ஏழு பாவங்களை முற்றாக ஒழிக்கும் சீரியல் கொலைகாரர்! - செவன் -1995- டேவின் ஃபின்ச்சர்

 









செவன்
மோர்கன் ப்ரீமன், பிராட்பிட்
இயக்கம் டேவின் ஃபின்ச்சர்





1995ஆம் ஆண்டு வெளியான படம். இன்றளவிலும் அதன் உருவாக்கம், கதை, நடிப்பிற்காக பேசப்பட்டு வருகிறது. படத்தில் வரும் மையப்பொருளைப் பொறுத்தவரை அதில் நல்லது, கெட்டது என எதையும் தீர்மானிக்க முடியாது.

ஜான் டோ என்ற சீரியல் கொலைகாரர் நகரில் கொலைகளை செய்துகொண்டே வருகிறார். கொலைகளை ஆராய வில்லியம் சோமர்செட், டேவிட் மில்ஸ் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். அவன் கொலை செய்யும் பாணிதான் கதையில் முக்கியமானது. கிறிஸ்துவ மதத்தில் 7 பாவங்கள் என்பது முக்கியமானது.

இக்கொள்கைப்படி  கொலையாகும் ஒவ்வொரு நபர்களின் அருகிலும் பாவத்தை சுவற்றில் எழுதி வைத்துவிடுகிறான் கொலைகாரன். கோட்பாடு சரி, கொலைகாரனை கொத்தாக பிடித்து கைது செய்தார்களா இல்லையா என்பதுதான் கதையின் இறுதிப்பகுதி. 

இதில் வில்லியம் சில மாதங்களில் ஓய்வுபெற்று  வேறு ஊருக்கு செல்லவிருக்கிறார். அவருக்கு தான் வேலை செய்யும் வேலை பிடிக்கவில்லை. அடுத்தவர்களைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கும் மக்களை தனக்கு பிடிக்கவில்லை என்கிறார் வில்லியம். டேவிட் மில்ஸைப் பொறுத்தவரை அவர் தனது மனைவியுடன் அந்த நகருக்கு இடம்பெயர்ந்து வேலை செய்கிறார். அவருக்கு வேலை தான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்தான். அதாவது, மனைவி, தூக்கம் ஆகிய சமாச்சாரங்கள்.

 வில்லியம் சோமர்செட் தனியாக வாழ்கிறார். வழக்கை ஆழமாக புரிந்துகொண்டு துப்புதுலக்குவது இவரின் பாணி. டேவிட் மில்ஸைப் பொறுத்தவரை நிதானமே இல்லாத வேகம். இருவரின் குணங்களும் விசாரணையில் பிரதிபலிக்கிறது. இதன் காரணமாகவே படத்தின் இறுதியில் டேவிட் தான் நினைத்துப் பார்க்காத ஒரு முடிவை எடுக்கிறான். 

படத்தில் வில்லன் தான் அனைவரையும் இயக்குகிறான். ஜான் டோ வாக நடித்திருக்கும் கெவின் ஸ்பேசி முகத்தில் யாரும் எதையும் தெரிந்துகொள்ளமுடியாது. ஒரு ஞானியில் முகத்திலுள்ள மந்தகாசம் இருக்கிறது. பல்லாயிரம் நூல்களை படித்ததோடு, தனது அனுபவங்களை இரண்டாயிரம் நோட்டுகளில் பதிவு செய்து வைத்திருக்கிறான் என டிடெக்டிவ்கள் மூலம் அறியும்போது நமக்கே பெரும் திகைப்பாகிறது. 

பெரும்பாலும் கொலைகளை செய்பவர்கள் அதில் குரூர திருப்தி கொண்டு திரும்ப திரும்ப செய்வார்கள். ஆனால் ஜான் டோவைப் பொறுத்தவரை அப்படி காரணங்கள் ஏதுமில்லை. மக்களைக் கெடுத்தவர்கள், அநீதி செய்தவர்கள் என மோசமானவர்களில் முக்கியமானவர்களை திட்டம் தீட்டி கொல்கிறார் ஜான் டோ. இறுதியாக செய்யும் இரு கொலைகள்தான் படத்தை வேறு தன்மையில் மாற்றுகிறது. அது படத்தின் முக்கியமான காட்சியும் கூட. 

படத்தில் வரும் வசனங்கள் கவனிக்கத் தூண்டுபவை. வில்லியம் நூலகத்திற்கு போய் நூல்களைத் தேடுவார். அங்கிருக்கும் காவலாளிகள் சீட்டு விளையாடிக்கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்து புத்தகங்கள் நிறைய இருக்குதே படிக்கலாமே ஏன் சீட்டு விளையாடறீங்க என்பார். உங்களுக்கு படிக்கிறது ச்ந்தோஷம், எங்களுக்கு சீட்டு விளையாடறது சந்தோஷம் என காவலர்கள் பதில் சொல்லுவார்கள். 

அடுத்து, டேவிட் மில்ஸின் மனைவியை உணவகத்தில் சந்தித்து குழந்தை உருவானது, அதை பெறலாமா வேண்டாமா என வில்லியம் பேசும் காட்சி. 

இறுதியாக, வேர்ஸ்வொர்த்தின் உலகம் அழகானது அதற்காக நாம் போரிடவேண்டும் என்பது எனக்கு பிடிக்கும். அதில் இரண்டாவது வார்த்தை எனக்கு பிடிக்கும் என வில்லியம் சொல்லியபடியே செல்வார். 


பாவம் செஞ்சா போச்சு!

கோமாளிமேடை டீம் 





கருத்துகள்