தோற்றுப்போவதற்கு பயப்படாதீர்கள்! - ஹேம்லதா முகேஷ் சாங்வி, வர்த்தமான் ஜூவல்லர்ஸ்

 










ஹேம்லதா முகேஷ் சாங்வி
துணை நிர்வாகத்தலைவர் - வர்த்தமான் குழும நிறுவனங்கள்

படித்தது மென்பொருள் பொறியியல் படிப்பு. ஆனால் செயல்படுவது, தொழிலதிபராக தொழில்துறையில் என்பதுதான் லதாவின் வாழ்க்கை. மும்பையில் செயல்படும் வர்த்தமான் குழுமத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு என லதாவைக் கூறலாம். வர்த்தமான்  நிறுவனத்தின் முக்கிய வணிகம், நகைகள்தான். 

2016ஆம் ஆண்டு வர்த்தமான் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அதனை தங்க நகைக்கு கடன் கொடுக்கும் நிறுவனமாக வளர்ச்சி பெறச் செய்தார். வர்த்தமான் நிறுவனம், நிலம், வண்டி, வாகனங்கள், ஓவியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றிலும் முதலீடுகளை செய்து வருகிறது. இந்தியாவின் நம்பிக்கையான நூறு நிறுவனங்களைக் கணக்கெடுத்தால் வர்த்தமான் நிறுவனமும் அதில் ஒன்று என்று கூறலாம். 

ஹேம்லதாவிடம் பேசினோம். 






நீங்கள் வணிகத்திற்குள் எப்படி நுழைந்தீர்கள்?

2006ஆம் ஆண்டு எனது மாமனார் மறைவிற்குப் பிறகு எனது கணவர் வர்த்தமான் குழுமத்தின் தலைவராக ஆனார். நான் வணிகத்திற்குள் வர நினைக்கவில்லை. ஆனால் எனது கணவர் நகை தொடர்பான வணிகத்தை கவனித்துக்கொள்ள வலியுறுத்தினார். சந்தையை நன்கு ஆய்வு செய்து பிறகு எங்கள் செயல்பாடுகளை அதற்கேற்ப வடிவமைத்தோம். கணினி சார்ந்தும் நான் நிறைய திறமைகளை வளர்த்துக்கொண்டேன். இதன்படிதான், வணிகத்திட்டத்தை செயல்படுத்தி நகை தொழிலை தானியங்கி முறையில் மாற்றினோம். பதினைந்து ஆண்டுகளாக நான் நகைத்தொழிலை கவனித்து வருகிறேன். இதன்மூலம் எனது திறன்களையும் வளர்த்து வருகிறேன். 

நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

உங்களை எப்போதும் நம்பவேண்டும். பாசிட்டிவ்வாக மனநிலையை வைத்துக்கொள்ள வேண்டும். அறிவை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். எங்கேயும் தேங்கி நின்றுவிடக்கூடாது. வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்வது முக்கியம். ஒரு வேலையை எடுத்தால் அதனை நிறைவு செய்யும்வரை நிற்க கூடாது என நிறைய விஷயங்களை தொழில் மூலமாக கற்றேன். 

உங்கள் முன்மாதிரி அல்லது ஆலோசகர் யார்?

என் கணவர்தான் எனது முன்மாதிரி. என்மீது எனக்கே நம்பிக்கை வர அவர்தான் காரணம். அவர் தனது தொழில் அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொள்வார். அப்படித்தான் எனக்கு நகைத் தொழில்மீது ஆர்வம் பிறந்தது. என்னுடைய திறமையை புரிந்துகொண்டு நான் வளர அவர் உதவி செய்தார். 

பெண் தொழில்முனைவோர்களுக்கு ஏதேனும் அறிவுரை சொல்ல நினைக்கிறீர்களா?

தோற்றுப்போவதற்கு பயப்படாதீர்கள். நாம் நமக்கு வசதியான இடத்திலிருந்து வெளியே வருவது முக்கியம். எதிர்மறையான ஆட்களைத் தவிருங்கள். பெரிய திட்டங்களை தீட்டுங்கள். அதனை நிறைவேற்றுவதற்கான நம்பிக்கை வளர்த்துக்கொள்ளுங்கள். காலப்போக்கில் அதுவே உங்களை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லும். 


ஃபெமினா ஆகஸ்ட் 2021


கருத்துகள்