நரசிம்மராவ் இந்தியாவை நிறையவே மாற்றியுள்ளார்! பிரகாஷ் ஜா - திரைப்பட இயக்குநர்

 















பிரகாஷ் ஜா 

இந்தி சினிமா இயக்குநர் 

பிரகாஷ் ஜா, ஓடிடி தளத்திற்காக ஆஷ்ரம் தொடரை எடுத்து வருகிறார். 


ஆஷ்ரம் தொடரின் மூன்றாவது பகுதியை எடுத்து வருகிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருக்கிறது?

நான் ஆஷ்ரம் தொடரை எழுதுவது தொடங்கி  அதனை படமாக்குவது, அதன் இறுதிகட்டப் பணிகள் வரை அனுபவித்துத் தான் செய்கிறேன். நான் எப்போதும் ஆஷ்ரம் தொடரின் மையக்கருத்து பற்றி மிகவும் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. அப்படி செய்தால், இத்தொடரை உருவாக்கியிருக்க முடியாது. அப்படியே அந்த சிந்தனையில் சிக்கிக் கொண்டிருப்பேன். ஆஷ்ரம் தொடர் வேடிக்கையான ஒன்று. இதில் வரும் பாபாவின் பக்தர்கள் கூடுவார்கள். அவரைச் சேர்ந்த குழுவினர் அதிகரிப்பார்கள். இந்த நேரத்தில் மெல்ல அவரின் வீழ்ச்சி நடைபெறுகிறது. அதுதான் மூன்றாம் பாகத்தின் மையம். 

கடந்த ஆண்டு போபாலில் நீங்கள் படப்பிடிப்பு நடத்தியபோது, பஜ்ரங்தள் அமைப்பினரால் தாக்கப்பட்டீர்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நீங்கள் உங்கள் கதைகளை தணிக்கை செய்துதான் எடுக்கிறீர்களா?

தணிக்கையெல்லாம் செய்யவில்லை. மேற்படி நீங்கள் சொன்ன தாக்குதல் நடந்தபிறகு படப்பிடிப்பை முடித்துக்கொண்டோம். என்னுடைய கதைகளை நான் உண்மையான வாழ்க்கையிலிருந்து நிஜத்திலிருந்து தான் உருவாக்குகிறேன். பொதுவான விஷயங்களிலிருந்து நீங்கள் படங்களை உருவாக்கும்போது அதற்கு எதிரான கருத்துகளை கொண்ட மக்களும் இருப்பார்கள். நான் கதையை சொல்லிவிட்டு செல்லவே நினைக்கிறேன். அதன்மூலம்,  தனிப்பட்ட ரீதியில் யாரையும் காயப்படுத்த நினைப்பதில்லை. பஜ்ரங்தள் அமைப்பினர் அன்று 60 பேர் இருப்பார்கள். கையில் குச்சியும் கற்களும் கொண்டு வந்திருந்தனர். அவர்கள் எங்களை தாக்கியிருந்தால் படப்பிடிப்பில் நாங்கள் 300 பேர் இருந்ததால் எளிதாக சமாளித்திருப்போம். அவர்கள் சென்றபிறகு நாங்கள் எங்கள் வேலையை செய்தோம். 

பி.வி.நரசிம்மராவின் வாழ்க்கையை தொடராக எடுக்கப்போகிறீர்கள் என கேள்விப்பட்டோம். அவர் வாழ்க்கையில் உங்களை ஈர்த்த விஷயம் என்ன?

அவர் வாழ்ந்த அரசியல் வரலாற்றுக் காலம் என்னை ஈர்த்தது. நான் எடுத்த படங்கள் அனைத்துமே மண்டல் கமிஷன், திறந்த பொருளாதார காலகட்டத்தைச் சேர்ந்தவைதான். இப்படி படம் எடுக்க என்னை அழைத்தபோது, நான் அதை ஏற்றுக்கொண்டேன். பி.வி.நரசிம்மராவை யாருமே நாயகனாக ஏற்கவில்லை. ஏன் அவர் இயங்கிய கட்சி கூட அவரை மதிக்கவில்லை. நரசிம்மராவ் இந்தியாவை பல்வேறு வகைகளில் மாற்றியவர். அவரது கதை என்னை ஊக்கப்படுத்திய ஒன்றாக அமைந்தது. 

நீங்கள் ஓவியம் வரையக் கற்பதாகவும், பியானோ இசைக்க  பயிற்சி செய்வதாகவும் அறிந்தேன். பயிற்சிகள் எப்படி செல்கின்றன?

எனது படுக்கை அறையில் பாதி வரைந்த ஓவியம் இன்றுமே உள்ளது. லாக் டௌனில் பியோனோ பயிற்சியை தொடங்கினேன். ஆனால் அதனை தொடர்ச்சியாக கற்கவில்லை. ஆனால் எனக்கு நம்பிக்கை உள்ளது. தொடர்ச்சியாக பியானோ, ஓவியத்தை கற்பேன். 

கரிஷ்மா உபாத்யாய்

இந்தியா டுடே 









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்