பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்ய தயங்குகிறார்கள்! - ரேச்சல் இ கிராஸ்

 ரேச்சல் இ கிராஸ் 

பத்திரிகையாளர் எழுத்தாளர்
ரேச்சல், ஸ்மித்சோனியன் வலைத்தளத்தில் அறிவியல் பகுதி ஆசிரியராக பணியாற்றுகிறார். அண்மையில் இவருக்கு பிறப்பு உறுப்பில் நோய்த்தொற்று ஏற்பட்டது. அப்போதிலிருந்து அவருக்கு தன்னுடைய உடலை முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுபற்றி வஜினா அப்ஸ்குரா - அனாடாமிகல் வாயேஜ் என்ற நூலை எழுதியுள்ளார். பெண் உடல் பற்றிய பல்வேறு தவறான கருத்துகளுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம். 

இப்படி ஒரு நூலை எழுத உங்களைத் தூண்டியது எது?

அறிவியல் வரலாறு தொடர்பான நான் பல்வேறு விஷயங்களை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு சில விஷயங்கள் தெரிய வந்தது. அறிவியல் ஆராய்ச்சியைப் பொறுத்தவரை பெண்கள் சில வரம்புகளுக்குள்தான் இருந்திருக்கின்றனர். அதற்குமேல் அவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் பெண்களின் பிறப்புறுப்பு, கருப்பை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளும் எனக்குள் உருவானது. பெண்களின் செயல்பாட்டிற்கும் அவர்களின் உடல் உறுப்புகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது எனக்கு தெரிய வந்தது. இதுபற்றிய கேள்விகளை பெண்களிடம் கேட்கலாம். ஆனால் அவர்கள் அதுபோன்ற இடங்களில் அனுமதிக்கப்படவே இல்லை. எனவே கேள்விகள் இருந்தாலும் அதற்கான பதில்கள் கிடைக்கவில்லை. 

வரலாற்று நூல்களில் கூட இடம்பெறாத பெண்களின் கதைகளை எப்படி தேடிப்பிடித்தீர்கள்?

நூலின் இருளான பக்கம் இதுதான். தெற்குப்பகுதியில் அடிமைகளை வைத்திருந்தவர், ஜேம்ஸ் மரியன் சிம்ஸ். இவர் கருப்பின பெண்களின் உடல் பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறார். பெட்ஸி, லூசி, அனார்ச்சா ஆகிய பெண்கள் பற்றி நான் தேடிப்படித்தேன். இவர்கள் அறுவைசிகிச்சை செய்யும்போது உதவியாளர்களாக பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. ஃபிஸ்டுலா எனும் உடல் பகுதி பற்றியும் கருப்பின பெண்கள் முன்னரே அறிந்திருப்பது இதன் மூலமே தெரிய வந்துள்ளது. தங்களுக்கு கிடைத்த மருத்து உதவியை இவர்கள், தங்கள் இனத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். 

1950களில் பெண்களின் உடல்களை விரும்பியபடி பயன்படுத்தி இருக்கிறார்கள். வஜினாவில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களிடமிருந்து நுண்ணுயிரிகளை எடுத்து கர்ப்பிணிக்கு செலுத்தியிருக்கிறார்கள். நினைக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

உலகம் முழுக்க சிறுபான்மையினர் மீது இதுபோல கருத்தரித்தல் பற்றிய நிறைய பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இப்படி நடைபெற்ற பரிசோதனைகள் அதுவரை இருந்த நிறைய விஷயங்களை செயல்முறைகளை மாற்றியுள்ளன. அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த பாக்டீரியா வல்லுநர் ஹெர்மன் கார்ட்னர், இன்று நாம் கேள்விப்படும் பாக்டீரியல் வஜினோசிஸ் எனும் சோதனையை அப்போதே செய்திருக்கிறார். 

நோய்த்தொற்று ஏற்பட்டவர்களிடமிருந்து நுண்ணுயிரிகளை கர்ப்பிணியாக உள்ள பெண்களுக்கு மாற்றியிருக்கிறார் ஹெர்மன். இதன் விளைவாக, இப்பெண்களின் கணவர்களும் கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுபற்றிய முறையான ஆவணப்பதிவுகள் இல்லை. இன்று நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு நுண்ணுயிரிகளை மாற்றும் அறுவை சிகிச்சைகளை இன்னும் கவனமாக செய்யவேண்டியிருக்கிறது. தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் இதனை கவனத்துடன் ஆய்வு செய்து செய்ய நினைக்கிறார்கள். 

மனிதர்களின் உடலில் வஜினாவில் உள்ள நுண்ணுயிரிகளுக்கும் பிற விலங்குகளுக்கும் வேறுபாடு உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது?

விலங்கினங்களில் மனிதர்கள் மட்டுமே லாக்டோபாசில்லஸ் நுண்ணுயிரிகளின் தாக்கம் அதிகம் உள்ளவர்கள். இந்த நுண்ணுயிரிகள் நமது உடலைப் பாதுகாக்கவே உருவாகி இருக்கின்றன. மக்கள் இந்த நுண்ணுயிரிகளை  ராணுவம் என்று கூட சொல்லுகிறார்கள். நான் இதை தோட்டம் என்றுதான் சொல்லுகிறேன். 

நாடோடி மனிதர்கள் அவர்கள் கலாசாரம், பதப்படுத்திய உணவுகளை அடிப்படையாக கொண்டது. இதன்மூலம் வஜினாவில் லாக்டோபாசில்லஸ் நுண்ணுயிரிகள் பெருகியிருக்கலாம். மனிதர்கள் அந்த நுண்ணுயிரிகளோடு சேர்ந்து தான் வளர்ந்து வந்திருக்கிறார்கள். இப்படித்தான்  நுண்ணுயிரிகள் பாதுகாப்பான வளையமாக உருவாகியிருக்கிறது. 

இன்று வஜினல் நுண்ணுயிரிகள் தொடர்பான ஆராய்ச்சி என்பது,  புகழ்பெற்று வருகிறது அல்லவா?

நுண்ணுயிரிகள் என்பது இறப்பை ஏற்படுத்தக்கூடியது அல்ல. ஆனால் அது மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கக் கூடியது. பாலியல் மற்றும் உறவுகளையும் பாதிக்கிறது. இதுபற்றிய ஆராய்ச்சிக்கு நிதி கொடுக்க அமைப்புகள் தயாராக இல்லை. இதை நான் எப்படி புரிந்துகொள்கிறேன் என்றால், பெண்களின் வாழ்க்கை மேம்படும் ஆராய்ச்சிக்கு பணம் கொடுக்க யாரும் தயாராக இல்லை. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாத தன்மையை நோக்கி நகரவேண்டும். அப்படி மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

நியூ சயின்டிஸ்ட்

21 மே 2022

கேத்தரின் டி லாங்கே


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்