மேற்கு நாடுகள் ஹூவாவெய் மீது நடத்திய வன்ம தாக்குதல்!

 











ஹூவாவெய், உலகளவில் முக்கியமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம். சிறந்த நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றியும் வந்தது. ஆனாலும் அதன் பூர்விகம் சீனா என்பதை யாரும் மறக்கவில்லை. இதை ரென் உணர்ந்தபோது நிறுவனத்தின் பெயரை ஊடகங்கள் வெறுப்புடன் உச்சரித்துக்கொண்டிருந்தனர்.
 
2005ஆம் ஆண்டு சீனாவில் ஹூவாவெய் நிறுவன அலுவலகத்தில் வேலை செய்த பணியாளர் மூளை அழற்சியால் இறந்துபோனார். உடனே அந்த விவகாரத்தை கையில் எடுத்த ஊடகங்கள், அய்யகோ மெத்தை கலாசாரம் தொடங்கிவிட்டது. அதனால்தான் இப்போது ஒரு உயிர் போய்விட்டது என கூக்குரலிடத் தொடங்கின. மேலும் விவரங்கள் தெரியவேண்டுமா? விளம்பரத்திற்கு பிறகு பாருங்கள் என ஸ்க்ரோல் செய்திகள் போட்டன.
 
ஹூவாவெய் நிறைய விஷயங்களில் மாறியிருந்தது. ஆனால் கலாசாரம் சார்ந்த விஷயங்களில் பெரிய மாற்றமில்லை. காரணம், ரென்னின் ராணுவப்பணிதான். முன்னமே ரென் சில கொள்கைகளை பின்பற்றுகிறார் என குறிப்பிட்டிருந்தோம். அது வேறொன்றுமில்லை. ராணுவத்தில் இருக்கும் முக்கிய கொள்கையான கீழ்படிதல். அந்த இயல்பு இல்லாமல் ராணுவத்தில் ஒருவர் வேலை செய்யமுடியாது. மேலதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். இல்லையென்றால் அது கடுமையான தண்டனைக்குரிய குற்றம்தான். இதை தான் ரென் தனது நிறுவனத்தில் அமல்படுத்தினார். நவீன பெருநிறுவனங்கள் எல்லாவற்றிலும் ராணுவ ரீதியிலான வெற்றி பெற்ற கொள்கைகள் உண்டு.
 
நாம் பெற்ற அனுபவங்களிலிருந்து கற்கும் கொள்கைகளைத் தான் பிறருக்கு சொல்வோம். அதைத்தான் பின்பற்றுவோம். இதைத் தான் ரென் செய்தார். ஆனால் ஊழியர் ஒருவர் நோயால் இறந்துபோனதற்கு கூட ரென்னின் கொள்கைகள்தான் காரணம் என வதந்தி பரவியது. இதில் ரென்னுக்கு அதிர்ச்சி தந்த இன்னொரு விஷயம், இணையத்தில் தவறான செய்திகளை வதந்திகளை எழுதியவர்கள் கூட ஹூவாவெய் நிறுவன ஊழியர்கள்தான்.
 
ரென், அதன் நிறுவனர்களிடமிருந்து ஹூவாவெய்யை தனியாக பிரித்து செயல்படும்படி செய்தார். மேலும் பல்வேறு முடிவுகளை சுய விமர்சனம் செய்ய ஊக்குவித்தார். இதனால் ஹூவாவெய் பல்வேறு தவறுகளை சரிசெய்து தன்னை மாற்றிக்கொள்ளும் என ரென் நினைத்தார்.
 
ஹூவாவெய் நிறுவனம் ஆன்லைன் ஃபாரம் ஒன்றை உருவாக்கியது. அதில் நிறுவனம் பற்றிய கருத்துகளை, திட்டங்களை ஊழியர்கள் விமர்சனம் செய்யலாம் என கூறப்பட்டது. அதில் நேர்மறை, எதிர்மறை, கேலி, கிண்டல், புகார்கள், அவதூறு, வதந்தி எல்லாமே நிறைந்திருந்தது. ஊழியர் ஒருவர் அதில் பிராந்திய அதிகாரி பற்றி புகார் கூறினார். அதுபற்றி கேள்விப்பட்ட ரென், அவருக்கு என்னுடைய ஐடியைக் கூட கொடுங்கள். பேசுகிறேன் என்றார். அவருக்கு மூடப்பட்ட அறைகளுக்குள் விவாதம் நடத்துவதில் பெரிய விருப்பமில்லை. அப்படி எடுக்கும் முடிவுகள் நிறுவனத்தை தொலைநோக்கில் பெரிய சிக்கலுக்குள் கொண்டு வந்து விடும் என ரென் உறுதியாக நம்பினார்.
 
