காதலை சொல்லத் தயங்கும் கோபக்கார பெண்ணின் வாழ்க்கை! - வருடு காவாலேனு 2021
வருடு காவாலேனு
2021
தெலுங்கு - தமிழ் டப்
இயக்கம் லஷ்மி சௌஜன்யா
இசை, பின்னணி - விஷால் சந்திரசேகர், எஸ்.தமன்
படத்தின் சிறப்பு ரிது வர்மாவின் பாத்திரம் தான். இதனை இயக்குநரே பேட்டியில் கூட சொல்லிவிட்டார். இதில், பெண் பாத்திரமாக நாயகிக்குத்தான் அதிக முக்கியத்துவம் உள்ளது போல தெரியும். ஆனால் அப்படி கிடையாது. படத்தில் இரு பாத்திரங்கள் முக்கியமானவை. ஒன்று பூமி எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தும் இளம்பெண். அடுத்து, அவளை ஆகாயம் போல சுற்றி வளைக்க முயலும் பாரிஸிலிருந்து வரும் கட்டிடக் கலைஞன் ஆகாஷ். இவர்கள் இருவரின் காதல், ஈகோ, போட்டி, பொறாமை, ஆவேசம்தான் படமே.
காட்சிகளின் படி படத்தை அடுக்கினால் தான் படம் மட்டுமல்ல கதை சொல்வதுமே புரியும். பூமி, தரணி எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்துகிறாள். முழுக்க இயற்கைக்கு அதிக சேதம் விளைவிக்காத பொருட்களை வைத்து வீடுகளை கட்டுவதுதான் நோக்கம், லட்சியம், பேராசை இன்ன பிற என்று வைத்துக்கொள்ளுங்கள்.
பூமிக்கு, திருமணம் ஆகவில்லை. வயதும் 30 ஆகிவிட்டது. இதனால் அவளை வீட்டில் அம்மா கல்யாணம் செஞ்சுக்கோ என நெருக்குகிறாள். அப்பாவைப் பொறுத்தவரை கல்யாணம், காதல் எல்லாம் அவள்தான் முடிவு செஞ்சுக்கணும். இதில் நானென்ன செய்வது? என மனைவியின் புலம்பல்களிலிருந்து ஒதுங்கி நிற்கிறார். பூமியின் அம்மாவைப் பொறுத்தவரை மாப்பிள்ளை புகைப்படங்களை எடுத்து வந்து காட்டுவது, அவர்களை கஃபேயில் சந்திப்பது என பரபரப்பாக மகளுக்கு கல்யாணம் செய்துவைத்துவிட துடிக்கிறாள். பூமிக்கு பெண் பார்ப்பது, கேள்வி கேட்பது என்பதெல்லாம் பிடிப்பதேயில்லை. இதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்று சொல்லுகிறாள். அப்படித்தான் நடந்தும் கொள்கிறாள்.
அவள் அலுவலகத்தில் கடைபிடிப்பதெல்லாம் ராணுவ பள்ளிக்கு நிகரான விதிகளை... இதனால் வேலை செய்பவர்கள் அனைவருமே பிபி மாத்திரைகளை போட்டுக்கொண்டு வேலை செய்யும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். பூமி, சிம்பிளாக யாருக்கும் பொறுப்பில்லை அப்புறம் என்னதான் செய்கிறது என்கிறாள்.
இந்த நேரத்தில் பூமி இருக்கும் ஹைதராபாத்திற்கு பாரிசிலிருந்து கட்டுமானக்கலைஞர் தனது தொழில் விஷயமாக வருகிறார். அது வேறு யார் நாக சௌரியாதான். அதாவது ஆகாஷ். பூமிக்கும் ஆகாஷிற்கும் முக்கியமான தொடர்பு இருக்கிறது. இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பதும், நட்பு இருக்கிறது என்பதுதான். அது நட்பா, காதலா என்பதுதான் படத்தின் முக்கியமான பகுதி...
நெருக்கம் இல்லாதவர்களிடம் காச் மூச் என சத்தம் போடும் பூமி, தனக்கு பிடித்தவர்களிடம் தனக்கு தேவையானது என்னவென்று கூறுவதில்லை. அதை அவர்களே தெரிந்துகொள்ளவேண்டுமென நினைக்கிறாள். அதை புரிந்துகொள்ளாதபோது கடும் கோபம் கொள்கிறாள். அவர்களை வெறுக்கிறாள். இந்த குணம் வீடு தொடங்கி அவள் படிக்கும் கல்லூரி வரைக்கும் வருகிறது. இதனால் அம்மாவோடு இணக்கமாக பேச முடிவதில்லை. தனது மனதில் இருந்த காதலைக்கூ ட ஆகாஷிடம் சொல்ல முடிவதில்லை. இதனால் அவளது வாழ்க்கையும் அதை சார்ந்தவர்களும் நொந்து நூலாகிறது நாளுக்கு நாள்....
தெலுங்கு டைட்டிலை அப்படியே கூகுள் ட்ரான்ஸ்லேட் போட்டு தமிழ் டைட்டிலாக மாற்றியிருக்கிறார்கள். சன் நெக்ஸ்ட் பார்த்த அக்கறையில்லாத வேலை இது. ஆனால் படத்தின் உள்ளே வசனங்கள் பரவாயில்லை. சூழலுக்கு ஏற்ப, காட்சியின் அழுத்தத்தை உணர்த்துவது போலவே இருக்கிறது. உன்னோட ஃபீலிங்க்சுக்கு மட்டும்தான் மதிப்பிருக்கா? எனக்கு இல்லையா? என ஆகாஷ் இறுதியாக பேசுவது... தனது காதலை சொல்லும் நேரத்தில் ஆகாஷ் தான் பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை மணம் செய்துகொள்வதாக கூறும் காட்சியில் பூமி தன் மனம் திறந்து பேசும் காட்சி... இறுதியாக பூமியின் அம்மா அவளிடம் பேசும் உரையாடல் காட்சி.
மனம்போல மணமகன்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக