நான் துறவி அல்ல!









 


ஹூவாவெய்யை குழுவைத் திரட்டி வேட்டையாடும் ஓநாய் என்றே கூறலாம். வாசனையை முகரும் மூக்கு, மூர்க்கமான குணம், குழுவாக வேட்டையாடும் இயல்பு ஆகியவற்றை வைத்தே ஓநாய் இன்றும் உலகில் மனிதர்களை சமாளித்து வாழ்கிறது. இல்லையெனில் பிற விலங்குகளைப் போல எப்போதோ அழிந்து போயிருக்கும்.
 
ஹூவாவெய் நிறுவன உள்நாட்டு ஊழியர்களுக்கு அதன் நோக்கம் எளிதாக புரியும். ஆனால் வெளிநாட்டு ஊழியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு முதலில் கடின உழைப்பு என்பதே புரியவில்லை. பின்னர்தான் அதை ஏற்றுக்கொண்டனர். 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்தநிலையில் தவித்தபோது ஜெர்மனி மட்டுமே சற்று சரிவில்லாமல் இருந்தது. இத்தனைக்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிறைய செலவழிக்கும் நாடுதான் அது. பொறியியல் துறையில்  ஜெர்மனி செய்த சாதனைகள் அதிகம். இசை அமைப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஓவியர்கள்  என பல்வேறு  ஆளுமைகளை உருவாக்கி உலகிற்கு அளித்த நாடு அது.
 
ஹூவாவெய் நிறுவனத்தில், ரென்னுக்கு 1.42 சதவீத பங்குள்ளது. மீதி அனைத்தும் ஊழியர்களுடையதுதான். நிறுவனத்தின் பங்குகளை பிரித்துக்கொடுப்பதை, சில ஆண்டுகளுக்குப் பின்னர் ரென் தான் முடிவு செய்து அறிவித்தார். அவருக்கே உரிய நிதானமான தன்மையில் தனது திட்டம் பற்றி அவரது அப்பாவிடம் கேட்டு முடிவெடுத்தார். இன்று, ஊழியர்கள் கண் துஞ்சாது உழைக்கிறார்கள் என்றால் அதன் முதலாளி அவர்கள்தான். அவர்கள் எந்தளவு உழைக்கிறார்களோ அந்தளவு நிறுவன மதிப்பு சந்தையில் உயரும். அதற்கேற்ப வருமானம் கிடைக்கும் என்பதுதான் விஷயம்.
 
“பங்குகளைப் பிரித்து கொடுப்பதால் நான் துறவி என நினைத்துவிடாதீர்கள். நான் ரியல் எஸ்டேட் தொழிலைத்  தொடங்கியிருந்தால் அதில் பெரிய சாதனைகளை செய்திருப்பேன். அப்போது நான் பணத்தை இப்படி அடுத்தவர்களுக்கு தர முடியாது. ஆனால் தொலைத்தொடர்பு சேவையைப் பொறுத்தவரை ஸ்மார்ட்டான ஆட்கள் தேவை. எனவே தான் பங்குகளை ஊழியர்களுக்கு வழங்கும் முறையில் சிறப்பான உழைப்பும், ஆதரவும் எனக்கு கிடைக்கிறது’’ என்று ஒருமுறை சொன்னார்.



 
2019ஆம் ஆண்டு சிஎன்பிசி செய்தியாளர், அமெரிக்க அரசின் தடைகளால் 30 பில்லியன் டாலர்கள் நஷ்டமாகிறது என்று கூறப்பட்டது உண்மையா என்று கேட்டார். அதற்கு ரென், எங்களது வருமான லட்சியம் 130 பில்லியன் டாலர்களாக இருக்க, அதில் 30 பில்லியன் டாலர்கள் என்பது பெரிய இழப்பல்ல என புன்னகையோடு பேசினார். அந்த தைரியம்தான் ரென்.
 
1993 ஆம் ஆண்டு ஹூவாவெய் நிறுவனம், ஜேகே1000 எனும் புதிய ஸ்விட்சுகளை கண்டறிந்தது. அப்போது நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 400க்கும் குறைவுதான். அப்போது சந்தை நினைத்தபடி சரியான திசையில் செல்லவில்லை. ஹூவாவெய் ஆராய்ச்சிப் பிரிவை உசுப்பி சிஅண்ட்சி 08 என்ற ஸ்விட்ச் அமைப்பை உருவாக்கத் தொடங்கியது.
 
