புல்டோசர் சென்றபிறகு வாழ்க்கை என்னவானது?

 பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், மதம் மாறி திருமணம் செய்தால் போதும். உடனடியாக மாநில அரசு அதற்கான தண்டனையை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இன்ஸ்டன்டாக வழங்கி விடுகிறது. இன்றுதான் இன்ஸ்டன்ட் உப்புமா, பொங்கல் என வந்துவிட்டதே நீதி மட்டும் ஏன் தாமதமாக கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. வீடு இடிக்கப்பட்ட பிறகு நீதிமன்றம் வழக்கை விசாரித்து இடிக்கப்பட்டது சரியா அல்லது தவறா, ஊடக கருத்துக்கணிப்பு, மக்கள் கருத்து என என்ன செய்யலாம் முடிவு செய்யப்படுகிறது. பாஜக அரசின் இந்த முன்மாதிரி செயல்பாட்டால் நீதிமன்றத்தின் சுமை பெரும்பாலும் குறைந்து வருகிறது. 

ஜஹாங்கீர்புரி


இங்கு நூர் ஆலம் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் வாழ்கிறார். நூர் ஆலம், கால்நடைகளுக்கான தீவனத்தை தயாரித்து அருகிலுள்ள பால்ஸ்வா பால் பண்ணைக்கு தருவதுதான் முக்கியமான வேலை. இவரது கடை இருக்கும் கட்டிடத்தை நகர நிர்வாகம் ஆக்கிரமிப்பு என சொல்லி இடித்து தரைமட்டமாக்கிவிட்டது. இதனால் நூர் ஆலம் தனது வாழ்க்கையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கியிருக்கிறார். இதற்கு மனைவியின் நகைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். நகைகளை அடகு வைத்து 20 ஆயிரம் பெற்றுத்தான் மீண்டும் தொழிலைத் தொடங்கவிருக்கிறார். 

டெல்லியில் ஏப்ரல் 16 அன்று ஹனுமான் ஜெயந்தி விழா அன்று நடைபெற்ற கலவரம்தான் நூர் ஆலமின் வாழ்க்கையில் புல்டோசரை அழைத்து வந்தது. உருவாக்குவதை விட அழிப்பது எளிதானதுதானே? இப்படித்தான் நூர் ஆலமின் கடை உருக்குலைத்து அழிக்கப்பட்டது. புல்டோசரை ஆலம் தடுக்க முயலும் அவலமான காட்சியை பல லட்சியம் இந்து இந்தியர்கள் பார்த்து மகிழ்ந்தனர். 

நூர் ஆலம் ஒருவகை என்றால் ஷேக் அக்பர் கதை வேறுவிதமானது. சோகம் ஒன்றுதான். இவர் குளிர்பானங்களை விற்று மாதம் 15 ஆயிரம் சம்பாதித்து வந்தார். கலவரம் காரணம்  என்று சொல்லி ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் ஷேக் அக்பர் கடை வைத்திருப்பதை நகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து தவறை சரி செய்தனர். இதனால் ஷேக்கின் வாழ்க்கை பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டது. கடை இடித்து தள்ளப்பட்டதால், தள்ளுவண்டியில் பொருட்களை வைத்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அடுத்து, பள்ளி சென்ற தனது மூத்தமகனையும் வேலைக்கு செல்லச் சொல்லியிருக்கிறார். அடுத்து இளைய மகனையும் பள்ளியிலிருந்து நிறுத்தவிருக்கிறார். பின்னே தினசரி ரூ.300 மட்டுமே கிடைத்தால்  ஒருவர் எப்படி சமாளித்து நகரில் வாழ்வது? 


போபால் - ஜபல்பூர்

இங்கு நடந்த கதை வேறுவிதமானது. மதமாற்றத் திருமணம் ஆணின் குடும்பத்தை அதன் எதிர்காலத்தை உருக்குலைத்துவிட்டது. இனி மீள எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?  அப்துல்லா ஹலீம் கான், மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி நகரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். ஆனால் அவரது மகன், இந்து பெண் சாக்சியை காதல் செய்து வீட்டை விட்டு ஓடிச்சென்று மணம் செய்துகொண்டார். மகளை, ஹலீம் கானின் மகன் கடத்திவிட்டார் என புகார் செய்ததும் காவல்துறையும் நகர நிர்வாகமும் புல்டோசரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டனர். பெண்தரப்புக்கான நியாயத்தை வீட்டை இடித்து ஹலீம்கான் குடும்பத்தினரின் எதிர்காலத்தை அழித்து வழங்கியுள்ளனர். 

ஏப்ரல் 4 அன்று ஹலீம் கான் மகன் ஆசிப் மீது வழக்கு பதியப்பட்டது. அடுத்த நாள் நகர நிர்வாகம், ஹலீம் கானின் பத்து அறைகள் கொண்ட வீடு, ஆசிப்பின் அண்ணன்  கடை ஆகியவற்றை இடிப்பதற்காக உத்தரவை வழங்கிவிட்டது. ஏப்ரல் 7, 8 ஆகிய நாட்களில் ஆசிப்பின் கடையும் அடுத்த நாளில் அவரது தந்தை  ஹலீம் கானின் வீடும் இடித்து நொறுக்கப்பட்டது. அரசு நீதிமன்றத்தில் மே 31ஆம் தேதி தெரிவித்த மனுப்படி, ஹலீம் கான் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வாழ்வதாக கூறியது. 

இந்தியாவில் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதும், அதன் காரணமாகவே பழிவாங்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கு நவீன கருவியாக புல்டோசர் மாறியுள்ளது. 

டைம்ஸ் ஆஃப் இந்தியா 

ஹிமான்ஸூ தவான்

அசுதோஷ் சுக்லா - சித்தார்த் பாண்டே- அனிமேஷ் ஜெயின்

Thanks

Cartoonist Manjul


 கருத்துகள்

பிரபலமான இடுகைகள்