைவருக்கும் பிடித்துப் போனது.  மது ஸ்ரீ நாராயணன் இயக்கத்தில் வெளியான கும்பளாங்கி நைட்ஸ் படம் ஷேனுக்கு முக்கியமான அடையாளம். இதில் பாபி என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவையும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. 

நடனத்தில் ஆர்வம் உள்ளதால், மேற்கத்திய நடனத்தை முறையாக கற்றுள்ளார். நடிப்பு மட்டுமல்ல சர்ச்சையும் ஷேனை சுற்றி வருகிறது. நடித்த மூன்று படங்களின் வெளியீட்டுப் பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என இவர் மீது தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்தனர். நடிகர் மோகன்லால்தான் ஷேனுக்கு உதவி செய்து தடையிலிருந்து மீட்டார். 

சிம்புவுக்கு அவரது குடும்பம் உதவுவது போல, இவருக்கு இவரது அம்மா உதவுகிறார். புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை அவரே பார்த்துக் கொள்கிறார்.



ஆயுஷ்மான் குரானா




சமூகத்தை கலவரப்படுத்தும் கலைஞன்!

ஆயுஷ்மான் குரானா

சினிமா மூலம் நாம் கல்வியைக் கற்றுக்கொடுக்க முடியும். இதனை சிறப்பான விஷயமாக நினைக்கிறேன். நாம் சமூகத்திற்கு திருப்பித்தர வேண்டிய விஷயங்கள் உள்ளன. மக்களை இயல்பாக இருக்கவிடாத படங்களை நான் செய்வதில் மகிழ்ச்சிதான் என வெளிப்படையாகவே ஒரு நடிகர் பேசுகிறார் என்றால் நினைத்து பார்க்க முடிகிறதா? ஆயுஷ்மான் குரானா பேசுவது மட்டுமல்ல அவர் நடிக்கும் படங்களின் கதைகளும் அப்படித்தான். 

தமிழில் சீ ஃப்ரூட் என்ற நடிகர் இருப்பாரே, அட்வைஸ் பேசிக்கொண்டு.... அவரை நினைக்காதீர்கள். ஆயுஷ்மானின் படங்கள் செய்தியை கொண்டிருந்தாலும் ரசிகர்களை ரசித்து பார்க்க வைக்கும்படியான சமாச்சாரங்களையும் கொண்டிருக்கிறது. அதுதான் அவரது படங்கள் வெற்றி பெறுவதற்கான காரணம். 

விந்தணுவை தானம் செய்யும் இளைஞன் - விக்கி டோனர், ஓரினச்சேர்க்கை காதல், சுப் மங்கள் ஜியாதா சாவ்தான், மாற்றுப்பாலினத்தவரை காதலிக்கும் பாடிபில்டர் - சண்டிகர் கரி ஆசிக், தலைமுடி வழுக்கையானதால் தாழ்வுணர்ச்சியில் தவிக்கும் இளைஞன் - பாலா என நடித்த அனைத்து படங்களுமே வேற லெவல் கதையைக் கொண்டவை. 

இவர் நடித்த ஆர்ட்டிக்கிள் 15 நட்சத்திரங்கள் கூட ஏற்று நடிக்க தயங்கும் மையக்கதையைக் கொண்டது. அந்தாதூன் இந்தியில் மகத்தான வெற்றி பெற்ற உளவியல் கதையம்சம் கொண்டது. பலவேறு விதமான பாத்திரங்களை ஏற்று நடித்து ஆச்சரியப்படுத்துவது குரானாவின் பாணி. 

குரானா இளம் வயதில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் மட்டையைச் சுழற்றியவர். இப்போது விராட் கோலி பற்றி படம் எடுத்தால் தான் அதில் கோலி பாத்திரத்தில் நடிக்க தயார் என சொல்லியிருக்கிறார். குரானாவால் எதுதான் முடியாது?

இந்தியா டுடே 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்