காப்புரிமைப் போர்!

 

 
நிறுவனத்தை முதன்முதலில் ஸ்டார்ட்அப்பாக தொடங்குபவர், அதற்கான கொள்கை, லட்சியத்தை உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் சுமப்பார். மற்றவர்கள் இதை அப்படியே பின்பற்றுவார்கள். அந்த வகையில் ஹூவாவெய் நிறுவனத்தில் புகழ்ச்சிக்கு எந்த மரியாதையுமில்லை. உழைத்தே ஆகவேண்டும். தங்களை நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு உண்டு. நிறுவனத்தின் பங்குகளும் கூடுதலாக வழங்கப்படும். 
நிறுவனம் எதற்கு தொடங்கப்படுகிறது? அதன் லட்சியம் என்ன? நினைத்த லட்சியத்தை சாத்தியப்படுத்துமா என்பதற்கான பதில்களே தேடிக் கண்டுபிடிப்பது முக்கியம். அப்படி இல்லாதபோது நிறுவனம் விரைவில் டைட்டானிக்காக தொழில்துறையில் சவால்களை சந்திக்க முடியாமல் மூழ்கிவிடும். இந்த வகையில் ஹூவாவெய் தனது இலக்குகளை அறிந்தேயுள்ளது என்றார் ரென். அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கவேண்டும் என்பதுதான் ஹூவாவெய்யின் லட்சியம்.
 
அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு காரணமாக குவால்காம், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் மென்பொருள், வன்பொருள் சேவைகளை ஹூவாவெய்யிடமிருந்து விலக்கிக்கொண்டனர். இதனால் உங்களுக்கு நஷ்டம்தானே என சிஎன்பிசி சேனல் பேட்டியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். ”ஒரு விமானம் பறக்கும்போது எதிரிகளால் சுடப்படுகிறது. பல்வேறு பாகங்களில் அடிபடுகிறது. ஆனால் எஞ்சினில் எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் ஹூவாவெய்யும் அப்படித்தான். குண்டு துளைத்த பாதிப்பை மெல்ல சரி செய்து வருகிறோம் ”என்று துணிச்சலாக புன்னகை மாறாமல் பேசினார் ரென்.
 
சிலர் அமெரிக்க, சீன அரசுகளுக்கு இடையிலான வர்த்தகப் போரில் அடமானப் பொருள் போல ஹூவாவெய் மாறிவிட்டது என கூறினர். ஆனால் ரென் அதை தனது செயல்பாடு மூலமாகவே மறுக்கிறார். அமெரிக்கா நீதித்துறையை நம்புவதாக கூறிய ரென், வழக்குகளை தனியாகவே நிறுவனரீதியாகவே சந்திப்பதாக கூறிவிட்டார். ”அமெரிக்க அரசு கூறியதன் பேரில், அமெரிக்க நிறுவனங்கள் எங்களுக்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டன. நாங்கள் எங்கள் நாட்டு அரசிடம் இதற்கு உதவி கேட்க போவதில்லை. எங்கள் போக்கில் நாங்கள் செயல்பட்டு வழக்குகளை சந்திப்போம் ”என கூறினார் ரென்.
 
இந்த விவகாரத்தில் நாம் கவனிக்கவேண்டியது, அமெரிக்காவில் உள்ள ஹூவாவெய் நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கால் அந்த நிறுவனம் பெரும் வருமான இழப்பை சந்தித்தது. சந்தித்து வருகிறது. ஆனால் இதற்காக எப்போதுமே அமெரிக்காவை ரென் குறை கூறவில்லை. இதை டைம், பிபிசி சிஎன்பிசி என எந்த சர்வதேச ஊடக நேர்காணலிலும் பார்த்து உறுதி செய்துகொள்ள முடியும்.
 
இப்படிப்பட்ட சவாலான சூழலிலும், இதைப்பயன்படுத்தி நாங்கள் எங்களுக்குத் தேவையான சிப்களை, மென்பொருட்களை உருவாக்கி வருகிறோம் என்று பதில் சொன்னார் ரென். இந்த மனநிலையை உருவாக்கிக்கொண்ட தொழிலதிபர் தான் பெருந்தொற்று, பொருளாதார சீர்குலைவு என ஏதாகிலும் சமாளித்து வெல்ல முடியும். தொழில்முனைவோர் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பண்பு இது.
 
ஹூவாவெய், சீன நாட்டை தாயகமாக கொண்டது. ஆனால், நிறுவனத்தின் நிர்வாகம், விநியோகம், செயல்பாடு என அனைத்துமே அமெரிக்க நிறுவனங்களைப் போன்றதுதான். அவர்களின் உற்பத்தி, தொழில்முறைகளையே ஹூவாவெய் பின்பற்றுகிறது. தொடக்கத்தில் ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்துதான் ஸ்விட்ச் அமைப்புகளை சுயமாக உற்பத்தி செய்யக் கற்றனர். ஆனால் வெளிநாடுகளில் சென்று தொழில் செய்யும்போது நிலைமை மாறியது. பிற நிறுவனங்களுடன் இணைந்து வேலை செய்யும்போது, அவர்களுக்கும்  தனக்கும் என்னவிதமான லாபம் என்பதை பேசித்தான் ஹூவாவெய் செயல்பட்டது.
 
