நகர இளைஞரை மயக்கும் இயற்கையின் பேரழகு! வனவாசி - விபூதிபூஷன் வந்தோபாத்யாய

 வனவாசி
விபூதிபூஷன் வந்தோபாத்யாய
விடியல்
ரூ.270

மொழிபெயர்ப்பு - த.நா.சேனாபதி

நகரவாசி ஒருவர், எப்படி வனத்துக்குள் வேலை செய்ய வந்து வனவாசி ஆகிறார் என்பதே கதை. 


தினந்தந்தி போல ஒருவரியில் கதையை இப்படி சொன்னாலும் படிக்கும்போது நாம் பார்க்கும் மனிதர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நாவல் முடியும் வரை புதிய மனிதர்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். நாவலின் புதிய பாணி என கொள்ளலாம். 

கல்கத்தாவில் விடுதி ஒன்றில் தங்கி வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்தான் கதை நாயகன். விடுதி மெஸ்சில் அக்கவுண்ட் வைத்து சாப்பிடுபவருக்கு, வேலை கிடைத்தால் தான் சாப்பாட்டுக்கடனை அடைக்க முடியும். இந்த நிலையில் நண்பர் அழைத்தார் என விழா ஒன்றுக்கு செல்கிறார். அங்கு நிம்மதியாக சாப்பிட்டுவரும்போது கல்லூரி நண்பர் ஒருவரைப் பார்க்கிறார். 

அவர் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் மூலம் பூர்ணியா எனும் காட்டுப்பகுதியில் உள்ள நிலங்களை கவனித்துக்கொள்ளும் வேலைக்கு செல்கிறார். நகரில் இருக்கத்தான் இளைஞருக்கு விருப்பம். ஆனால் வேலை வேண்டுமே என்பதற்காக ஜமீன் காரியாலயத்திற்கு செல்கிறார். அங்கு செல்வதற்கான பயணமே காரியாலய வாழ்க்கை  எப்படியிருக்கும் என்று சொல்லிவிடுகிறது. ரயில் நிலையத்தில் இறங்கி பல மணிநேரம் பயணித்துத்தான் வேலை செய்யும் இடத்திற்கு செல்கிறார். 

வங்காள இளைஞர் அங்கு ஏராளமான மனிதர்களை சந்திக்கிறார். இதில் பழங்குடிகள், கங்கோதர வேளாளர்கள், தீண்டக்கூடாத மக்கள், மைதிலி பிராமணர்கள் பல தரப்பு உண்டு. 

கதை என்று பார்த்தால் குறிப்பிட்ட இலக்கு நோக்கி நாவல் செல்லவில்லை. காடு, அதிலுள்ள ஸ்பைடர் லில்லி, தாமரை, கருநொச்சி, ஏழிலைப் பாலை, குளம், ஆறு, மகாலிகாரூப மலை, மோகன்புரா காடுகள் என ஏராளமான தகவல்களை அழகுடன் கூறுகிறார் ஆசிரியர். உள்நாட்டு அழகை கூறுவதோடு மேல்நாட்டு எடுத்துக்காட்டுகளையும் சில இடங்களில் பயன்படுத்துகிறார். 

வயதானவரை மணம் செய்துகொண்டு இரண்டாவது மனைவியாக வாழும் மஞ்சி, பழங்குடிகளை ஆளும் ராஜாவம்சம் என தன்னை நினைத்துக்கொள்ளும் பானுமதியின் குடும்பம், அவர்களின் பழக்கவழக்கம், சமஸ்கிருத ஆசிரியரான மடுக நாதன், பார்க்கும் இடத்தில் எல்லாம் தாவரங்கள், கொடிகளை நட நினைக்கும் யுகல், பித்தவெடிப்பு காரணமாக ஒதுக்கப்படும் கிரிதாரி லால், தாசிக்குடும்பமாக இருந்தாலும் நேர்மையாக வாழ நினைக்கும் குந்தா, வேளாளர்களை ஏமாற்ற நினைக்கும் ஆள்படை கொண்ட ராஜபுத்திர மனிதர்கள் என ஏகப்பட்ட மனிதர்கள் நூலில் இருக்கிறார்கள். அத்தனை பேரும் காட்டிலுள்ள பல்வேறு மிருகங்களை நினைவுபடுத்தும் இயல்பைக் கொண்டிருக்கிறார்கள். 

வங்காள இளைஞரான கதை சொல்லியைப் பொறுத்தவரை கருணையும் நெகிழ்வுத்தன்மையும் கொண்டவர். அவர் அனுப்பி வைக்கப்பட்டதே காடுகளை அழித்து குத்தகையை உறுதிசெய்து மக்களை குடிவைப்பதுதான். ஆனால் அவரோ காடுகளின் அடர்த்தியைப் பார்த்து செய்யவேண்டியதை தள்ளிப்போட்டு செய்ய விரும்பியதை செய்கிறார். காட்டில் மலர்களை பூக்க வைக்க ஏராளமான செடிகளை யுகலுடன் சேர்ந்து நடுகிறார். 

பூர்ணியா பகுதியில் பெரும்பாலும் விளைவது சோளமும், பயறும், கடலையும் தான். உணவு என்பது வரகரிசி, பொரி மாவு உருண்டை என இருக்கிறது ஜமீன் காரியாலயத்திற்கு போனால் சோறு என்பதற்காகவ பல கி.மீ. தூரம் பழங்குடிகள், வேளாளர்கள் நடந்து வருகிற சம்பவம், வாசிக்கும்போதே வேதனை தருகிறது. 

இன்னொன்று, கிராமத்தில் காலரா பாதிப்பு பரவி மக்கள் இறப்பது. மக்களை காப்பாற்ற மூலிகை வைத்தியர் ராஜூவுடன், வங்க இளைஞர் செல்கிறார். ஆனாலும் நிலைமை கைமீற காப்பாற்ற நினைத்த மக்கள் இறந்துபோகிறார்கள். அதில் ஒரு பெண் சாப்பிட வைத்திருந்த ஈ மொய்த்த சோறு பற்றி இளைஞர் சொல்லுவது முக்கியமானது. 

வங்காள இளைஞர் ஆறு ஆண்டுகள் காட்டுப்பகுதியில் தங்கி வேலைபார்க்கிறார். பிறகு, காட்டை அழித்து குடியானவர்களை குடியேற்றியபிறகு கல்கத்தாவிற்கு செல்வதோடு கதை நிறைவு பெறுகிறது. ஆறாண்டு அனுபவங்களை வாசிக்கும்போது, வாசகர்களுக்கு காட்டுக்குள் இருக்கும் உணர்வு உருவாகிறது. காடுகள், செடிகள், கொடிகள், பூக்கள் மலைகள் கூடவே குளிர்ந்த வெளிச்சத்தை பொழியும் நிலவு என நினைத்து மகிழ, மகிழ்ச்சியில்  திகைக்க ஏராளமான இனிய சம்பவங்கள், விவரிப்புகள் நூலில் உள்ளன. 


இயற்கையின் பேருரு

நன்றி

திரு. வினோத் பாலுச்சாமி

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்