அரசுபள்ளி மாணவர்களை வாசிக்க ஊக்கப்படுத்தும் நடமாடும் நூலகம்!
வாசிப்பை வளர்க்கும் நூலகம்!
திருவண்ணாமலையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது, ஆடையூர் பஞ்சாயத்து பள்ளி. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், குறிப்பிட்ட நேரம் ஆனதும் ஜன்னலுக்கு வெளியே பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.
பைக்கில் வரும் நூலகருக்காகத்தான் மாணவர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். நூலகர்,நடமாடும் நூலகம் என எழுதப்பட்ட பெட்டியிலிருந்து நூல்களை எடுத்து மாணவர்களுக்குக் கொடுக்கிறார். 15 நாட்களுக்குள் நூல்களை படித்துவிட்டு திரும்ப கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். மாணவர்களுக்கு, இதற்கென தனி அடையாள அட்டை உண்டு. குறிப்பிட்ட கால அளவில் பத்து நூல்களை படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக ஒரு நூலை வழங்குகிறார் நூலகர்.
இந்த நடமாடும் நூலக திட்டத்தை அரசுப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருவது, ரெஜன்பூக் இந்தியா பௌண்டேஷன் (Regenboog India Foundation). இதனை நிறுவி நடத்தி வருபவர், மதன் மோகன். 2006ஆம் ஆண்டு மதன் மோகன், ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பணியில், மனநிறைவு கிடைக்காததால் , வேலையை விட்டுவிலகி சமூகப் பணிகளைச் செய்ய நினைத்தார்.
அப்போது திருவண்ணாமலையில் இடைநிற்கும் கிராம மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ”2007ஆம் ஆண்டு மாணவர்களின் கல்விக்காக வேடியப்பனூர் கிராமத்தில் அருணாச்சலா மாலைநேரப் பள்ளியைத் தொடங்கினோம். இப்பள்ளியை குடும்பம், நண்பர்களின் நிதியுதவியோடு உருவாக்கினோம். நடைமுறை ரீதியான கல்வி, மன அழுத்தம் இன்மை ஆகிய அம்சங்கள் இப்பள்ளியின் சிறப்பு. ” என்றார் மதன் மோகன். இவரின் நடமாடும் நூலகத் திட்டத்தில் 100 அரசுப் பள்ளிகளில் உள்ள 4,858 மாணவர்கள் வாசகர்களாக நூல்களை வாசித்து வருகிறார்கள். நாவல், கட்டுரை என 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு நடமாடும் நூலகத் திட்டத்தை மதன்மோகன் செயல்படுத்தி வருகிறார்.
நன்றி
தினமலர் பட்டம்
கருத்துகள்
கருத்துரையிடுக