கிராமங்களை விட்டு வைக்காத நோய்த்தொற்று! - கடிதங்கள்

 

 

வேலையைக் காப்பாற்றிக்கொள்ள சம்பள வெட்டு!

வடக்குப்புதுப்பாளையம்

19.4.2021


அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


சென்னையில் அறையில் வெப்பக் கொடுமை என்றால் வீட்டில் ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் இரும்புக்கூரை உள்ள அறையில் வேலை செய்கிறேன். இது வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டப்பட்டது. வீட்டின் மற்ற அறைகள் சிறியவை. வேலை செய்வதற்கு காற்றோட்டமாக இல்லை. அடுத்த ஆண்டிற்கான வேலைகளை செய்து வருகிறோம். இந்த ஆண்டில் வேலையை காப்பாற்றிக்கொண்டு முழு சம்பளம் வாங்குவது கடினமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.


ஜீரோ டு ஒன் என்ற தொழில்சார்ந்த நூல் ஒன்றை பிடிஎப் வடிவில் போனில் படித்தேன். ஸ்டார்ட்அப் நிறுவனங்களை எப்படி தொடங்குவது, என்ன மாதிரியான அணுகுமுறை வெற்றியைக் கொடுக்கும் என பல்வேறு கருத்துகள் நூலில் இருந்தன. 180 பக்கங்கள்தான். நூல் ஆங்கிலம் என்பதால் புரிந்துகொண்டு வாசிக்க காலதாமதமாகிவிட்டது. தொழில் நிறுவனங்களின் சூப்பர் ஐடியா, சொதப்பல் ஐடியா, தொழில் சார்ந்த மூடநம்பிக்கைகள் என நிறைய விஷயங்களை ஆசிரியர் பேசியிருக்கிறார். அமெரிக்க தேசி என்ற நாவலைப் படித்தேன். அருண் நரசிம்மன் என்ற இயற்பியல் விஞ்ஞானி எழுதியுள்ளார். பிரமாதமான எழுத்தாற்றல் உள்ள மனிதர். 712 பக்கங்கள் உள்ள நூலில் காதல், சாதி, பழிவாங்குவது, காமம், இனவெறுப்பு, அமெரிக்க வாழ்க்கை, பல்வேறு நாட்டு மனிதர்களின் கலாசாரம் என முடிந்த அனைத்தையும் அழகாக எழுதியுள்ளார். வாசிப்பு அற்புதமாக இருந்தது.


சந்திப்போம்.


.அன்பரசு




==========================================================

 

Teachers, Meeting, Books, Reading, Group, Discussion

பதற்றமும் நோய்த்தொற்றும்

 

7.5.2021


அன்புத்தோழருக்கு, வணக்கம். தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நலமா?


செய்திகளுக்காக வெளியில் அலைவதால் தடுப்பூசிகளை நம்பிக்கை இருந்தால் போட்டுக்கொள்ளுங்கள். இப்போது நாளிதழில் எனக்கு முன்பிருந்த செம்மைப்படுத்தும் பணி இல்லை. தனிப்பக்கம் மட்டும் பார்த்துக்கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டனர். ஒருவகையில் இது பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது. ஆயுள், வேலை என இரண்டுமே உலகில் எப்போது நிரந்தரமாக இருந்துள்ளது.


அலுவலகப் பணியின்போது அடுத்து படிக்க வேண்டிய மின்னூல்களை தரவிறக்கினேன். நேரம் கிடைக்கும்போது அவற்றை எடுத்து படிக்க வேண்டும். சில நூல்களை இப்போதே எடுத்து படித்து வருகிறேன். எனக்கு தொழில்சார்ந்த முயற்சிகள்,யோசனைகள், அதில் வெற்றி பெற்றவர்களைப் பற்றி படிப்பதில் ஆர்வமுண்டு. இதற்காகவே முத்தாரத்தில் ஸ்டார்ட்அப் மந்திரம் என்ற தொடரை எழுதினேன். எழுதும்போது அதிக ஆராய்ச்சி செய்ய நூல்கள் கிடைக்கவில்லை. அப்போது கையில் இருந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை மட்டுமே. அதனை எழுதி முடித்து பிரதிலிபி தளத்தில் இலவசமாக வெளியிட்டேன். ஆனாலும் முழுமையாக திருப்தி கிடைக்காத தொடர் என்பதை மனம் திறந்து சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை.


முகேஷ் அம்பானி பற்றிய நூல் ஒன்றை கிழக்கு பதிப்பக வெளியீடாக படித்தேன். 150 பக்கம்தான். ஆனால் முகேஷ் பற்றிய நிறைய தகவல்களை கூறுவதாக புத்தகம் உருவாக்கப்படவில்லை. பொதுவான தகவல்களை வைத்தே நூலை எழுதியிருந்தனர். ஆங்கிலத்தில் நூல்களை வாசிப்பதில் இன்னும் வேகம் கூடி வரவில்லை. ஆங்கில வார்த்தைகளுக்கான பொருட்களைப் புரிந்துகொண்டு படிப்பது கடினமாக உள்ளது. இந்த ஆண்டு நோய்த்தொற்று பிரச்னை எப்படி செல்லும் என்று தெரியவில்லை. ஈரோட்டிலும் அதிக நோய்த்தொற்று பிரச்னை உள்ளது. வீட்டிற்கே வந்து அடிக்கடி சோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள். முழு ஊரும், பஞ்சாயத்து அதிகாரிகளும் பதற்றத்திலேயே இருக்கிறார்கள்.


சந்திப்போம்


.அன்பரசு





கருத்துகள்