5 ஆயிரம் நன்கொடை வழங்கலாமே! கடிதங்கள்

 

 Pills, Medicine, Prescription, Healthcare, Medical

 

 

 

 

 மருந்தே உணவு !

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.


நலமா? இந்த வாரம் ஊருக்கு சென்று அம்மாவுடன் ஈரோடு சித்த மருத்துவமனைக்கு சென்றேன். எனக்கு ஒவ்வாமை மருந்துகளுடன் அம்மாவுக்கு தலைசுற்றல் பிரச்னைக்கு கிலோ கணக்கில் கஷாயம், மாத்திரைகள், லேகியங்களை வாங்கி வந்தோம். அம்மாவுக்கு நரம்புரீதியான பிரச்னை தீவிரமாகிக்கொண்டே வருகிறது. அலோபதி அவளுக்கு பெரிதாக கேட்கவில்லை. எனவே நானே சித்தமருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். எந்த பிரச்னைக்கும் அடுத்தவர்களை மட்டுமே குறைசொல்லும் அற்புத குணம் கொண்டவள், என்னுடைய யோசனையை உடனே ஏற்றுக்கொண்டாள். சித்த மருந்துகளை சாப்பிடுவதில் உள்ள பிரச்னை பத்தியம்தான். மருந்து கால் பகுதி, பத்தியம் முக்கால் பகுதி என சாப்பிட்டால் உடலின் தன்மையே சில மாதங்களுக்கு பிறகு மாறிவிடுகிறது.


எனக்கு கத்தரிக்காய், கிழங்கு வகைகளை தவிர்க்க சொல்லிவிட்டதால் ஹோட்டலில் அவற்றை பரிமாறுவதை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது, இவற்றை சாப்பிட்டு. நானே சமைத்து சாப்பிட்டு வருவதால் அதிக சிக்கல்கள் இல்லாமல் வாழ்க்கை செல்கிறது. எங்கள் அலுவலகத்திற்கு எதிரேயுள்ள பத்திரிகையில் வேலை பார்ப்பவர்களுக்கு கொரோனா வந்து விட்டது. ஆனாலும் எங்களுக்கு விடுமுறை கொடுக்கப்படவில்லை. ஆனால் விரைவில் வீட்டில் வேலை பார்க்கும்படி நிலைமை மாறலாம் என நினைக்கிறேன். இதுதான் நாம் உயிரை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி. அலுவலக வேலைகளோடு நம் சொந்த வேலைகளையும் எளிதாக பார்த்துக்கொள்ளலாம். பார்ப்போம்.

சந்திப்போம்


.அன்பரசு








==================================


Donate, Charity, Giving, Give, Aid, Money, Donating


நன்கொடை கொடுங்க சார்!


மயிலாப்பூர்

22.3.2021



அன்பிற்கினிய தோழர் கதிரவனுக்கு, வணக்கம்.


நலமா?


எனக்கு உடலில் ஒவ்வாமை பிரச்னை குறைந்து மீண்டும் தொடங்குவதுமாக உள்ளது. மாதம் இதற்கென 2500 ரூபாய் தோராயமாக செலவாகிறது. ஏகப்பட்ட நெய்மருந்துகள், கஷாயம், கழிவை வெளியேற்றுவதற்கான மாத்திரைகள் என உடலே முழுமையான பரிசோதனைக் கூடமாக மாற்றிவிட்டது. உடலும் மனதும் ஒத்திசைவாக செயல்படவில்லை. மனதின் வேகத்திற்கு உடல் எப்போதும் ஈடுகொடுக்க மறுக்கிறது. நேற்று வடபழனி சென்றேன். மோகன் அண்ணா அறையில் சமைத்து சாப்பிட்டோம். டீஷர்ட் பழசாகி கிழிந்து விட்டதால் பிக் பஜார் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றோம். அங்கு சென்றது ரூ. 500க்கு பொருள் வாங்கத்தான். அங்கு பார்த்தால் இரண்டு டை கட்டிய ஆசாமிகள் யுனிசெப்பில் குழந்தைகளுக்காக நிதி சேகரிக்கிறோம் என ரூ.5 ஆயிரம் பணம் கேட்டனர். எனக்கு திகைப்பாகிவிட்டது. எந்த நம்பிக்கையில் இப்படி வந்து பணம் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. பிக் பஜார் மாதிரியான நிறுவனமே யுனிசெப்பிற்கு பணம் கொடுத்துவிடலாம். எதற்கு அவர்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்ய அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.


பத்திரிகையில் வேலை செய்யும் நானும், உதவி இயக்குநராக உள்ளவரும் எப்படி ரூ. 5 ஆயிரம் நிதி அளிக்க முடியும்? முடிந்தவரை இனி அந்த கடைகளுக்கு சென்றால் டை கட்டிய ஆசாமிகளை தவிர்த்துவிட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு வரவேண்டும் என நினைக்கிறேன்.


அடுத்தமுறை லாக் டௌன் வந்துவிட்டது என்றால் நான் செய்யும் வேலை இருக்குமா என்று தெரியவில்லை. வேலையில் இப்போது சரிவில் இருக்கிறேன். புதிதாக வந்துள்ள ஒருங்கிணைப்பாளரிடம் நான் பெரிதாக பேசுவதில்லை. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தலையில் கொம்பு முளைத்தவர்களிடம் பழகுவது கடினமாகத்தானே இருக்கும். வேலையை செய்வது, சரியான நேரத்தில் அறைக்கு திரும்புவது என அலுவலக வாழ்க்கையை நகர்த்திக்கொள்வது இப்போதைக்கு சரியானது. வீட்டில் வேலை செய்வது என்பதை நோக்கி அலுவலகப்பணி நகர்ந்து வருகிறது.


சந்திப்போம்


.அன்பரசு




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்