பறவையால் அழகாகிறது வானம்! - கடிதங்கள்
பறவையால் அழகாகிறது வானம்!
அன்பு நண்பர் சபாவுக்கு,
வணக்கம்.
நான் செனைனக்கு வந்துவிட்டேன். பள்ளிகள் தொடங்கிவிட்டதால், மாணவர்கள் பஸ்ஸில் தொங்கியபடி செல்லும் காட்சிகளை இனி பார்க்க முடியும் என நினைக்கிறேன். அறை முழுக்க தூசு காற்று போல நிரம்பியிருந்தது. வாடகைப்பணத்தைக் கொடுத்துவிட்டேன். படிக்க வேண்டிய நூலாக நேரு எனக்காக இன்னும் காத்திருக்கிறார். அதனை இப்போதுதான் மெல்ல படிக்கத் தொடங்கியுள்ளேன்.
வரும் திங்கள் முதல் அலுவலகம் தொடங்கவிருக்கிறது. வேலைகள் நெருக்கும் என்று நினைக்கிறேன். ஆசிரியர் சிவராமன் வீட்டுக்கு போகவேண்டும் என நினைத்துள்ளேன். இந்த பிறந்தநாளுக்கு அவர் வீட்டிற்கு செல்ல நினைத்தே்ன். ஆனால் பல்வேறு சிக்கல்களால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை. அதற்காக கடிதம் ஒன்றை எழுதி அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பினேன். மனிதர் பதறிப்போய் போனில் அழைத்து என்னாச்சு என்று கேட்டார். அவரைப்பற்றி நான் என்ன நினைத்தேன் என்பதை உணர்ச்சிகரமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். பிறகு எப்போதுதான் இதனை சொல்லுவது? அவர் கொடுத்த ஊக்கம்தான் எனக்கு என்மேல் நம்பிக்கை வரக் காரணம். அவர் உதவி எனக்கு சரியாக சமயங்களில் கிடைக்கவில்லையென்றால் நிலை மிகவும் மோசமாக இருந்திருக்கும்.
பறவையால் அழகாகிறது வானம் என்ற நூலை தொகுத்து வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டேன். இதெல்லாம் சமூகத்திற்கான பங்களிப்பு பிரிவில் வரும். அனைவரும் தங்களது பங்கை சரியாக செய்யவேண்டும் அல்லவா? தினமலரில் எழுதிய செய்திக்கட்டுரைகளை தொகு்க்க வேண்டும். இதற்கிடையில் மனதிற்கு பிடித்த நேருவின் நூலையும் படித்துவிட்டு எழுத வேண்டும். உங்களது அடிபட்ட கை விரைவில் குணமாக பிராத்திக்கிறேன்.
ச.அன்பரசு
--------------------------------------
நேர்மையில்லாத வியாபாரம்!
அன்புள்ள நண்பர் சபாபதிக்கு, வணக்கம். எனது அறையில் பூஞ்சை பிரச்னை உள்ளது. உடலில் உள்ள பிரச்னையை சமாளிப்பதா, உடைமைகளிலுள்ள சிக்கலை தீர்ப்பதா என்று தெரியவில்லை. கண்ணாடி பிரேம் ஒன்றும் செப்பல் ஒன்றும் வாங்கினேன். தரமான பொருளாக இருக்குமா என்று தெரியவில்லை. காசு கொடுத்தால் அதற்கு சரியான மதிப்பு கொண்ட பொருட்களை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் கூட வியாபாரிகளுக்கு குறைந்து வருகிறது. டைட்டன், ஸ்பெக்ஸ் மேக்கர், துராகியா, விஷன் எக்ஸ்பிரஸ் தவிர வேறு கடைகளில் கண்ணாடி பிரேம்களை வாங்க கூடாது என்ற படிப்பினையை 4500 ரூபாய் செலவிட்டு பெற்றுக்கொண்டேன்.
பில்கேட்ஸ் பற்றி என்.சொக்கன் எழுதிய நூலைப் படித்தேன். விண்டோஸ் கணினியை சிறப்பாக மார்க்கெட்டிங் செய்தவரின் கதை இது. கதம் என்ற தெலுங்குப் படத்தைப் பார்த்து வருகிறேன். இன்னும் முடியவில்லை. வணிகம் சாராத திரைப்பட முயற்சிகள் ஆச்சரியம் ஊட்டுகின்றன. மாற்று மருத்துவம் பற்றிய கட்டுரை எக்ஸ்பிரஸ் இதழில் படித்து வருகிறேன். கோவிட் விவகாரத்தில் அலோபதி என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்று தெரியவில்லை. சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி ஆகிய மருந்துகள் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை வலுவாக்கியுள்ளது என்று கூறுகிறார்கள். இதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. பாஜக அரசு என்ன நோக்கத்திற்காக ஆயுர்வேத முறையை ஊக்குவிக்கிறது என்று தெரியவில்லை. இதில் படித்து வந்து மருத்துவம் பார்ப்பவர்கள், என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்குவார்கள் என்று தெரியவில்லை.
ச.அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக