சூரியவம்சிகளை அழிக்க பாசுபாஸ்திரத்தை ஏவும் சிவன்! - வாயுபுத்திரர் வாக்கு- அமிஷ் திரிபாதி

 











சிவா முத்தொகுதி

வாயு புத்திரர் வாக்கு

அமிஷ் திரிபாதி

வெஸ்ட்லேண்ட்





முதல் இரு பாகங்களில்...

இதுவரை.....

குணாக்களின் தலைவரான சிவன், நீலகண்டர் என அடையாளம் காணப்படுகிறார். அவரை அடையாளம் கண்ட சூரிய வம்சிகள் தங்களுக்கு ஏற்ப அவரை மூளைச்சலவை செய்கின்றனர். இதனால் சோமரஸம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சந்திரவம்சிகளால் உருவானது என நம்புகிறார். இதனால் போர் நேரிடுகிறது. இதில் சந்திரவம்சிகள் தோற்றுப்போகின்றனர் அயோத்யாவின் ஸ்வத்பீட மன்னர் திலீபர், தோற்றுப்போனாலும் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சூரியவம்சிகள் பக்கம் நீலகண்டர் இருப்பது அவரை நிலைகுலைய வைக்கிறது. உண்மையில் நீலகண்டர்  சூரியவம்சி மற்றும் சந்திரவம்சிகளுக்கு பொதுவான ஆளுமை, கடவுள். இதை நீலகண்டர் உணர வாசுதேவர்கள் உழைக்கிறார்கள். டெலிபதி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறார்கள். 

சிவனுக்கு இயல்பிலேயே டெலிபதி திறன் உள்ளது. ஆனால் அதனை செயல்படுத்த சற்று உயர்ந்த இடத்திலுள்ள கோவில்களுக்கு செல்லவேண்டியுள்ளது. முதல்பாகத்தில் சிவன் நீலகண்டராக மாறுகிறார். தேவகிரி செல்கிறார். சூரியவம்சி மன்னரான தக்ஷரின் விகர்மாவான மகள் சதியைப் பார்க்கிறார். காதல் வயப்படுகிறார். சதியை தாக்கி கடத்தும் நாகர்களின் தாக்குதலை தடுத்து நிறுத்துகிறார். ஆனால் அதில் சிறந்த நாகர் ஒருவரால் சிவன் கடுமையான தாக்குதலுக்கு உட்படுகிறார். அவர் யாரென அறிய நினைக்கிறார். கூடவே விகர்மா என சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் யாரென அறிகிறார். அதனை மாற்ற நினைக்கிறார். அதில் சுயநலமும் இருக்கிறது. அப்போதுதான் சதியை மணக்க முடியும்.  சூரியவம்சிகளின் படைத்தளபதி பர்வதேஸ்வரர், மந்த்ரமலை விஞ்ஞானி ப்ரஹஸ்பதி ஆகியோரின் நட்பு சிவனை பலமாக்குகிறது. 


இரண்டாம் பகுதி....


இந்த நேரத்தில்  சிவனுக்கு நாகர்கள் யாரென தெரிந்துகொள்ள ஆர்வம் மேலிடுகிறது. அவர்கள் ஏன், சூரியவம்சிகளை தாக்குகிறார்கள். சந்திரவம்சிகளோடு இணைந்து வேலை செய்கிறார்கள் என அறிய நினைக்கிறார். இன்னொரு தனிப்பட்ட காரணம், சிவனையும் சதியையும் நாகர் ஒருவர் வலிமையாக தாக்குகிறார். அவரை சிவன், சதி என இருவராலும் சேர்ந்து கூட சமாளிக்க முடியவில்லை. நாகர் தப்பியோடும்போது குதிரை ஒன்றை எடுத்துச்செல்கிறார். அதற்கு விலையாக ஒரு பொற்காசுப்பையை எறிகிறார். அதை சோதிக்கும் சிவன் அதில் பிரம்மபுத்திரா ஆற்றையும் சந்திரகேது மன்னரின் முகத்தையும் பார்க்கிறார். அவர்களைப் பற்றி அறிய நினைக்கிறார். 

இந்த நேரத்தில் அயோத்யா இளவரசன் பகீரதனை விபத்து ஒன்றில் காப்பாற்றி அவனை நண்பனாக்கிக் கொள்கிறார். அந்நாட்டின் இளவரசி ஆனந்தமயிக்கு, சூரியவம்சி படைத்தளபதி பர்வதேஸ்வரர் மீது காதல். அதனை அவள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வெளிப்படுத்துகிறார். சிவனும் அவரை விரும்பினால் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்ல, பர்வதேஸ்வரரும் அதற்கு இணங்குகிறார். இந்த நேரத்தில் சிவன், காசியில் உள்ள ப்ரங்கர்கள் மூலமாக நாகர்களின் தேசத்தை அடைய நினைக்கிறார். இதற்கு ப்ரங்கர்களின் தலைவரான திவோதாசும் உதவுகிறார். இத்தனைக்கும் சதி தன் குழந்தையை பெற்றெடுக்க நாகர்கள் மருந்து ஒன்றை கொடுத்து உதவுகிறார்கள். இதனை அவர்கள் வாசுதேவர்கள் மூலம் கொடுக்கிறார்கள். இதனை ஆயுர்வதி பயன்படுத்த பிள்ளை இறக்காமல் நாகா ஆகாமல் ஆரோக்கியமாக பிறக்கிறது. இதை அறியும் சிவன் குழம்பிப் போகிறார். உண்மையில் நாகர்கள் யார் என ஆய்வு செய்கிறார். 

