நாட்டை புரிந்துகொண்டால்தான் மக்களின் உணர்வோடு இணையமுடியும்! - ஆயுஷ்மான் குரானா










அனுபவ் சின்கா, ரா ஒன் படம் மூலமாக இந்தியா முழுக்க பிரபலமானார். ஆனால் இது ஃபேன்டசி படம். அதற்குப் பிறகு அவர் எடுத்த முல்க், ஆர்டிக்கிள் 15, தப்பட் ஆகிய படங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு சிக்கல்களை அலசின. இயல்பான நடிப்பு, நாம் ஏற்கமுடியாத நிதர்சன உண்மை ஆகியவற்றை மையமாக கொண்டே அனுபவ் சின்கா படம் எடுத்துவருகிறார். இவர் எடுக்கும் படங்களுக்கு அவரேதான் தயாரிப்பாளரும் கூட. அதனால் தான் தைரியமாக பிறர் சொல்லத் தயங்கும் விஷயங்களை சொல்ல முடிகிறதோ என்னவோ, இப்போது வடகிழக்கு இந்தியா பற்றிய படமான அனெக்கை எடுத்துள்ளார். இதில் நடித்துள்ளவர், ஆயுஷ்மான் குரானா. 

ஆயுஷ்மான் குரானா

இந்தி சினிமா நடிகர் 






அனெக் படம் பற்றி உங்களுடைய கருத்து என்ன?


நாங்கள் இதுவரை பேசாத விஷயத்தை அனெக் படத்தில் பேசியுள்ளோம். இந்த நிலப்பரப்பும் கூட புதிது. ஆர்டிக்கிள் 15 படத்தில் நான் நடித்துள்ளேன். அது எனக்கு முக்கியமான படம். மாறுபட்ட குரலை பிரதிபலிக்கும் ஆளுமையாக அனுபவ் சின்கா உள்ளார். நான் அவரை நம்புகிறேன். 

கதை சொல்லுவது, சொல்லும் விஷயத்தின் உண்மை ஆகியவற்றில் யாரும் அனுபவ் சின்கா அளவுக்கு நியாயம் செயதிருக்க முடியாது. 

வடகிழக்கு பற்றி பேசும்போது அங்கிருந்து வந்து கல்லூரியில் படிப்பவர்கள் கேலி கிண்டலுக்கும் இனவெறிக்கும் உள்ளாகிறார்கள் என்பது உண்மையா?

நான் பஞ்சாப் யுனிவர்சிட்டியில் படிக்கும்போதும், டிஏவி கல்லூரியில் படிக்கும்போது வடகிழக்கு இந்திய மாணவர்களோடு படித்திருக்கிறேன். அப்படி ஒருமுறை  மணிப்பூரைச் சேர்ந்த கிடார் கலைஞரை சந்தித்தேன். அவர் எங்களோடு கல்லூரியில் படித்தார். அவர் எங்களை வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற பொருளில் மாயங்க் என்று அழைத்தார். அப்படி அவர் அழைத்தாலும் பின்னாளில் நாங்கள் எம்டிவி நிகழ்ச்சிக்காக இணைந்து உழைத்தோம். இசைக்குழு ஒன்றை உருவாக்கி செயல்பட்டோம். கலைக்கு இனம் ஏது, மதம் ஏது? இந்தியாஸ் காட் டேலன்ட் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கியபோது, வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த நிறைய இசைக்கலைஞர்களை தொடர்பு கொண்டு பேசினேன்.  அவர்களுக்கு சினிமா மூலமாக நல்ல விஷயங்களை செய்ய நினைத்தேன். அது அனெக் படம் மூலமாக நடந்திருக்கிறது. 

அனெக் படத்தில் இயக்குநர் சொல்லவிரும்பும் கருத்து என்ன?

அனுபவ் சின்கா என்ன சொல்லவருகிறார் என்பது அவரின் படங்களைப் பார்த்தாலே தெரியுமே? நான் அவருடன் இரண்டாவது படத்தில் இணைந்து உழைத்துள்ளேன். அனெக் படத்திற்காக அனுபவ், நிறைய ஆராய்ச்சி செய்து உழைத்திருக்கிறார். வடகிழக்கு இந்தியாவில் வட்டார வழக்கு நூற்றுக்கும் அதிகம். அத்தனையும் புரிந்துகொண்டு அங்குள்ள ஏராளமான நாடக கலைஞர்களைப் பயன்படுத்தி திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இதில் நான் நாயகன் கிடையாது. என்னுடன் நடித்த பிறரும் என்னையொத்த முக்கியத்துவமான நடிகர்கள்தான். நாயகியின் அப்பா கூட படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

நீங்கள் நடிகராக தேர்ந்தெடுக்கும் படங்கள் பார்வையாளர்களுக்கு என்ன விஷயங்களை கொடுக்கிறது?

நாட்டை முழுமையாக புரிந்துகொண்ட கலைஞனின் கதைகளைத்தான் அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். இது எல்எல்ஆர் போட்டு வண்டி ஓட்டக்கற்றுக்கொள்வது போலத்தான். நம் நாட்டை நாம் முழுமையாக புரிந்துகொள்ளவில்லையென்றால் மக்களை புரிந்துகொள்ளவில்லை என்றே அர்த்தம். வெளிநாட்டில் உள்ளவர்களில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் உண்டு. அவர்களின் படைப்பு நம்மை ஈர்க்கிறது என்றால் என்ன அர்த்தம்? உணர்வுரீதியாக கதை ரீதியாக நாம் ஒன்றுபடுகிறோம். அந்த வகையில் ஒரு கலைஞனாக நான் நடிக்கும் படங்கள் மக்களின் மனதோடு நெருக்கமாக இருக்கவேண்டும். அதற்காகத்தான் முயல்கிறேன். 

ஆர்டிக்கிள் 15, அனெக் என நடிக்கும் படங்கள் அனைத்துமே ரியலிச படங்கள்தான். வர்த்தக சினிமாவை நீங்கள் தவிர்க்கிறீர்களா?

நான் இதுவரை நடித்த படங்கள் அனைத்துமே ரியலிச தன்மையை வணிகரீதியாக சொன்ன படங்கள்தான். வணிகரீதியாக படம் என தனியாக நான் எதிலும் நடிக்கவில்லை. இதில் கற்றுக்கொள்வது, கற்றுக்கொள்ளாமல் இருப்பது என ஏதுமில்லை. 

படத்திற்கு படம் உடல்மொழி, நடிப்பு என அனைத்தையும் மாற்றித்தான் நடிக்கிறேன். அனெக் படத்தை பார்த்தால், அதில் ஆல்பா ஆண்மகனாக நடித்திருப்பேன். இது ராணுவ வீரனின் கதை. இதற்கும் சுப் மங்கள் ஜியாதா சாவ்தான், குலாபோ சித்தாபோ ஆகிய இருபடங்களுக்கும் தொடர்பே இருக்காது. 

வடக்கு தெற்கு பிரிவினை பற்றி என்ன நினைக்கிறீர்கள். இந்தியை தேசிய மொழி என்று கூறுவது சரிதானா?

மொழியை பேச யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என நினைக்கிறேன். நான் பஞ்சாபியை தேசியமொழியாக மாற்றலாமே என்றுதான் சொல்லுவேன். மகாராஷ்டிரத்தில் பலரும் இந்தி பேசுகிறார்கள். பிராந்தியம் ரீதியாக  நிறைய மொழிகள் உள்ளன. அதன் அடிப்படையில் கலாசாரமும் அமைந்துள்ளது. நம் இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. இந்தியாவின் அழகே அதுதான். 


ஃபிலிம்ஃபேர்

ஹிதேஷ் பிள்ளை 






கருத்துகள்