என்னை நானே மணப்பதில் பிறருக்கு என்ன பிரச்னை? - ஷாமா பிந்து

 







இந்தியாவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. இவரது வயது 24. கடந்த இருபத்து நான்கு மணிநேரத்தில் இவரைப் போல் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்ட ஒருவரைப் பார்க்க முடியாது. இத்தனைக்கும் அவர் யாரையும் விமர்சிக்கவில்லை. திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்ற பதிவைத்தான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதற்கு இத்தனை எதிர்ப்பு, ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதை ஏன் இத்தனை பேர் எதிர்க்கிறார்கள். அதில் தான் சூட்சுமம் உள்ளது. ஷாமா, தன்னைத்தானே கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார். இதனை சோலோகாமி என அழைக்கிறார். அவரிடம் பேசினோம். 


மணப்பெண், மனைவி இரண்டுக்குமான வேறுபாடு என்ன?

நான் இளம்பெண்ணாக வளர்ந்தபோது எனக்கு திருமணம் செய்துகொள்ளத் தோன்றியது. நிச்சயம் நான் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் மனைவியாக இருக்கமாட்டேன் என உறுதியாக நினைத்தேன். திருமணம் செய்துகொண்டால் உங்கள் வீட்டை விட்டு செல்லவேண்டும். பிறரது வீட்டில் அவர்களின் விதிகளுக்கு ஏற்றபடி வாழ வேண்டும். இதைப்பற்றி யோசித்துக்கொண்டு இணையத்தில் தேடியபோது சோலோகாமி பற்றி தெரிந்தது. எனவே அதைப்பற்றி படித்து என்னை நானே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். இந்தியாவில் இது முதல் முயற்சி. இதைப்பற்றி பதிவிட்டதும் பலரும் என்னை இணையத்தில் கேலி கிண்டல் செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னை நான் விரும்புகிறேன். எனவே நான் என்னையே மணக்கிறேன். 

விமர்சனங்கள் உங்களை பாதிக்கிறதா?

முதலில் எனக்கு இதுபற்றி பதற்றம் இருந்தது. எனது திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு தான் இதற்கு காரணம். இணையத்தில் இதுபற்றிய ட்ரோல்கள் என்னைப் பாதிக்கவே இல்லை என்று நான் கூறமாட்டேன். வதோதராவில் உள்ள கோவிலில் திருமணம் செய்வதை மக்கள் பார்க்கவேண்டும் என நினைக்கிறேன். இது அவர்களுக்கு விஷயத்தை எளிதாக புரிந்துகொள்ள உதவும். இந்தியாவில் நிறைய பெண்கள், திருமணம் செய்துகொண்டு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார்கள். என்னை கிண்டல் செய்பவர்கள், என்னை சுயமோகி, செல்ஃபி போல என்று கூறுகிறார்கள். நான் கூறுவதை  சரியாக புரிந்துகொள்ளவில்லை. நம் வாழ்க்கையை நமது விருப்பம் போல வாழ நம் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. 

எல்ஜிபிடியினர் விவகாரத்தில் என்ன மாற்றம் வரவேண்டுமென நினைக்கிறீர்கள்?

இன்றுமே ஒருவர் தன் பாலினம், விருப்பம் சார்ந்து பேசுவதற்கு தயங்குகிறார்கள். அப்படி பேசினாலும் அதை எதிரில் இருப்பவர் சரியாக புரிந்துகொள்வதில்லை. 377 சட்டம் நீக்கப்பட்டாலும் சமூகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவது அவசியமாக உள்ளது. ஒரே பாலினதைதச் சேர்ந்தவர்கள் மணம் செய்துகொள்வதை நீதித்துறை ஏற்றுக்கொள்ளவேண்டும். விரைவில் இந்த மாற்றம் நடைபெறவேண்டும். 


சோலோகாமி

பொது இடத்தில் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வதே சோலோகாமி என்று அழைக்கின்றனர். இதற்கு இந்தியாவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது. இதுபோல நிகழ்ச்சிகள் நடப்பது மிக அரிதுதான். அமெரிக்காவில் லிண்டா பேக்கர் என்ற பெண்மணி இந்த முறையில் சோலோகாமி செய்திருக்கிறார். கிரிஸ் கலேரா என்ற பிரேசிலிய மாடல் சோலோகாமி திருமணத்தை செய்து 90 நாட்களில் அதை முறித்துக்கொண்டுள்ளார். 

டைம்ஸ் ஆப் இந்தியா

சௌமித்ரா தாஸ் 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்