நன்மை, தீமை ஆகியவை எப்படி உருவாகின்றன என்பது பற்றிய தத்துவ விவாதம் சிவனுக்கும் வாசுதேவர்களுக்கும் நடைபெறுகிறது. இதில் அவர் தீமை என்பது மனிதர்களாக இருக்கவேண்டியதில்லை. நன்மை கூட ஒருகாலத்தில் தீமையாக மாறும் என தெளிவுபடுத்துகிறார்கள். 

மூன்றாவது பாகம்

632 பக்கங்களைக் கொண்ட நூலில், சிவன் சோமரஸத்தின் தீமையை அறிந்துகொள்கிறார். அதன் விளைவாகவே நாகர்கள் உருவாகிறார்கள். சூரியவம்சிகள் நாகர்களாக பிறக்கும் குழந்தைகளை மயிகத்தில் விட்டுவிட்டு சென்றுவிடுவதும். அவர்களை நாகர்களின் பஞ்சவடி தேசத்தினர் கப்பலில் எடுத்து வந்து வளர்ப்பதும் சிவனை அதிர வைக்கிறது. கூடவே சதியின் தங்கையான காளி, சதியின் மகனை மக்கள் தலைவனை பாதுகாத்து வளர்க்கிறாள். அவன்தான் சிவனையும், சதியையும் தாக்கி வீழ்த்திய நாகா - கணேஷ். முகத்தில் தும்பிக்கை கொண்ட மனிதன். ஆக்ரோஷமானவன். ஆனால் நிதானமான மனிதநேய இதயம் கொண்டவன். 

இதில் சிவனின் குடும்ப நிகழ்வுகளும் போர்க்கள காட்சிகளும் அதிகம் உள்ளன. சிவன் கணேஷை முதலில் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், அவன் ஏற்படுத்திய வெடிவிபத்தால் ப்ரஹஸ்பதி இறந்துபோய்விடுகிறார் என சிவன் நம்புகிறார். இதனால் கணேஷை சதிக்கு பிறந்தவன் என்றாலும் கூட நம்புவதற்கு பாசம் வைக்க மறுக்கிறார். ஆனால் கணேஷ், காசிக்கு சொந்தமான கிராமங்களை வேட்டையாடிய சிங்கங்களை மீண்டும் சந்திக்க நேரிடும்போது உயிரைக் கொடுத்து தன் தம்பி கார்த்திக்கை காப்பாற்றுகிறான். இந்த சம்பவத்தால் சிவன், கணேஷை நம்பத் தொடங்குகிறார். கணேஷை சதி ஏற்றதால் அவளைக்கூட ஏற்க சிவன் தயங்குகிறார். பேசவும் மாட்டேன் என இருக்கிறார். பிறகே மெல்ல மனம் மாறுகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அவர் ப்ரங்க தேசத்தில் கோடைக்காலத்தில் ஏற்படும் கொள்ளை நோய் மரணங்கள் பற்றியும், நாகர்கள் ஏன் உருவாகிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்கிறார். இங்கு தீமை என்பது மகத நாட்டு மக்களோ, அயோத்யா மக்களோ அல்லது நாகர்களோ அல்ல. அது குறிப்பிட்ட பழக்கம். அதுதான் கதையின் மையப்பொருள்.  

சிவனின் மூன்றாவது கண் என்பதற்கு சரியான வகையில் அறிவியல் விளக்கத்தை கொடுக்கிறார் ஆசிரியர். கூடவே அஸ்திரம் என்பதையும் இன்றைய காலத்திற்கு ஏற்ப என்னென்ன பொருட்களை வைத்து செய்திருக்கிறார்கள் என விளக்குகிறார். இதெல்லாம் தான் சிவா முத்தொகுதியை சிறப்பான நூலாக மாற்றுகிறது. 

நூலில் பலரையும் பீதிக்குள்ளாக்கும் வில்லனாக வருவது மகரிஷி ப்ருகு. இவர்தான் சோமரஸத்தைக் காக்க சூரியவம்சி, சந்திரவம்சி என அனைவரையும் திரட்டி போரை உருவாக்குகிறார். இது விதிகளின்படி நடக்கும் போர்தான். ஆனால் இடையில் வரும் தக்ஷரின் சுயநலம், போரை மிக மோசமான முடிவுக்கு கொண்டு வருகிறது. இதன் விளைவாக சதி உடலில் 51 இடங்களில் வெட்டுக்காயப்பட்டு இறக்கிறாள். இது ஒட்டுமொத்தமாக ராம பிரானின் விதிகளை கடைப்பிடிக்கும் தேசத்திற்கு அவமானமாகிறது. மனைவி இறந்துபோனதால் ரௌத்திரம் கொள்ளும் சிவன் என்ன முடிவெடுக்கிறார் என்பதே கதையின் இறுதிப்பகுதி. 

இதில் வரும் முக்கியமான பாத்திரங்கள் எகிப்திய கூலிப்படை தலைவன் ஸவுக்கத், சதிகார தளபதி வித்யுன்மாலி, வாயுபுத்ரர் தலைவர் மித்ரா, வாயுபுத்திரர் பிரபு மனோபூ, ப்ரஹஸ்பதியின் காதலி தாரா, மகத நாட்டு இளவரசன் சூரபத்மன். 


வெறும் புராணக்கதை என்று சொல்லாமல் அதில் வரும் முக்கியமான தருணங்களை அறிவியல் பூர்வமாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர் அமிஷ். அதுதான் நூலின் தரத்தை மேலும் மேலும் உயர்த்துகிறது. 


வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் மூடப்பட்டு விட்டதால், ராமச்சந்திரா முத்தொகுதி விரைவில் ஹார்பர் கோலின்ஸ் பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது. நூலின் பெயர் தி லங்கா வார். தமிழில் வெளியாகுமா என்று தெரியவில்லை. 

கோமாளிமேடை டீம் 




  

கருத்துகள்