அமெரிக்க, ஐரிஷ் மக்களுக்கு இடையிலான அதிகாரப்போர்! - கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் - மார்ட்டின் ஸ்கார்சி

 













கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க்
மார்ட்டின் ஸ்கார்ஸி
2002




அமெரிக்கத் திரைப்படம். கருப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் நடைபெறுகிறது. அங்கு, வாழும் அமெரிக்கர்களுக்கும் புதிதாக குடியேறும் ஐரிஷ் மக்களுக்குமான யார் நிலம் இது என்ற சண்டைதான் படம். 

நியூயார்க் நகரில் ஃபைவ் பாய்ண்ட்ஸ் குடிசைப்பகுதியில் வாழும் பில் என்பவர்தான் ஐரிஷ் மக்களை எதிர்க்கும் குழுவுக்கான தலைவர். இவருக்கு தொழிலே பன்றிக்கறி வெட்டுவதுதான். அப்படியே பன்றியை குத்தி இறுதியில் மனிதர்களை குத்திப்போடும் ரவுடி ஆகிறார். இவருக்கென தனி குழுவே உருவாகிறது. 

நகரில் நடக்கும் அனைத்து தண்டால், வழிப்பறி, கொள்ளை என அனைத்துக்குமே கமிஷன், பர்சென்டேஜ் வந்தே ஆகவேண்டும். அப்படி வராதபோது கோடாரி சம்பந்தப்பட்ட ஆளின் முதுகில் பதிந்திருக்கும் அல்லது குறுவாள் வயிற்றில் குத்தியிருக்கும். இந்த நிலையில் சில பல ஆண்டுகளுக்கு முன்னர், ஐரிஷ் மக்களுக்காக ஒரு தலைவர் - பிரிஸ்ட் வாலன் போராடி சாகிறார். அவரை பில் தான் கொல்கிறான். அதற்குப் பிறகே அந்த பகுதியில் முழுக்க பில்லுக்கு அடிபணிகிறார்கள். ஐரிஷ் ஆட்கள் வேறுவழியின்றி பில்லை ஏற்கிறார்கள். 

தனது அப்பாவை கொன்ற பில்லை பழிவாங்க அவரது மகன் ஆம்ஸ்டெர்டாம் (டிகாப்ரியோ) வருகிறான். சிறுவயது நண்பனைச் (ஜானி) சந்திக்கிறான். நண்பன் பில்லிடம் திருட்டு வேலைகளைசெய்து வருகிறான். தனது நண்பன் என ஆம்ஸ்டெர்டாமை அறிமுகப்படுத்த பில்லும் அவனது இறந்தகாலம் பற்றி அறியாமல் அவனை நம்புகிறான். ஆம்ஸ்டர்டாமுக்கு இயல்பாகவே காசு சம்பாதிப்பதில் வெறியும் வேகமும் இருக்கிறது. இதை பில் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டுவிடுகிறான். எனவே எங்கு சென்றாலும் ஆம்ஸ்டர்டாமை கூடவே கூட்டிச்செல்கிறான். ஆம்ஸ் கொடுக்கும் ஆலோசனைகளும் அவனது வணிகம் பெருக உதவுகிறது. இந்த நிலையில்தான் பிக்பாக்கெட் அடிக்கும் பெண்ணான ஜென்னியைப்  ஆம்ஸ் பார்க்கிறான். அவளின் இயல்பு அவனை ஈர்க்கிறது. ஆனால் அவளுக்கும் முன்னரே, ஆம்ஸின் நண்பன் ஜானி அவளை காதலிக்கிறான். ஆனால் அவளோ அவனை பெரிதாக மதிப்பதே இல்லை. 

இந்த நிலையில் ஒரு நடன நிகழ்ச்சியில் ஜெனி, ஆம்ஸை தன்னுடன் நடனமாட தேர்ந்தெடுக்கிறாள். அது ஜானியை கடுமையான பொறாமையில் தள்ளுகிறது. பில்லுடன் ஆம்ஸ் நெருக்கமாக இருப்பதை அறிந்தவன், அவனைப் பற்றி பில்லிடம் உண்மையைச் சொல்ல பில் முகம் இறுகுகிறது. பிறகுதான் படத்தில் அடிதடிகள் சூடுபிடிக்கின்றன. 

படத்தின் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சி, கேங்க்ஸ் ஆப் நியூயார்க் படத்தை உருவாக்க இருபது ஆண்டுகள் உழைத்திருக்கிறார். 1927இல் எழுதப்பட்ட கட்டுரை நூலான கேங்க்ஸ் ஆப் நியூயார்க் என்பதன் திரை வடிவம்தான் படம். 

படத்தின் இறுதிக்காட்சி முக்கியமானது. பைவ் பாய்ண்ட்ஸ் குடிசைப்பகுதியில் சண்டை போட ஆம்ஸூம், பில்லும் தயாராக நிற்க உள்நாட்டுப் போர் தீவிரமாகிறது. அதற்கு இடையில் இருதரப்பும் மாட்டிக்கொள்கிறார்கள். சொன்னபடி ஆம்ஸ் அந்த நிலையிலும் பில்லை கத்தியால் குத்திக்கொல்கிறான். ஜென்னி கலிபோர்னியாவுக்கு தப்பிச்செல்ல முயன்று அடிபட்டு பிறகு ஆம்ஸைத் தேடி வருகிறாள். இருவரும் நியூயார்க் நகரை விட்டு வெளியேறுவதோடு திரைப்படம் நிறைவு பெறுகிறது. 

படத்தின் கதை, திரைக்கதை, பில்லின் நடிப்பு (டேனியல் லூயிஸ்),மதம் அரசியலோடு எப்படி கலந்திருக்கிறது என்பதைக் காட்டும் காட்சிகள், கருப்பினர்களை பாதிரிகள் தேவாலயத்திற்குள் விடக்கூடாது என மிரட்டுவது, லிங்கனுக்கு எதிராக வெள்ளையர்கள் பேசும் காட்சி என நிறைய விஷயங்களை ரசிக்கும்படி உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். 

படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு குடிசைகளும், சுருட்டும், அழுக்கான வீடுகளும், அழுக்கு உடையணிந்த மக்களையும் தவிர வேறு எதையும் உங்களால் யோசிக்க முடியாது. எந்த கிராபிக்ஸூம் இல்லாமலேயே படத்தை உணர்வுரீதியாக இணைந்து பார்க்க முடியும். அமெரிக்காவில் இன்றுள்ள அனைத்து பிரச்னைகளுக்குமான வேர்கள் எங்கிருந்து நீள்கின்றன என்பதை படத்தை நன்கு உணர்ந்து பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். 

கோமாளிமேடை டீம் 








 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்