வடகிழக்கு பெண் என்பதால் எனது மொழி உச்சரிப்பை கிண்டல் செய்தனர்! - ஆண்ட்ரியா கெவிசூசா
ஆண்ட்ரியா கெவிசூசா
இந்தி சினிமா நடிகை - அனெக் திரைப்படம்
உங்கள் பின்னணி பற்றி சொல்லுங்கள்?
நான் கோகிமாவில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு ஐந்து சகோதரிகள் உண்டு. அதில் இளையவள் நான். எனது அப்பா அங்காமி பழங்குடியைச் சேர்ந்தவர். அம்மா ஆவோ பழங்குடியைச் சேர்ந்தவள். அப்பா காலமாகிவிட்டார். பெண்களான எங்களுக்கு எதை செய்யவேண்டும், செய்யக்கூடாது என பெரிய லிஸ்ட்டே உண்டு. பெற்றோர் நிறைய கண்டிப்புடன் வளர்த்தார்கள். பத்தாம் வகுப்பு வரை லிட்டில் பிளவர் பள்ளியில் பத்தாவது வரை படித்தேன். அதற்கு முன்னர் கத்தோலிக்க பெண்கள் பள்ளியில் படித்தேன். பிறகு மேகாலயாவின் சில்லாங்கிற்கு இடம்பெயர்ந்தோம். பிறகு படிப்பு அங்கே அமைந்தது. பதினைந்து வயதிலிருந்து நான் மாடலிங் செய்து வருகிறேன்.
நடிகர் ஆவது என்பது பற்றி கனவு கண்டீர்களா?
எனக்கு சிறுவயதிலிருந்து இருந்தது ஒரே கனவுதான். மருத்துவம் படித்து மருத்துவராகி எனது கிராமமான கோகிமா சென்று மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மட்டுமே எனது ஆசை. ஆனால் நான் படிக்கும்போது எனக்கு வந்த வாய்ப்புகளை பின்பற்றி இப்போது நடிகராகி இருக்கிறேன். இப்படி கிரியேட்டிவிட்டி கொண்ட துறையில் பணிபுரிவதையும் நான் ரசித்துத்தான் செய்கிறேன்.
படித்துக்கொண்டே மாடலிங் வேலையை செய்வது கடினமாக இருந்ததா?
ஸ்மூத்தாக வாழ்க்கை சென்றது என்று கூறமுடியாது. அதனை இப்படிப்பட்ட கஷ்டம் என என்னால் வரையறுக்க முடியவில்லை. வாழ்க்கையில் இதுவும் வேறுபட்ட பாதைதான். பதினாறு வயதில் பள்ளிப்படிப்பை முடித்தபிறகு வீட்டை விட்டு கிளம்பினேன். வேலை, படிப்பு என பல்வேறு இடங்களுக்கு தனியாகவே சென்று வந்தேன். நிஜ உலகம் எப்படி இயங்குகிறது என இப்படித்தான் புரிந்துகொண்டேன்.
அனெக் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?
இந்தப் பட வாய்ப்பு கிடைத்தது பெரும் ஆச்சரியம்தான். நான் படத்தில் இடம்பெறுவதற்கு முன்னரே மும்பைக்கு இடம்பெயர்ந்திருந்தேன். அப்போது எனது ஏஜெண்ட் போன் செய்து பட வாய்ப்பு பற்றி சொன்னார். சிலரை சந்திக்க அறிவுறுத்தினார். எனக்கு இப்போது பதினெட்டு வயதாகிறது. இதில்தான் புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்க முடியும். எழுத்தாளர், இயக்குநர் அனுபவ் சின்காவை சந்தித்தேன். அவர் குத்துச்சண்டை வீரராக உள்ள அய்டோ என்ற பாத்திரத்தைப் பற்றி சொன்னார். ஸ்க்ரிப்டையும் கொடுத்தார். எனக்கு அப்போது சந்தேகமாக இருந்தது. சரியான பெண்ணைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாரா என்று. அய்டோ பாத்திரம் சுதந்திரமான வலிமையான பாத்திரம் என்பதை விரைவில் உணர்ந்தேன்.
பதற்றமாக உணர்ந்த தருணம் ஏதாவது உண்டா?
பாத்திரத்திற்கு ஏற்பட நடிப்பு பயிற்சி, குத்துச்சண்டை பயிற்சி, இந்தியை சரியாக உச்சரிக்க கற்பது ஆகியவற்றை சரி செய்துகொண்டேன். முதல் காட்சியை அசாமில் எடுத்தனர். அங்கு எனது அப்பா பாத்திரத்தில் நடிக்கும் மிபம் அட்சல் இருந்தார். நான் அய்டோ பாத்திரத்திற்குள் புகுந்துதான் நடிப்பதால் பெரிதாக பதற்றம் ஏதுமில்லை. படப்பிடிப்பு குழுவினர் எனக்கு நம்பிக்கை அளித்தனர்.
அனெக் திரைப்படம், வடகிழக்கு இந்தியாவில் உள்ள பிரிவினைகள், தீவிரவாதம், தீண்டாமை பற்றி பேசுகிறது. இந்த வகையில் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவரான உங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் ஏதேனும் உண்டா?
நாகலாந்து மாநிலத்தில் பன்முகத்தன்மை வாய்ந்த மக்கள் உண்டு. நான் இந்திய நகரங்களுக்குள் வந்தபோது என்னுடைய மொழி உச்சரிப்பை சிலர் கிண்டல் செய்வார்கள். தீண்டாமை என வரும்போது அதில் பல்வேறு அடுக்குகள் உண்டு.
உங்கள் மாநிலம் பற்றி நாங்கள் அறிந்துகொள்ள சில விஷயங்களை சொல்லுங்கள்?
நான் நாகலாந்தை பூர்விகமாக கொண்டவள். அங்கு ஏராளமான பழங்குடி இனக்குழுக்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கென தனி மொழி, உணவுமுறை, கலாசாரம் உண்டு. எங்கள் மக்கள் கருணையான, மனிதநேயமிக்கவர்கள். நிலத்தோடு இறுக்கமாக பிணைந்தவர்கள். வடகிழக்கு இந்தியா முழுக்க எனக்கு தெரியும் என்றோ, அவர்களுக்கு நாகலாந்து முழுக்க தெரியும் என்றோ உறுதியாக கூற முடியாது. நாகலாந்திற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். எங்கள் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். அது மகிழ்ச்சி தருகிறது.
ஃபிலிம்ஃபேர்
கருத்துகள்
கருத்துரையிடுக