அப்பாவின் வெறுப்பால் குடும்பத்தை விட்டு தனி மனிதனாகும் சத்யம்! சத்யம் -2003
சத்யம்
சுமந்த் அக்கினேனி
படத்தின் தலைப்புதான் நாயகனின் குணம். அவன் உண்மை சொல்லும் சந்தர்ப்பம் எல்லாம் தவறாகவே போகிறது. இதனால் அவன் வீட்டை விட்டு வெளியே போய் வாழும்படி ஆகிறது. பிறரின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்யும் குணம், அவனுக்கு நான்கு நண்பர்களை சம்பாதித்துக் கொடுக்கிறது. இருவர் அவனது அறையில் தங்கி நண்பர்களானவர்கள், மீதி இருவர்களில் ஒருவர் ஜோதிடர், மற்றொருவர் இவர்கள் தங்கியிருக்கும் அறைகளின் உரிமையாளர்.
படம் நெடுக நான்கு நண்பர்கள் சுமந்திற்கு எப்பாடு பட்டேனும் உதவுகிறார்கள். அவர்களுக்கும் சுமந்த் பார்ட்டி கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். விடுங்கள் கதை பார்ட்டி பற்றியது அல்ல.
சத்யத்தை நம்பும் ஒரே நபர், அவனது தங்கை மட்டும்தான். சத்யத்தைப் பொறுத்தவரை மனத்திற்கு தோன்றினால் வேலைகளை செய்வது இல்லையெனில் அதை செய்யக்கூடாது அவ்வளவுதான். இது பலருக்கும் புரிவதில்லை. ஏன் அவனது பெற்றோருக்கு கூட. குறிப்பாக அவனது அப்பாவுக்கு அவனை புரிந்துகொள்ள முடியாத இயலாமை மெல்ல கோபமாக மாறுகிறது. சத்யத்தைப் பொறுத்தவரை கவிதை எழுதுவது அதற்கான கவியுலகிலேயே இருப்பது பிடித்தமானது. இப்படி இருப்பவன் நடைமுறை வாழ்க்கை பற்றி அறியாதவனும் அல்ல. சிறுவயதில் கவிதை எழுதிக்கொண்டிருக்கும்போது, பக்கத்துவீட்டு கல்லூரி இளைஞர் காதல் கடிதம் எழுதி தூக்கிப்போட, சத்யம் ரைட்டிங் பேடுடன் உட்கார்ந்திருக்க அவனை சந்தேகப்படுகிறது பக்கத்துவீடு. சந்தேகமென்ன உறுதியாக தீர்மானித்து திட்ட சத்யத்தின் அப்பாவும் அதை அப்படியே நம்புகிறார்.
இப்படி இருக்கும்போது, சத்யத்திற்கு படிப்பில் நாட்டம் குறைகிறது. நான்கு பாடங்களை நன்றாக படிப்பவன், ஆங்கிலத்திற்கு மட்டும் தடுமாற பத்தாம் வகுப்போடு படிப்பு நின்றுபோகிறது. வண்டி ஓட்ட கற்றுக்கொண்டு எம்எல்ஏவின் கார் டிரைவராக வேலை செய்கிறான். அப்போது, நேரும் சம்பவம் அவனது வாழ்க்கையை குலைத்து போடுகிறது. இதனால் சத்யத்தின் வீட்டை எம்எல்ஏவின் ஆட்களை அடித்து நொறுக்கி அவனது அப்பாவையும் தாக்குகின்றனர். இதனால் சத்யம் வீட்டை விட்டு வெளியே போகும்படி ஆகிறது.
சினிமா பாடலாசிரியருக்கு கார் டிரைவராக சத்யம் இருக்கிறான். அவனது கவிதை எழுதும் திறமையை பயன்படுத்தி அவன் எழுதும் பாடல்களை தன் பெயரில் வெளியிட்டு பெயரும், புகழும், பணமும் சம்பாதித்துக் கொள்கிறார் சினிமா பாடலாசிரியர். இதோடு பகுதிநேரமாக பள்ளி குழந்தைகளை பள்ளிக்கும் வீட்டுக்கும் கொண்டுபோய் விடும் வேலையையும் செய்கிறான் சத்யம். இப்படி கிடைக்கும் பணத்தை வைத்துத் தான் தனது தங்கையின் கல்யாணம், அண்ணனின் வேலை ஆகியவற்றுக்கு உதவுகிறான். இந்த உண்மைகளை சத்தியத்தின் அப்பா உணர்ந்தாரா, அவனை ஏற்றுக்கொண்டாரா என்பதே முக்கியக் கதை. இதோடு கிளைக்கதையாக ஜெனிலியா வேறு வருகிறார். அவரை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியவில்லை. எனவே பாடல்களுக்கு மட்டும் என்ற வகையில் வந்து போகிறார். கோட்டா சீனிவாச ராவ், பிரம்மானந்தம், தணிகெலா பரணி என நடிகர்கள் படத்திற்கு பிரமாதமாக பங்களித்துள்ளனர்.
சத்யத்தின் பாத்திரத்தைப் பொறுத்தவரை அவன் பிறர் சொன்னால் அவர்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டு தனக்கு உதவுகிறார், உதவாமல் போகிறார் என்று யோசிக்காமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார். அது எந்தளவு போகிறது என்றால் ஓ ஹென்றியின் சிறுகதை போல சோகமான முடிவை நோக்கித்தான். அவரின் சிறுகதையில், கணவன் வாட்சை விற்று மனைவியின் அழகான முடியை சீவ அலங்கார சீப்பை வாங்கி வருவான். மனைவியோ தனது அன்பைக் காட்ட தனது நீள முடியை விற்றுவிட்டு கணவனின் வாட்சிற்காக பிளாட்டினம் ஸ்ட்ராப்பை வாங்கி வருவாள். திருமண நாளுக்காக இந்த பிரயத்தனம். ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தான் இதற்கு காரணம். பரிசுகளுக்கு எந்த பயனுமில்லை. ஆனால் அதன் மூலம் நாம் அறியும் பொருள்தான் முக்கியம்.
படத்தின் இறுதியில் வேனில் வரும்போது சத்யத்தின் நண்பன் வசனம் ஒன்றை சொல்லுவான். எல்லோருக்கு எதிரி என்பவன் எங்கோ இருப்பான், ஆனால் உனக்கு நீதான் எதிரி. உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்கறே.
நாம் நம்பும் உண்மை, கடைபிடிக்கும் விதிகள் கூட ஒருகட்டத்தில் நம்மை சங்கிலிகளாக மாறி பிணைத்து கட்டுப்படுத்த தொடங்குகிறதுதானே....
தியாகமே சத்யமே...
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக