இளமையான குமுதம் வார இதழை வெற்றிபெறச் செய்த எடிட்டர் எஸ்ஏபி!

 









எடிட்டர் எஸ்ஏபி
ரா.கி.ரங்கராஜன்
ஜ.ரா.சுந்தரேசன்
புனிதன்



குமுதம் இதழை தொடங்கி ஆசிரியராக நடத்தியவர், எஸ்.ஏ.பி. அண்ணாமலை. இவருக்கு உதவிய பதிப்பாளர் பார்த்தசாரதி. இருவரும் சேர்ந்துதான் இளமை புதுமை எதிலும் முதன்மை என்ற கேப்ஷன் கொண்ட குமுதத்தை உருவாக்கினர். 

குமுதத்தின் அடிப்படையே புதுமைதான். இன்று குமுதம் இருபது ரூபாய் விலையில் விற்று வருகிறது. ப்ரியாகல்யாணராமன் அதனை பாகுபலியாக சுமந்து வருகிறார். அன்று நிலைமை அப்படியில்லை. எஸ்ஏபி இதற்கென மூவரை உதவி ஆசிரியர்களாக வைத்திருந்தார். அவர்கள்தான் எடிட்டர் எஸ்ஏபி நூலை எழுதியவர்கள். 

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்துமே தினமலர், தினமணி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவைதான். அதை தொகுத்தே மூவரும் தங்களின் தனிப்பட்ட அனுபவங்களாக தொகுத்துள்ளனர். 

எடிட்டர் எஸ்ஏபி, தான் வாழும் காலம் மட்டும் தன்னைப் பற்றி யாரும் புகழ்ந்து எழுத அனுமதிக்கவிலை. செட்டியார் அந்த மட்டுக்கு தெளிவாக வீண் புகழ்ச்சி, திறமையைக் கெடுக்கும் என உணர்ந்திருக்கிறார். ரா கி ரங்கராஜன் எழுத்தில் ஒருமுறை மட்டுமே ஒருவரது புகழ்ச்சியால் மயங்கியிருந்த நிகழ்வை படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் தான் யார் உண்டு உலகிலேயே? 

மூவரும் தங்கள் அனுபவங்களை சிறப்பாகவே எழுதியிருக்கிறார்கள். இதில் சிறப்பானதாக வாசிக்கும்போது மனதில் படுவது ரா கி ரங்கராஜன் எழுத்துகள்தான். இவர் தன் இயல்பிலேயே ஆசிரியருக்கு நெருங்கியும், நெருங்காத மனிதருமாக இருந்திருக்கிறார். 

உண்மையில் எடிட்டர் எப்படி இருக்கவேண்டும், பத்திரிக்கை வேலையை எப்படி செய்யவேண்டும். எங்கு கவனமாக இருக்கவேண்டும், உதவி ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது, கார்டூன்களை வரைவதற்கான ஐடியாக்கள், சினிமா விமர்சனங்களை புதுமையாக செய்வது, அட்டைபடங்களில் காட்ட வேண்டிய அக்கறை, விமர்சனங்களை எப்படி படித்து அதனை வெளியிட வேண்டும் என்பது போன்ற கருத்துகளை வாசிக்கும்போது குமுதம் ஏன் அன்றைய காலத்தில் வெற்றி பெற்ற இதழாக இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். 

கீதை, திருக்குறளை படிப்பதும் தொப்புள் தெரிவதுமான நடிகைகளின் ஸ்டில்களை தேடுவதும், நடுப்பக்க கவர்ச்சி படங்களை போடுவதுமாக பணிகளை குமுதம் குழுவினர் - இந்த மூவரும் சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள. இதனை சிலர் விமர்சித்தாலும் வேலை என்பது என்ன, தனிப்பட்ட ஆர்வம் என்பது என்ன என புரிந்து வைத்திருந்தால் பிரச்னையில்லை. எழுத்தாளர் பிரபஞ்சன் கூட குமுதம் எடிட்டோரியலை விமர்சித்திருக்கிறார். அவரவர் மனதிற்கு தோன்றிய கருத்தைக் கூறலாம். அதில் எந்த தடையும் கிடையாது. 

குமுதத்தின் இலக்கணமே இளமையும், புதுமையும்தான். இந்த இலக்கணத்தை பின்னாளில் ஆனந்தவிகடனும் கையில் எடுத்தது. இப்போதுவரை அப்படியே தொடர்கிறது. ஆனால் விகடனின் சிறுகதை நேர்த்தி குமுதத்தில் கைகூடவில்லை. இதெல்லாம் எஸ்ஏபி காலத்தில் நடைபெற்றதுதான். 

எடிட்டர் எஸ்ஏபி எந்த விதத்தில் முன்னோடியாகிறார்? தினந்தந்தியின் சி பா ஆதித்தனார் எழுதிய இதழாளர் கையேடுதான் கட்டுரை எழுதுவது, செய்தி ஆகியவற்றுக்கான அடிப்படையாக எஸ்ஏபி நினைத்தார். 

உதவி ஆசிரியர்களை கதை, கட்டுரை, செய்தி, துணுக்கு என பல்வேறு விஷயங்களை எழுத ஊக்குவித்திருக்கிறார். இதை கண்டிப்பாக செய்தார். சுயநலனும் உண்டுதான். ஆனால் கிடைத்த பயன்கள் ரா கி ரங்கராஜன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் என அனைவருமே புகழ்பெற்றவர்களாக மாறியதுதான். 

எஸ்ஏபி, தனது உறவினர்களை பத்திரிகையில் உள்ளே கொண்டு வரவில்லை. 

சினிமா விமர்சனம் எழுத பத்திரிகையாளர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் சென்று பார்த்துவிட்டு எழுதவேண்டும் என உறுதியாக சொன்னது. 

குறிப்பிட்ட நிலப்பரப்பு சார்ந்த கதைகளை எழுத அந்த இடங்களுக்கே சென்று பார்த்துவர எஸ்ஏபி ஊக்குவித்திருக்கிறார். தொடர்கதை எழுதிய சுஜாதாவிற்கு இப்படி இங்கிலாந்திற்கு சென்று வர உதவியிருக்கிறார்.

தான் ஆசிரியராக இருந்ததால் எத்தனையோ பக்கங்களை வம்படியாக பிடித்து எழுதி தீர்த்திருக்கலாம். ஆனால் அதனை உதவி ஆசிரியர்களுக்கும் பிறருக்கும் கொடுத்து எழுத்தை வளர்த்தார். தேவையான நூல்களை அவரே  வாங்கிக் கொடுத்து எழுத உதவியிருக்கிறார். 

கோமாளிமேடை டீம் 







 

கருத்துகள்