பெரிய நிறுவனங்கள் வீழ்வதும், சிறு நிறுவனங்கள் காளான் போல முளைத்து வளர்வதும் தொழில்துறையின் இயல்பாக நடப்பதுதான். இது தொடர்ந்துகொண்டே இருப்பதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். நாம் எப்போதும் நாம் செய்யும் செயல்களால்தான் வீழ்கிறோம். சிலசமயங்களில் அதை உணர்ந்திருப்போம். பல சமயங்களில் அதை அறியாதது போல நடிக்க முயல்வோம். இப்படித்தான் பெரும்பாலும் நடக்கிறது.
 
சீனாவில் வாங் லேபரட்டரி என்ற நிறுவனம் இயங்கியது. அப்போது என்றால் இப்போது என கேட்காதீர்கள். இழுத்து சாத்திவிட்டார்கள். காரணம், அதன் மூடிய தொழில்நுட்ப முறைகள்தான். வாங் நிறுவனம், 1971இல் தொடங்கப்பட்டது. புகழ்பெற்ற வேர்ட் புரோசசரை உருவாக்கினர். பிறகு என்ன? வணிக இதழ்களில் கூட அவர்களின் வெற்றிக்கதையை மாய்ந்து எழுதித் தள்ளினார்கள். ஆனால், 1992ஆம் ஆண்டு வாங் லேபரட்டரி திவால் நிலைக்கு வந்துவிட்டது. நிறுவனத்தில் பங்கு விலை 72 சென்ட்களுக்கு வந்துவிட்டது. எங்கே நடந்தது தவறு? இது ஹூவாவெய் நிறுவனத்தை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது.
 
என்ன பிரச்னை? நிறுவனத்தின் செயல்பாட்டை வாங் குடும்பத்தினரே அரசியல் சதிகளை செய்துகொண்டு தக்கவைத்துக்கொண்டதுதான் காரணம். இதனால் வேகமாக வளரும் துறையில் அவர்களால் புதிய மாற்றங்களுக்கு தயாராக முடியவில்லை. எனவே நிறுவனம் வீழ்ந்தது. ஹூவாவெய் நிறுவனம் மீது புகார்களை அள்ளி வீசியது மேற்கு நாடுகளின் ஊடகங்கள்தான்.
 
ரென், சீன ராணுவத்தில் பணியாற்றினார். அவருக்கு சீன அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்தது என அவதூறுகளை வாரிஇறைத்தனர். அதனால் அமெரிக்க அரசு விசாரணையை தீவிரப்படுத்தி பல்வேறு தடைகளை விதித்தது. ரென், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர், ராணுவத்தில் வேலை செய்தார் என்பதை மறுக்கவே இல்லை. ஏனெனில் அமெரிக்க தலைவர்கள் எப்படி ஜனநாயக, குடியரசு கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ அதேபோலத்தான் அதுவும் என ஹூவாவெய் அதிகாரிகள் கூறினாலும் அதை அமெரிக்கர்கள் ஏற்கவில்லை. இன்று அதே ஊடகங்கள்தான் அவர்கள் நாட்டு நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள் என பல்வேறு நிறுவனங்களை கூண்டில் ஏற்றி விளக்கம் கேட்டு வருகிறார்கள்.
 
சீன நாட்டுச்சட்டப்படி அந்நாட்டு குடிமகன் அல்லது அங்குசெயல்படும் நிறுவனங்கள் உளவு நிறுவனங்கள் கேள்வி கேட்டால் அதற்கான பதில்களை தரவேண்டும் என்பது கட்டாயம். இதை மறுக்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் நீங்கள் அங்கு தொழில்செய்வது கடினமாகிவிடும். சீனாவில் தனியார் நிறுவனங்களை விட அரசு நிறுவனங்களே வலிமையானவை. இந்த நிலையில் ஹூவாவெய்க்கு சீன அரசு உதவ வேண்டிய அவசியம் என்ன? 2007ஆம் ஆண்டு தொடங்கி அமெரிக்காவில் இயங்கிய ஹூவாவெய்யின் மீது தாக்குதலைத் தொடங்கினார்கள். முதல் தாக்குதலை, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தொடங்கியது. அதற்குப் பிறகு ஹூவாவெய்யின் வணிக ஒப்பந்தங்கள், ஏலங்கள் அனைத்தும் தள்ளுபடியானது. பிறகு, ஈராக்கிற்கு தொலைத்தொடர்பு சாதனங்களை விற்றதற்காக ஹூவாவெய் மீது உளவு பார்க்கும் குற்றம்சாட்டப்பட்டது.
 
 
 

 
 
 
 
 
 
 

கருத்துகள்