சலூன் நடத்தியபடியே இலக்கிய சிற்றிதழை நடத்திய மனிதர்! - கடிதங்கள்
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது. பகலில் மட்டுமல்ல இரவிலும் கூட பயங்கரமாக புழுங்குகிறது. கீழே உட்கார்ந்து வேலை செய்வது கடினமாக உள்ளது. தேர்தல் முடிந்தபிறகு ஈரோடு செல்வேன் என்று நினைக்கிறேன். எழுதுவதற்கான விஷயங்களை மெல்ல திரட்டி வருகிறேன். படிப்பதற்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும். ஐ யம் அலைவ் என்ற வெப் தொடரை எம்எக்ஸ் பிளேயரில் பார்த்தேன். தமிழில் பார்க்க முடியும். புனைவு கலந்த தொடர். போலீஸ்கார தந்தை குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர். தனது இரண்டு பெண்களின் மீதும் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார். சீரியல் கொலைகாரன் ஒருவனை பிடிக்கப் போகும்போது, அவரது சகா உதவிக்கு வர மறுத்து சூதாட்டத்திற்கு சென்றுவிடுகிறார். அவனை பிடிக்கும் நினைக்கும்போது, எதிராளியின் தாக்குதலில் இறந்துபோய் விடுகிறார்.
இறந்த போலீஸ்காரருக்கு திரும்ப உலகிற்கு வர வாய்ப்பு கிடைக்கிறது. போலீஸ்காரராக
இருக்கும் மற்றொரு மனிதரின் உடலில் ஆன்மா புகுகிறது. இவரும் வேலை பார்ப்பது, இறந்த போலீஸ்காரரின் பெண் டிடெக்டிவாக உள்ள காவல்நிலையம்தான். எப்படி தனது குடும்பத்தோடு ஒன்றாக சேர்கிறார். அதற்கு பிரச்னையாக வரும் மனிதர்கள் யார், இதற்கிடையே சீரியல் கொலைகாரனை துரத்துதல் என சுவாரசியமாக தொடர் செல்கிறது. குடும்பம், காமெடி, நெகிழ்ச்சி, கடமை என அனைத்து பாக்ஸ்களிலும் டிக் அடிக்கும் பிரமாதமான தொடர் இது. நேருவின் சுதந்திர காலத்திற்கு முந்தையை உரைளளை படித்து வருகிறேன். இவரின் உரைகளை தமிழில் எழுத முயல்வேன். பார்ப்போம். எந்தளவு சாத்தியம் ஆகிறதென.
நன்றி! சந்திப்போம்
ச.அன்பரசு
========================================================
வடக்குப்புதுப்பாளையம்
11.4.2021
அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
உங்கள் குடும்பத்தினரிடம் எனது அன்பை தெரிவியுங்கள். இப்போது ஊருக்கு வந்துவிட்டேன். சென்னையில் நிலைமை எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. மொடக்குறிச்சி தொகுதியில் தாமரைக்கட்சி போட்டியிட்டது. எங்கள் பகுதியில் மட்டுமல்லாமல் ஊர் முழுக்க வாக்காளர்களுக்கு பணத்தை மொத்தமாக பட்டுவாடா செய்துவிட்டதால் வெற்றி உறுதி என்றே நினைக்கிறேன். எனக்கு இப்படி வாக்களிப்பதில் விருப்பம் இல்லை.
டொமினிக் ஜீவா என்பவர் எழுதிய அனுபவப்பயணம் என்ற நூலை படித்தேன். மல்லிகை என்ற இலக்கிய நூலை நடத்திய எழுத்தாளரின் அனுபவத்தை பேசுகிறது நூல் இது. ஜீவா, தமிழ்நாட்டிற்கு வந்து ஜெயகாந்தன், பிரபஞ்சன் என பல்வேறு எழுத்தாளர்களை சந்தித்துவிட்டு சென்றிருக்கிறார். சலூன் கடை நடத்தியபடியே இலக்கிய சிற்றிதழை நடத்தி வந்திருக்கிறார். நிறைய இடங்களில் தற்பெருமை அதிகமாகிவிட்டதோ என சந்தேகமாக உள்ளது. பொருளாதாரம் தன்னை வதைத்தபோதும், இலக்கியம் சார்ந்த மனதின் குரலுக்கு காது கொடுத்து கேட்டு கஷ்டப்பட்டுள்ளார். தன்னை அவதூறு செய்தவர்களையும் நூலில் விளாசியுள்ளார். இனி தொழில்சார்ந்த நூல்களை வாசிக்க வேண்டும். பார்ப்போம்.
நன்றி!
ச.அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக