விண்வெளியை ஆக்கிரமிக்கும் செயற்கைக்கோள்!
புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் அதிகரித்து வருகின்றன. செயல்படாத செயற்கைக்கோள்களின் மோதலைத் தவிர்க்கவும், அதன் போக்குவரத்தைச் சீர்படுத்தவும் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் முயன்று வருகின்றன.
தற்போது உலக நாடுகளில் ஆய்வுக்காகவும், இணையச்சேவை சார்ந்தும் ஏராளமான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால் புவி வட்டப்பாதையில் ஏராளமான செயற்கைக்கோள்கள் சுற்றி வருவதால், புதிய செயற்கைக்கோள்களுக்கு இடமேயில்லை என்ற சூழ்நிலை உருவாகிவருகிறது. உலகநாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மைய பொறியாளர்கள் விண்வெளியில் இயங்கும், செயல்படாத செயற்கைக்கோள்களின் போக்குவரதை ஒழுங்கு செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 22ஆம் தேதி சர்வதேசி விண்வெளி மையத்திற்கு எச்சரிக்கை ஒன்று வந்தது. பூமிக்கு 400 கி.மீ . தொலைவுக்கு மேலே செயற்கைக்கோளின் பாகம் ஒன்று, விண்வெளி நிலையத்தை தாக்க வருவதாக ஆய்வாளர்கள் கூறினர். உடனே நிலையத்திலிருந்த ராக்கெட்டை உசுப்பி ஆய்வாளர்கள் மோதலிலிருந்து தப்பினர். 1999ஆம் ஆண்டு தொடங்கி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் வீரர்கள், செயலிழந்த செயற்கைக்கோள் பாகங்களால் பாதிக்கப்படுவது, 26 முறை நடந்திருக்கிறது.
ஐந்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை ஆயுள் கொண்ட செயற்கைக்கோள்கள், பலவும் செயலிழந்து போனாலும் கூட அப்படியே வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இவற்றில் மிகச்சில மட்டுமே பயன்பாடு முடிந்தவுடன் எரிந்துபோகின்றன. இதற்கு மாற்றாக திரும்ப பயன்படுத்தும் ராக்கெட்டுகளை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வடிவமைத்து வெற்றி கண்டுள்ளது. வட்டப்பாதையில் 9 லட்சம் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் பாகங்கள் உடைந்து சுற்றிவருவதாகவும், இதன் தோராய அளவு 1 செ.மீ.க்கும் அதிகம் என்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) கூறியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கைலார்க் நிறுவனம், பன்னிரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி விண்ணிலுள்ள செயற்கைக்கோள் போக்குவரத்தை கண்காணிக்க உள்ளது. “எங்களது அமைப்பின் பணி, ஏறத்தாழ பூமியில் சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போலத்தான்” என்று ஸ்கைலார்க்கின் இயக்குநர் ஸ்டீவர்ட் பெய்ன் கூறினார். ஸ்கைலார்க்கின் செயற்கைக்கோள்கள் கேமராக்கள் மூலம் சுற்றிவரும் செயலிழந்த செயல்படும் செயற்கைக்கோள்களை புகைப்படம் எடுக்கின்றன. இதன்மூலம் விண்வெளியில் உள்ள போக்குவரத்தை வரைபடமாக்கலாம். இதைப் பயன்படுத்தி, செயற்கைக்கோள் பாகங்கள் சர்வதேச விண்வெளி நிலையம் அல்லது இயங்கும் செயற்கைக்கோள்கள் மீது மோதுவதை தவிர்க்கலாம்.
கூடுதலாக உலக நாடுகளின் விண்வெளி அமைப்புகள், செயல்படாத செயற்கைக்கோள் குப்பைகளை கீழே கொண்டுவர அல்லது அழிக்க தனி விண்கலத்தை உருவாக்கி வருகின்றனர். ஐரோப்பிய விண்வெளி முகமை, கிளியர்ஸ்பேஸ் 1 என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இது விண்வெளியில் உள்ள தங்களது செயல்படாத பகுதிகளை உள்ளிழுத்து தன்னோடு சேர்த்து எரித்துவிடும். ஜப்பானிய நிறுவனமான ஆஸ்ட்ரோஸ்கேல், எல்சா டி என்ற விண்கலத்தை உருவாக்கி கடந்த மார்ச்சில் சோதித்தது. பூமியிலிருந்து 550 கி.மீ. தூரத்திற்கும் மேலேயுள்ள 17 கிலோவுக்கும் குறைவான எடையுடைய சோதனை செயற்கைக்கோள்களை சேகரித்து அழிப்பதே இதன் வேலை. இதுபோல கண்டுபிடிப்புகள் இருந்தாலும் கூட செயற்கைக்கோள்களை அனுப்புவதில் விதிமுறைகளை பின்பற்றாதபோது எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாது.
தகவல்
Science illustrated australia 2021
the race to clean up space junk (mikkel meister)
Science illustrated australia 2021
---------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக