வசியம் வைத்து பெண்ணை மயக்கலாம்! - கடிதங்கள்

 

 

 Man, Skull, Skull And Crossbones, Necktie, Men'S Suit

 

6

வசியம் வைப்போமா?

வடக்குப்புதுப்பாளையம்

16.1.2021


அன்புள்ள தோழர் சபாபதிக்கு வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? எங்கள் ஊரில் ஒருவழியாக மேகமூட்டம் விலகி இப்போதுதான் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் எங்கள் சின்ன மாமாவைப் பார்க்க போயிருந்தோம். சிவகிரியில் டூவீலர் மெக்கானிக்காக உள்ளார். அவர் கொடுத்த டீ, காபி காக்டெயில் பானத்தை விட கசப்பாக இருந்தது அவர் அறிமுகப்படுத்திய விஷயங்கள்தான். எனது ஜாதகத்தை தாந்த்ரீகர் ஒருவரிடம் கொடுத்து பேச சொன்னார். அவர் லூனாவில் வந்திறங்கி மாமாவின் வீட்டுக்கு வந்தது முதல் வினோதமாக இருந்தது.


வம்சாவளியாக பில்லி, சூனியம், வசியம் வைக்கிற ஆள் என்று அவராகவே சொல்லிக்கொண்டார். எனக்கு அவர் சொல்ல சொல்ல வயிற்றுக்குள் ஏதோ உருண்டு புரள்கிற அவஸ்தை தொடங்கியது. அம்மா எப்போதும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் எப்போதும் பேசுபவர் அமைதியாகிவிடுவார். பெண்ணைப் பிடித்திருந்தால் சொல்லுங்ளள் வசியம் செய்து கல்யாணம் செய்துவிடலாம் என்றார். எனக்கு இதுபோன்ற விஷயங்களை கோட்டயம் புஷ்பநாத் நாவலில் படிக்க பிடிக்கும். ஆனால் நான் இவற்றை தீர்மானகரமாக எதிர்த்தேன். பக்குவதாக இதுபோன்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிட்டேன். பூனைக்கண் தாந்திரீகர் ஜாதகம் பார்க்கும் திறமையை விட பாரம்பரிய பில்லி, சூனியத்தில் ஆர்வம் கொண்டு பயிற்சி செய்கிறவர் போலவே தெரிந்தது.


போகிறபோக்கில் அவர் அம்மாவை நக்கலாக ஒன்று சொல்லிவிட அதுவரை அமைதியாக இருந்தவர், அடுத்த ஒருவாரத்திற்கு தூங்கும் நேரம் தவிர மீதி நேரம் எல்லாம் தாந்திரீகரை கெட்ட வார்த்தை சொல்லி திட்டிக்கொண்டிருந்தார். எனக்கும் மனநிலை குலைந்துபோயிருந்தது. எதற்கு அங்கு போனோம் என்று ஆகிவிட்டது. எங்களுக்கு கூட நிலபுலம் கிடையாது. குடியிருக்கும் வீடு மட்டும்தான். ஆனால் சின்ன மாமனுக்கு அம்மா வழியில் வந்த நிலம் இருந்தது. அதனை கந்தாயத்திற்கு ஓட்டி வந்தார். அதில் கிடைத்த வருமானம், மெக்கானிக் தொழிலில் கிடைத்த காசு என்று கிடைத்தாலும் கூட மோசமான வீட்டில்தான் குடியிருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.


பேக் டூ தி ப்யூச்சர் படம் பார்த்தேன். கால எந்திரம் என்ற கான்செப்ட் யாருக்குத்தான் சலித்துப்போகும்? எம்மட் என்ற வினோத விஞ்ஞானியின் விசித்திர கார்தான் முக்கியமான பாத்திரம். அதில் 1955ஆம் ஆண்டிற்கு சென்று அங்கு தனது பெற்றோரின் வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற நினைக்கும் மகன் மார்ட்டியின் முயற்சி என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதுதான் படம். இளம்வயது அம்மாவைப் பார்ப்பது, அவர் தன்னைக் காதலிப்பதை தடுத்து அப்பாவை காதலிக்க வைப்பது, எதிர்காலத்தில் புகழ்பெறும் இசைவடிவத்தை வாசிப்பது, இறந்தகாலத்தில் அம்மாவைப் பார்த்து என்ன பேசுவது என தடுமாறுவது என மார்ட்டியின் பாத்திர வார்ப்பில் எக்கச்சக்க உணர்ச்சிகள் உள்ளன. கால எந்திரப் படங்களுக்கு முன்னோடி இதுதான் என நினைக்கிறேன்.


.அன்பரசு


Labyrinth, Flowerpot, Worm, Earthworm

7

வாழும் மண்புழு!


அன்பு நண்பர் சபாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


நான் ஊரில் இருக்கிறேன். அவல்பூந்துறையில் தெரட்டி ஒன்றுக்கு சென்றேன். செல்லும் வழி கடினமாக இருந்தது. சிவகிரி சென்று கைகாட்டியில் திரும்பி, ஏராளமான மொடக்குகளை தாண்டி மண்கரடு, அவல்பூந்துறை சென்றோம். எப்போதும் போல நானும் அம்மாவும்தான். விழாவில் நான் சேரில் கூட உட்காரவில்லை. கொஞ்சநேரம் நின்றுவிட்டு வெளியே வந்துவிட்டேன். முழுக்க பெண்களின் ஆதிக்கம் நிரம்பிய விழா. இதில் ஆண்களுக்கு என்ன வேலை? லட்சுமி பெரியம்மா, அவரின் மகன் மருமகள்களோடு நெஞ்சு நிறைய பூரிப்போடு வரவேற்றார்.


எங்கள் உறுவினர்களில் பலருக்கும் எனது மூத்த சகோதான் பழக்கம். எல்லோரும் அவரைத்தான் கேட்டார்கள். நான் சிலரை அறிமுகம் செய்துகொண்டேன். எனக்கு பெண் தர நினைத்து வருத்தப்பட்டுக்கொண்ட சுலோசனா அத்தை இன்றுவரை அம்மாவுடன் பேசுவதில்லை. அவரது பெண்ணுக்கு அவர்கள் அளவுக்கு நிலபுலம் கொண்ட குடும்பத்தில் திருமணம் செய்துகொடுத்துவிட்டார்கள்.


தேவையில்லாமல் ஆசை வளர்த்துக்கொண்டது அவர்களது தவறு. ஆசை வேறு எதார்த்தம் வேறு என அவர் புரிந்துகொள்ளவே இல்லை. அம்மா, ஒரு எழவும் புரிந்துகொள்ளாமல் நேரடியாக அத்தை வீட்டுக்கு சென்று உட்கார்ந்து கொண்டு எனக்கு போன் பேசினார். அப்போதே எனக்கு விவகாரம் புரிந்துவிட்டது. அவர்களுடைய செல்வாக்கு, வளத்திற்கு நாம் கால்தூசி பெறமாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டேன். அம்மாவைப் பொறுத்தவரை அவள் செய்வது சரி. சுற்றியிருப்பவர்கள்தான் தவறுக்கு பொறுப்பானவர்கள். இன்றுவரையும் என்னை குறை சொல்லிக் கொண்டேதான் சோறு போடுகிறாள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சிலுவையின் பாரத்தை சுமக்க வைக்கிறார்கள். இதற்கு அன்பு என்று பெயர்.


நிதிமோசடி பற்றிய ஐஐடி கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தைப் பார்த்தேன். கொஞ்சம் மெதுவாக நடைபெறும் சாகச திரைப்படம்தான். காதலும் பாடல்களும் ஒட்டவே இல்லை. சிறையில் அடைக்கப்பட்ட நிரபராதி ஒருவரை மீட்க கிருஷ்ணமூர்த்தி நடத்தும் பகடைக் காய் ஆட்டமே படம். எல்லோரு்மே சிறப்பாக நடிக்க முயன்றிருக்கிறார்கள்.


கல்லூரி கால நண்பனும் வாழும் மண்புழுவுமான சின்னத்தம்பியை பார்க்க வீரசங்கிலி போனோம். அதேமோசமான ஜோடிதான். நானும் அம்மாவும். அவன் ஏதோ வேலையாக வெள்ளகோவில் போய்விட்டான். பார்க்க முடியவில்லை. விபத்தில் இறந்துபோன மனோகரன் மாமா வீட்டுக்கு போனோம். லட்சுமி அத்தையைப் பார்த்தோம். அவர்களின் பேத்தி தர்ஷினி விளையாட்டு என்ற பெயரில் மனம் போன போக்கில் ஜாலியாக வாழ்ந்துகொண்டு இருந்தாள். அவர்களின் வீடு மிகவும் கச்சிதமாக கட்டப்பட்டதுபோல தோன்றியது.


கொரோனா காலத்தில் உதவிய மனிதர்கள் பற்றிய நூலை தயாரித்துக்கொண்டு இருக்கிறேன். நூலின் தலைப்பை பத்திரிகையாளர் நா.கதிர்வேலனிடம் இருந்து கொள்ளையடித்துள்ளேன். கொள்ளையோ, திருட்டோ இன்ஸ்பையரிங் என்ற பெயதரில் கலரிங் செய்துவிட்டால் எந்த பிரச்னையும் இல்லை..


நன்றி!

.அன்பரசு


கருத்துகள்