ரத்தத்தை பின்தொடரும் கேங்ஸ்டர் குடும்பம்! - தி பவர் 2021- இந்தி

 


தி பவர் - வித்யுத் ஜாம்வால்



தி பவர்

மகேஷ் மஞ்ரேக்கர்


காட் பாதர் படத்தின் தழுவல் என கூறுகிறார்கள். மும்பையில் இருக்கும் அனைத்து  சட்டவிரோத செயல்களையும் வணிகத்தையும் தாக்கூர் குடும்பத்தினர் செய்கிறார்கள். இவர்களுக்கும் முறைகேடான வணிக சிண்டிகேட்டிற்கும் உள்ள சண்டையும், பழிவாங்கும் சம்பவங்களும்தான் கதை. 

சிண்டிகேட்டில் உள்ள ராணா, மும்பையில் நிழல் உலக ராஜாவாக இருக்கும் காளிதாசை நேரடியாக எதிர்க்க முடியாமல் மறைமுகமாக எதிர்க்க நினைக்கிறார். இதற்காக அவர் செய்யும் செயல்கள்தான் கதையை நகர்த்துகின்றன. 




கதை தொடங்கும்போது, காளிதாசின் மருமகன் தனது மாமனார் காளிதாசின் பொறுப்புக்கு வர ஆசைப்படுகிறார். இதைப்பற்றி பேசும்போது, காளிதாஸ் அங்கே வருகிறார். ரஞ்சித்தை அமைதிபடுத்தி அவருக்கு கோவாவில் ஹோட்டல் பிசினஸ் உள்ளது. அதைப்பார், நானும் உன்கூட வருகிறேன் என்கிறார். பிறகு கதை அப்படியே பின்னோக்கி செல்கிறது. 

காளிதாசின் மகன்கள் ராம்தாஸ், தேவிதாஸ், மகள் ரத்னா. இதில் ராம்தாஸின் மனைவியின் தம்பியைத்தான் ரத்னாவுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள், அவர்தான் ரஞ்சித். மாமனாரின் வீட்டிலேயே டேரா போட்டு அவரது இடத்திற்கு வரவேண்டும் என்பதுதான் பேராசை. 

இதற்கு தடையாகத்தான் இளைய மகன் தேவிதாஸ் வருகிறார். சிறுவனாக இருக்கும்போது பயந்த சுபாவம் கொண்டவராக இருக்கும் தேவி, இப்போது தைரியசாலியாக வளர்ந்திருக்கிறார். அவருக்கு காதலியும் இருக்கிறாள். தேவியின் அப்பா, காளிதாசிடம் வேலை செய்யும் அன்வர் பாயின் மகள் பரியைத்தான் தேவி காதலிக்கிறான். 

இதற்கு, காளிதாஸ் பெரிய எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் ராம்தாசின் மனைவி, அதாவது தேவியின் அண்ணி எதிர்ப்பு தெரிவிக்கிறாள். பரி வந்துவிட்டால் தேவிக்கு அனைத்து விஷயங்களும் கிடைத்துவிடும், பிறகு, தன் தம்பிக்கு என்ன மிஞ்சும் என கணக்கு போட்டு அன்வர் பாய், அவரது மகள் பரியை மெல்ல பேசிப் பேசி குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கிறாள். 


பரியாக ஸ்ருதி


இந்த நேரத்தில் காளிதாஸ் தாக்கூர் மீது ராணாவின் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடக்கிறது. போதைப்பொருள் விற்பதற்கு காளிதாஸ் அனுமதி கொடுக்கவில்லை என்பதற்காக டிகோஸ்டா, பிரான்சிஸ் ஆகியோருடன் சேர்ந்து ராணா சதி செய்கிறார். தனது அப்பா தாக்கப்பட்டதால், பரியுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் செய்யவிருந்த கல்யாணம் நின்றுபோக, தேவி தவித்துப் போகிறான். 

இந்த நேரத்தில் சரியாக யோசிப்பவன் தேவி மட்டுமே. மூத்த மகன் அண்ணனான ராம்தாஸ் முன்கோபம் கொண்டவன் ஒழிய யோசித்து செய்பவன் கிடையாது.  இதனால் தேவி மருத்துவமனைக்கு சென்று அப்பாவைப் பார்க்கிறான்.அப்போது அங்கு நடக்கும் கொலை முயற்சியைத் தடுக்கிறான். பாதுகாப்புடன் அப்பாவை வீட்டிற்கு கூட்டி வருகிறான். பிறகு குடும்பத்தில் நிறைய அதிகாரப் பிரச்னைகள் நடக்கிறது. 

இதில் அன்வர் பாய் கொல்லப்பட, அதனால் பொங்கி எழும் பரி, தனது வயிற்றில் இருக்கும் தேவியின் குழந்தை மீது சத்தியம் செய்து அவர்களது குடும்பத்தை கொல்வதாக கூறுகிறாள். தேவி, அவளது அப்பாவிடம் பேச மட்டுமே வரச்சொல்லுகிறான். ஆனால் அவரை அவன் கொல்லவில்லை. அதற்கு காரணம் யார் என்றும் அவனுக்கு தெரியவில்லை. இந்த நேரத்தில் அப்பாவை தாக்கியவர்களை கொல்லவேண்டும் என நினைக்கிறான். அதையும் செய்து முடிக்கிறான். ஆனாலும் பிரச்னை அதோடு முடிவதில்லை. 

அதிகாரம், பணம், சட்டவிரோத செயல்பாடுகள் அதற்கான பின்விளைவுகளை எப்படி திரும்ப தருகிறது. இதன் விளைவாக தாக்கூர் குடும்பம் எப்படி அழிவை சந்திக்கிறது என்பதுதான் படத்தின் மீதியுள்ள காட்சிகள். 

படத்தை நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள். வித்யுத்ஜாம்வாலுக்கும்,  ஸ்ருதிக்குமான காதல் காட்சியில் வரும் பாடல் தவிர வேறு எங்கும் பாடல் இல்லை. படம் வேகமாக ஒரு காட்சியிலிருந்து மற்றொரு காட்சிக்கு வேகமாக சென்றுகொண்டே இருக்கிறது. 

வித்யுத் ஜாம்வாலின் அனைத்து சண்டைக்காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது. காதலியுடன் நெருக்கம் காட்டும் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறார். உணர்வுரீதியான இறுதிக்காட்சியில் முகத்தில் உணர்ச்சி அந்தளவு இல்லை என்பதே குறை. படம் நெடுக வன்முறையும், ரத்தமும் மற்றொரு கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறது. 

ரத்த சரித்திரம் 

கோமாளிமேடை டீம் 





கருத்துகள்