2010ஆம் ஆண்டு ஹூவாவெய் நிறுவனம், ஊடகங்களில் நேர்காணல்களை செய்திகளை பகிர்ந்துகொள்ள தொடங்கினர். அதற்காக ஊடகவியலாளர்களை தோளோடு தோள் சேர்த்து ரென் அணைத்தாரா என்று கேட்க கூடாது. இதுவரை செய்திகளைஅதிகம் பகிராத சூழலை வளரும் பொருளாதாரம் சார்ந்து ரென் மாற்றிக்கொண்டார். அதற்காக ஊடகங்களுக்கு மிக நெருங்கிய நண்பராக இருக்க ரென் விரும்பவில்லை. ஊழியர்களுக்கும், ஊடகச்செய்தி மேலாளருக்கும் இதையே அறிவுறுத்தினார். தொழில் நிறுவனம் ஊடகங்களோடு நட்பாக இருப்பது ஆபத்தையே ஏற்படுத்தும் என ரென் நம்பினார். வரலாற்றில் அவர் கற்றுக் கொண்டதும் அதுதானே?
 
 
ஆசியாவைச் சேர்ந்தவர்கள் உலகின் பெருநிறுவனங்களுக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு என்ன காரணம், அரசின் சேவைகளைப் பெறக்கூட மக்கள் அடித்துப் பிடித்துதான் முன்னேற வேண்டியிருக்கிறது. குறிப்பாக உயர்கல்வியில் தேர்வுகள் எழுதி தங்களை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இத்தேர்வுகளில் ஆயிரம் வென்றால், லட்சம் பேர் தோற்கிறார்கள். இப்படி வருபவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றுகொண்டே இருக்கிறார்கள். இவர்கள் சிறந்த தலைவர்களாக இருப்பார்களா என்று காலம் பதில் சொல்லும். ஆனால் சிறந்த மேலாளர்களாக இருக்க முடியும். வேலையில் திறமை காட்டுவது யாராலும் சாத்தியம். ஆனால் மனிதர்களை நிர்வாகம் செய்வது சிலரால் மட்டுமே  செய்யக்கூடிய காரியமாக உள்ளது. அதைத்தான் ஆசியாவில் குறிப்பாக இந்தியர்கள் மேற்கு நாடுகளில் உயர்பதவிகளை பெறுவது நிரூபிக்கிறது.
 
ரென் இந்த வகையில் வேறு மாதிரி யோசித்தார். திறமையை விட கலாசாரம் சார்ந்து நம்மை விமர்சிக்கிறார்கள். புறக்கணிக்கிறார்கள். எனவே, நாம் மேற்குலக வரலாற்றை அறியவேண்டும் என நினைத்தார். அவர் மட்டுமல்ல, அவரது நிறுவன ஊழியர்கள் அனைவருமேதான். ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய  மேற்குலக நாடுகளுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உண்டு. அவை அனைத்துமே நிலப்பரப்பு, மக்கள்தொகை ஆகியவற்றில் சிறியவைதான். ஆனால், வணிகம் என்ற ஒற்றைச் சிந்தனை தான் பல்வேறு நாடுகளை காலனி நாடுகளாக்கியது. பலகோடி மக்களை சில ஆயிரம் ராணுவ வீரர்கள் அவலமான முறையில் அடிமைப்படுத்தி ஆட்சி செய்தனர். சீனாவில் இந்த முறையில் பிரிட்டிஷ் ஆட்சி போதைப்பொருட்களை மையமாக வைத்து நடைபெற்றது. அதை சீனர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.  மேற்கு நாடுகளில் அழிவைத் தடுக்க சமரச உடன்படிக்கை உண்டு. ஆனால் சீனாவில் சமரசம் என்பதே ஆத்திரம் தரும் வார்த்தை.
 
ஹூவாவெய்யின் வணிகத்தை விமர்சிப்பவர்கள், அதனை நிர்வாகம் செய்பவர்கள், அதன் பூர்விக  கலாசாரத்தை புரிந்துகொள்ளவில்லை. பூனைக்கண்ணில் பார்த்தால் எதுவும் குற்றம்தானே?

Image - dreamstime

 
 
 

கருத்துகள்