ஃபிளேவர்ட் மில்க் மார்க்கெட்டை நூதனமாக பிடித்த பார்லே அக்ரோ!

 


நாடியா சௌகான், பார்லே அக்ரோ

ஃபிளேவர்ட் மில்க் பிராண்டுகளை சூப்பர் மார்க்கெட்டில் அல்லது மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள பஜார் தெருவில் சீமாட்டி கூல்ட்ரிங்க்ஸ் கடையில் கூட வாங்கியிருப்பீர்கள். குறைந்தபட்சம் அதில் பிரிட்டானியா, அமுல், நெஸ்லே, ஐடிசி பிராண்டுகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 

ஃப்ளேவர்ட் மில்க் பொதுவாக இருபது ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதில் தனிப்பெரும் நிறுவனமான ஆதிக்கம் செலுத்துவது அமுல்தான். அதற்குப் பிறகுதான் பிற நிறுவனங்கள் வரும். ரூ.20, 25, 35, 40 என விலை வரிசை போகிறது. இதை ஒரே ஒரு நிறுவனம் அண்மையில் மாற்றியிருக்கிறது. அதுதான் பார்லே. பிராண்டின் பெயர் உங்களுக்கே தெரியும் ஸ்மூத். எல்லோரும் 180 மில்லி 20 அல்லது 25, 35, 40 என சொகுசாக விலை வைக்க பார்லே சல்லீசான ரேட்டில் பிராண்டை சந்தையில் இறக்கியது. எவ்வளவு என நினைக்கிறீர்கள். 85 மில்லி. ரூ.10 தான். ஹிட்டல்ல. மாஸ், மெகா ஹிட். 

பார்லே அக்ரோவின் இயக்குநர் நாடியா சௌகான், தனது பிராண்டின் வெற்றியை எங்கே அடையாளம் கண்டார் என்பதே முக்கியமானது. சில மாதங்களுக்கு முன்னர், படல்கங்கா ஆற்றுப்பக்கம் ரிலாக்ஸ் செய்வதற்காக சென்றார். அங்கிருந்த சாகியாத்திரி மலையில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் பார்லேவின் ஸ்மூத் பிளேவர்ட் மில்க் இருந்தது. அதுதான் அவருடைய லட்சியம் வெற்றி பெற்றுவிட்டதை உணர்த்தியது. 

பின்னே, பெரு நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுவிட்ட துறைதான் ஃப்ளேவர்ட் மில்க் துறை. அதில் அமுலை, பிரிட்டானியாவை, ஐடிசியை, கவினை வெல்வது என்றால் சும்மாவா? விலையைக் குறைத்து அதனை கிராமங்களில் கிடைக்கச்செய்ததுதான் நாடியாவின் வெற்றி ரகசியம். அளவில் சிறியது விலையும் குறைவு என்பதால் ஸ்மூத் சந்தையில் மெகாஹிட்டாகி விட்டது. 

நானும் எனது அலுவலக சகா காந்தி ராமனும் ஸ்மார்ட் பாய்ண்ட் கடையில் ஸ்மூத் வாங்கி பருகிவிட்டுதான் இந்த உண்மையை உணர்ந்தோம். நாடியா சௌகான் உண்மையிலேயே புத்திசாலிதான். இல்லையென்றால் மும்பையில் போட்ட திட்டத்தின் பயனை நாம் தமிழ்நாட்டில் பெற முடியுமா என்ன?

பார்லே அக்ரோவின் தற்போதைய வருமானம் 2,378 கோடியாக உள்ளது. ஸ்மூத் பிராண்டின் 50 சதவீத வருமானம் கிராமங்களிலிருந்து தான் வருகிறது. செப்டம்பர் 2021இல் அறிமுகமான ஸ்மூத் ஃப்ளேவர் மில்க், ஏழே மாதங்களில் 300 மில்லியன் பாக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. சந்தையில் பத்து ரூபாய்க்கு கேட்பரி சாக்லெட்டை வாங்கலாம். ஆனால் அதை வாங்குவதை விட எங்கள் ஸ்மூத் பாக்கெட் உங்கள் வயிற்றை திருப்திபடுத்தும் என்று புன்னகையோடு பேசுகிறார் நாடியா சௌகான். 

ஃப்ளேவர்ட் மில்க் சந்தை 800 கோடியாக உள்ளது. அதில் ஸ்மூத் பிராண்டின் பங்களிப்பு 33 சதவீதமாக உள்ளது. 2001இல் என் ஜோய் எனும் ஃப்ரூட் மில்க் பிராண்டை பார்லே அக்ரோ உருவாக்கியது. ஆனால், பால் சரியாக கிடைக்காத காரணத்தால் நான்கே ஆண்டுகளில் பிராண்டை திரும்ப பெற்றுக்கொண்டது. 

பார்லே அக்ரோவின் ஸ்மூத்திற்கு போட்டியாளர்களே இல்லை என கூறமுடியாது. உள்ளூர் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மகராஷ்டிரத்தில் ஆரே, தமிழ்நாட்டில் அருண், ராஜஸ்தானில் சரஸ் ஆகிய பிராண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனர். 

ஃபோர்ப்ஸ் இந்தியா

வர்ஷா மேகானி 

  
கருத்துகள்

பிரபலமான இடுகைகள்