ஊடகங்களைப் பயன்படுத்தி நீதியின் முதுகெலும்பை முறிக்கும் அதிகார அரசியல்- ஜனகனமண -2022

 






ஜனகனமண

பிரிதிவிராஜ் சுகுமாரன் (நடிப்பும், தயாரிப்பும்)

மம்தா மோகன் தாஸ் 

இசை - ஜேக்ஸ் பிஜாய் 

 





கல்லூரி பேராசிரியர் சபா, வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்படுகிறார். அவர் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பணியாற்றி வருகிறார். அவரின் இரங்கல் கூட்டத்தை கூட  அதன் தலைவர் விட்டேத்தியாக நடத்துவதோடு அவமானப்படுத்தி பேசுகிறார். இதனால் பல்கலைக்கழகம் முழுக்க போர்க்களமாகிறது. காவல்துறை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து தாக்க ரணகளமாகிறது சூழ்நிலை. இதை விசாரிக்க ஏசிபி சாஜன் குமார் நியமிக்கப்படுகிறார். சபா என்ற பெண்ணைக் கொன்றவர்களை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை. 

படத்தின் நாயகன் சாஜன் குமாராக நடித்துள்ள சூரஜ் வெஞ்சரமூடுதான். தொடக்க காட்சியில் பிரிதிவிராஜை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். அதற்குப் பிறகு தொடரும் காட்சிகளில் சபாவின் வழக்கு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு, பிரிதிவிராஜ் திரையில் வருகிறார். முதல்முறை வந்தது போல இளமையாக அல்ல. மத்திய வயது ஆளாக, ஒரு கால் செயலிழந்தவராக , வழக்குரைஞராக இருக்கிறார். படத்திற்கு இரண்டாவது பாகத்திற்கான முன்னோட்டத்தையும் கொடுத்து விட்டார்கள். நாம் ப்ரீக்குவல், சீக்குவல் விவகாரத்தைப் பற்றி ஏதும் பேச வேண்டாம். 




சூரஜ் வெஞ்சரமூடு படத்தில் செய்யும் என்கவுன்டர் காட்சி, தெலங்கானாவில் டாக்டர் பெண்ணை கொன்றதாக நான்கு பேர் என்கவுண்டர் செய்யப்பட்டதை நினைவூட்டுகிறது. பொதுவாக எதற்கு இதுபோல சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதை இயக்குநர டிஜோ ஜோஸ் பிரமாதமாக காட்சிபடுத்தியிருக்கிறார். 

போலியான உணர்ச்சிகளை ஊடகங்கள் உருவாக்கி மக்களை எப்படி திசைமாற்றுகின்றன. உண்மை எப்படி இருளில் அமைதியாக இருக்கிறது, உண்மைக்காக போராடுபவர்கள் அந்த அதன் பொருட்டே அவமானப்படுத்தப்பட்டு குடும்பத்தை இழந்து உடல் ஊனமாகி வாழ்வதையும் படத்தின் கதாபாத்திரங்கள் கலங்கடிக்கும்படி காட்சிபடுத்தியுள்ளனர். 

படத்தின் பெரும்பகுதி வெளிப்புறங்களிலும் முக்கியமான பகுதி, நீதிமன்றத்திலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. அதாவது, சபா என்ற வழக்கு பற்றிய விவாதக்காட்சி. 

பல்கலைக்கழகங்களில் நிலவும் சாதி, மத பாரபட்சங்கள் மீது மட்டுமல்லாமல் ஒருவன் வாழுமிடத்தை, நிறத்தை வைத்து அவன் குற்றம் செய்பவன் என முடிவு செய்வது, கோபத்தால் கும்பலாக சேர்ந்து தாக்கி அடித்துக்கொல்வது என நிறைய விஷயங்களை வெளிப்படையாக படம் பேசுகிறது. இதைப்பற்றி உணர்ச்சி பொங்க பிரிதிவிராஜ், நீதிமன்றத்தில் பேசுகிறார். ஓரிடத்தில் நீங்கள் நீதிமன்றத்தில் எனக்கே சவால் விடுகிறீர்களா என நீதிபதி கேட்கும்போது, ஆம், அதை என்னால் செய்யமுடியும். செய்வேன் என்கிறார். ஏன் அந்தளவு துடிப்பாக வாதிடுகிறார் என்பதே கதையின் முக்கியமான பகுதி. 

உண்மை என்பது என்ன, அதை எப்படி நம்புகிறோம், ஊடகங்களின் செயல்பாடு, அதன் பின்னுள்ள அரசியல் என நிறைய விஷயங்களை வசனங்களில் பேசியிருக்கிறார்கள். காட்சிகளாக சூரஜ் செய்ததை முன்னும் பின்னுமாக காட்டும்போது, முதலில் சரியாக தெரிந்த விஷயமே நமக்கு ஆகா, தப்பாச்சே இது என தோன்றுகிறது. அந்தளவு படம் அழுத்தமாகவும், செம்மையாகவும் தொகுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் அழுத்தத்தை, சோகத்தை, கோபத்தை நமக்கு கடத்த ஜேக்ஸ் பிஜோய் முயல்கிறார். இது அனைத்து காட்சிகளிலும் பயனளிக்கவில்லை. 

குரலற்றவர்களுக்கான தேசவாழ்த்து பாடல்


கோமாளிமேடை டீம் 











கருத்துகள்