இந்த நேரத்தில் கூட்டுறவு வைக்கும் நிறுவனங்களை ஒழித்துக்கட்டிவிடும் என ஹூவாவெய் நிறுவனத்தின் மீது அவதூறு உருவானது. ஆனால் ரென் அதைப்பற்றி கவலைப்படவில்லை. தொழில் உலகில் இதுபோல பேசுவதும், இணைந்து செயல்பட்ட நிறுவனங்களே போட்டியாளராக மாறுவதும் இயல்புதான் என வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
 
2008ஆம் ஆண்டு ஹூவாவெய் நிறுவனம், அறிவுசார் காப்புரிமையை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்காக பெற்றது. ஆனாலும் நிறுவனத்தில் அதன் பொருட்டு பெரிய மகிழ்ச்சியோ ஆரவாரமோ இல்லை. காரணம், அதில் என்ன வருமானம் கிடைக்கும் என்பது இன்னும்  தெரியவில்லையே. பத்து பில்லியன் டாலர்களை அதாவது மொத்த வருமானத்தில் பத்து சதவீதத்தை அன்றைய காலகட்டத்தில் ஹூவாவெய் ஆராய்ச்சிக்காக செலவு செய்து கொண்டிருந்தது. அதன் பொருட்டு நிறைய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டன.
 
பார்ச்சூன் இதழின் 500 நிறுவனங்கள் பட்டியலில் ஹூவாவெய் இடம்பெற்றதும் அப்போதுதான் நடந்தது. ஆனால் அதில் இடம்பெறாமல் இருக்க ஹூவாவெய் பெரு முயற்சி செய்தது. எதற்கு என்கிறீர்களா? இதில் இதுவரை இடம்பெற்ற நிறுவனங்கள் அனைத்துமே சீக்கிரம் காணாமல் போய்விட்டன. எனவே, ஹூவாவெய்க்கு அதுபோல சோதனை வரக்கூடாது என ரென் நினைத்தார்.
 
அந்த நேரத்தில் ஹூவாவெய் உலக சந்தையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. அதேநேரம்,  தொழில்நுட்ப காப்புரிமை தொடர்பாக ஏராளமான கடிதங்களும் ரென்னின் மேசைக்கு வரத்தொடங்கியது. ஹூவாவெய் தங்களுடைய தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்துகிறது. எனவே, தங்களுக்கு குறிப்பிட்ட தொகையை தரவேண்டும் என மிரட்டி கடிதங்கள் வந்தன. ஹூவாவெய், யாருடைய தொழில்நுட்பத்தையும் திருடாத போதும் மிரட்டல்கள் இப்படி தொடர்ந்தன. க்வால்காம் நிறுவனத்தின் வன்பொருட்களுக்கு ஹூவாவெய் 600 மில்லியன் டாலர்களை ராயல்டியாக கொடுத்து வந்தது. ஓராண்டுக்கான உரிமத்தொகை இது. அந்த காலகட்டத்தில் வேறு எந்த சீனக் கம்பெனியும் இந்தளவு பெரிய தொகையை உரிமத்தொகையாக கொடுக்கவில்லை.
 
“காப்புரிமை வழக்குகளைப் பொறுத்தவரை அதனை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்வதுதான் அப்போதைய நடைமுறை. நீங்கள் ஒருவருடைய தொழில்நுட்பத்தை இலவசமாக பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக தொகை அல்லது உங்களின் காப்புரிமை நுட்பத்தை விலையாக கொடுக்கவேண்டும். இப்படித்தான் இத்துறையில் மேற்குலக எதிரி நிறுவனங்களுக்கு இடையில் சமாளித்தோம். அது கடினமான போராட்டம்தான் ” என்றார் ரென்.
 
ஹூவாவெய் தொடக்க காலத்தில் வாய்ப்புகளை பயன்படுத்தி வேகமாக முன்னேறும் வேட்கையில் இருந்தது. ஆனால் பின்னாளில், பிற நிறுவனங்களோடு சமரசம் செய்துகொண்டு இரு தரப்பும் வெற்றி பெறும்படி நிதானமாக நிலைத்து தன் காலடிகளை முன்னே எடுத்து வைக்கத் தொடங்கியது. ஐபிஎம் 3காம், சைமன்டெக், மோட்டரோலா ஆகிய நிறுவனங்களோடு இணைந்து பல்வேறு கூட்டு ஆய்வு நிறுவனங்களை உருவாக்கியது. அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் ஆய்வு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த செயல்பாடு மூலம் தங்களின் அறிவு மற்றும் பொருள் வளத்தை பிற நிறுவனங்களோடு ஹூவாவெய் பகிர்ந்துகொண்டது. இந்த நடவடிக்கை உலகளவில் ஹூவாவெய்க்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க உதவியது.
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்