வியட்நாம் சிறுமியின் பழிதீர்க்கும் வெறி! - தி புரோடேஜ் 2021

 


முதல் காட்சி வியட்நாம் நாட்டில் விரிகிறது. மழை பெய்துகொண்டிருக்க, அதில் தலைக்கு சிறு முக்கோண தொப்பி அணிந்துகொண்டு மக்கள் தெருவில் நடந்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் ஒரு வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்தால், அங்குள்ளவர்கள் அனைவருமே இறந்துகிடக்கிறார்கள். அனைவருமே ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களிடமுள்ள பணத்தை அந்த நபர் எடுத்துக்கொள்கிறார். அப்போது, அவருக்கு ஏதோ சத்தம் கேட்க கைத்துப்பாக்கியை எடுத்து அதை சோதிக்கிறார். பீரோவில் சிறுமி ஒருத்தி தானியங்கி துப்பாக்கி ஒன்றுடன் இருக்கிறாள். அவளை அந்த நபர் அதாவது சாமுவேல் எல் ஜாக்சன் கொல்லவில்லை. அவளது பயம் போக்கி அவளை க் கூட்டிக்கொண்டு செல்கிறார். சாமுவேல் அவரே சொல்லிக்கொள்வது போல நல்லவர் கிடையாது. கூலிக்கொலையாளி. 


தனக்குத் தெரிந்த வித்தையை வியட்நாம் சிறுமிக்கு, அதாவது அன்னாவுக்கு சொல்லித்தருகிறார். அவள் அவரே பிரமிக்கும்படி சூட்டிகையாக ஆபத்தானவளாக வளர்கிறாள். அவளுக்கு வளர்ப்பு அப்பா என மூடியை மட்டுமே நினைக்கிறாள். அன்னாவுக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். எனவே, புத்தக கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறாள். இந்த நிலையில் அவர்கள் லூகாஸ் கேயஸ் என்ற நபரைப் பற்றி கண்டுபிடிக்க சொல்லி வேலை ஒன்று வருகிறது. அதன் காரணமாக, மூடி சுட்டுக்கொல்லப்படுகிறார். மூடி - அன்னா சார்ந்த ஆட்கள் அனைவருமே கொல்லப்படுகிறார்கள். இதனால் கோபம் கொள்ளும் அன்னா, தனது வளர்ப்பு அப்பாவைக் கொன்றவர்களை போட்டுத்தள்ள வியட்நாமுக்கு விமானம் பிடித்து டாக்சியில் சென்று வேட்டையாடத் தொடங்கினால் படம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். 

பழிவாங்கும் படலம், மேகி க்யூ(அன்னா)வின் நடிப்பு, சண்டை என அத்தனையும் அற்புதம். படத்தை சுவாரசியப்படுத்துவது அன்னாவில் மூடி மீது கொண்ட பாசம்தான். இதில் அவளுக்கு கிடைக்கும் உறவுதான், அவளுடைய எதிரி தரப்பின் கூலிக்கொலையாளி மைக்கேல் கீட்டன் (மைக்கேல்). அதுவும் படத்தின் இறுதியில் முடிவுக்கு வருகிறது. எப்படி என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

மென்மையாக வசனம் பேசிக்கொண்டே சரக்கென சுருட்டில் இருந்து கத்தியை எடுத்து குத்துவது, அன்னாவின் தகவல் சேகரிப்பாளனை கிரில் சிக்கனாக மைக்கேல் சுட்டு வைத்திருப்பது, வாஷ்பேசின் பீங்கானில் அடித்தே கொல்லுவது, சாப்பாட்டுத்தட்டை ஆயுதமாக்கி இருவரை அடித்து நொறுக்குவது என வன்முறைக் காட்சிகள் ஏராளம் உண்டு. 

கடந்த காலம் நம்மை விட்டுவிடாது. நிச்சயம் துரத்தி வரும். 

நான் இறந்துவிட்டால் நரகத்தில் என்னை பழிவாங்க நிறைய எதிரிகள் காத்திருக்கிறார்கள்

நான் ஒரு தீயசக்தி. தான் செய்வதை தீயசக்தி எப்போதுமே நியாயப்படுத்தித் தான் பேசும் என மூடி பேசும் வசனங்கள் சிறப்பாக உள்ளன. 

யோசிக்காமல் அடி!

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்