எனக்கு கிடைத்த மறக்க முடியாத நண்பர் நீங்கள்! கடிதங்கள்

 

 

 

 

 Woman, Reading, Line Art, Read, Books, Education, Learn

 

அன்பு நண்பர் கதிரவனுக்கு, நலமா

 

உங்கள் வீட்டில் உள்ளவர்களும் நலமாக இருப்பார்கள் என நினைக்கிறேன். பெருந்தொற்று காலகட்டத்தில் வேலையை காப்பாற்றிக்கொள்வதே கடினமாக உள்ளது. இதழ்களில் விளம்பரங்கள் கிடைப்பது வெகுவாக குறைந்துவிட்டது. பொதுவாக அனைத்து தொழில்களும் தள்ளாடி வருகின்றன. பொதுமுடக்கம் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளது. நீலகண்ட பறவையைத் தேடி என்ற நாவலின் சில பகுதிகளை படித்தேன். வங்கதேச முஸ்லீம்களின் வாழ்க்கையை பேசும் நூலில் 60 பக்கங்கள் நிறைவு பெற்றுள்ளன.


இப்போதுள்ள நிலையில் மனநிலையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு வேலையை செய்வது கடினமாக உள்ளது. படங்கள் பார்ப்பதை விட யூட்யூபில் டிவி தொடர்களை பார்த்து வருவதே எனது பொழுதுபோக்காக மாறிவிட்டது. கொரிய டிவி தொடர்களில் புதிய ஐடியாக்கள், பாத்திரங்கள், இந்திய மனநிலை, மதிப்புகள் என நிறைய விஷயங்களை அழகாக பேசுகிறார்கள். பேரிளம் பெண்ணின் அழகிய வனப்பும் வளங்களும், குழந்தையின் மனமுமாக கொரிய டிவி தொடர் பெண்கள் காட்டப்படுவது புதுமை.


சீரியல் கொலைகாரர்களின் மனநிலை பற்றிய நூல்களை படித்து வருகிறேன். இதனை எதிர்வரும் நாட்களில் தனி நூலாக எழுதுவேன். அலுவலகப் பணிக்குப் பிறகு நூல் எழுதும் பணிகளை செய்ய நினைக்கிறேன். கூடுதலாக ஃப்ரீதமிழ்இபுக்ஸ் தளத்தில் தாய் - மார்க்சிம் கார்க்கியின் நாவலையும் படித்து வருகிறேன். தொ.சி. ரகுநாதனின் மொழிபெயர்ப்பு. முன்னமே நூலாக வாங்கி படிக்க நினைத்தாலும் எண்ணம் கைகூடவில்லை. இப்போது பிடிஎப் வடிவில் கிடைத்துவிட்டது. பாவெல் என்ற இளைஞன், அவனிம் அம்மா ஆகியோர் முக்கிய பாத்திரங்கள். ஜார் மன்னரின் ஆட்சிக்கு எதிரான சோசலிச கட்சியின் போராட்டம்தான் முக்கியமான மையம்.



நன்றி! சந்திப்போம்.


.அன்பரசு



=====================================



ProBeat: WFH tips I've learned after working from home for 12 years ...


26.5.2021


அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


எங்களது ஊரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கணினியில் வேலை செய்வது , சாப்பிடுவது, தூங்குவது, வீட்டிலேயே இருப்பது என நேரம் கழிகிறது. கிடைக்கும் நேரத்தில் போனிலுள்ள வெப்சீரிஸ்கள் மட்டுமே மனதைக் காப்பாற்றுகிறது. மார்சியல் யுனிவர்ஸ் என்ற வெப்சீரிசை பார்த்தேன். 42 எபிசோடுகள் கொண்ட தொடர் இது. 8 தாயத்துகள் உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து இளைஞன் ஒருவன் ஒன்று சேர்க்கவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அரக்கனை அழிக்க முடியும். உலகைக் காப்பாற்ற முடியும். அமைதியை நிலைநாட்ட முடியும். லின் வம்சத்தைச் சேர்ந்த தற்காப்புக்கலையை அரைகுறையாக கற்ற கோபக்கார இளைஞன், எப்படி வீரனாக மாறி உலகை காப்பாற்றுகிறான் என்பதே கதை. தொடர் முழுக்க வீரர்கள் நடந்தே செல்வதால், நமக்கு பார்க்கும்போதே களைப்பாகிறது.


நன்றி! சந்திப்போம்


.அன்பரசு


===========================================

Men, Friends, Face Mask, Pandemic, Virus 

 

 

 

திருநெல்வேலி

17.7.2021


அன்பு நண்பர் அன்பரசுக்கு வணக்கம்.


நான் இங்கு நலம். அதுபோல அங்கு உங்கள் நலமறிய ஆவல். நான் சென்னையில் வேலைபார்த்தபோது எனக்கு கிடைத்த நல்ல நண்பர்களில் நீங்களும் ஒருவர். என்னுடன் பள்ளி, கல்லூரி, பல்கலைழக்கழகத்தில் படித்த நண்பர்கள் கூட என்னைப் பற்றி நினைத்துப் பார்க்க நேரமில்லாது இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் சில ஆண்டுகள் ஒன்றாக வேலைபார்த்த அன்பில் அன்றிலிருந்து இன்றுவரை நண்பராக தொடர்வது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மறக்க முடியாத நண்பர் நீங்கள். தாங்கள் எழுதிய கடிதங்களை உங்களுக்கு இத்தோடு இணைத்து அனுப்பியுள்ளேன். மேலும் கூடுதலாக சில அஞ்சல் அட்டைகளையும் இணைத்துள்ளேன்.


சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடலை நோய்நொடிகளின்றி நல்ல முறையில் பராமரித்துக்கொள்ளுங்கள். அதோடு உங்கள் பெற்றோரின் உடல்நலனிலும் அக்கறை செலுத்துங்கள். உங்கள் எழுத்துப்பணிகள் இந்த சமூகத்திற்கு உதவும் வகையில் அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இப்படி உங்கள் அன்பை என்று மறவாத நண்பன்


. கதிரவன்
































கருத்துகள்