புகையிலையாய் சுருங்கும் பெற்றோர்! - கடிதங்கள்

 

 

 Woman, Happy, Baby, Lady, In Love, Mother, Child

 

 

புகையிலை இலையாய் சுருங்குகிற வாழ்க்கை!

அன்புத்தோழர் சபாபதிக்கு, வணக்கம்.


கையில் எலும்பில் ஏற்பட்ட காயம் குணமாகி இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு அலுவலகத்தில் இருந்து ஓலை வந்துவிட்டது. நான் 8.2..21 அன்று அலுவலகத்தில் இருக்க வேண்டும். இனிமேல் பரபர வாழ்க்கை தொடங்கிவிடும். வீட்டில் நான் இத்தனை நாட்கள் இருக்க வாய்ப்பு கிடைத்ததே ஆண்டவனின் அருள்தான் காரணம். அப்பாவுக்கு 68 வயது ஆகிவிட்டது. சர்க்கரை, ரத்த அழுத்தம், கண்பார்வை மங்கல் என தடுமாறுகிறார். ஆனால் என்னால் வேலை காரணமாக வீட்டில் இருக்க முடியவில்லை. இருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.


நம்மை பெற்றவர்கள், வளர்த்தவர்கள் கண் முன்னே காய்ந்து சுருங்கி புகையிலை போல மாறுவது மனதைப் பிழிவது போலவே உள்ளது. வீட்டில் இருந்த நாட்களில் அம்மாவுக்கு சமைக்க தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தேன். அம்மாவுடன் நிறைய பேசினேன் என்று நினைக்கிறேன். அவள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதால் நான் பேசியது அவளது காதில் விழுந்திருக்குமா என்றே தெரியவில்லை. திருமண விஷயங்களுக்கு கூட காரவலசு அம்மாயின் வீட்டுக்கு நானும் அம்மாவும்தான் அலைந்தோம். நான் சென்னையில் வேலை பார்க்கிறேன் என்றதும் அலறுகிறார்கள். மீசை இல்லை என்பதற்காக கூட ஒரு பெண்ணின் வீட்டில் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். மூக்குக்கு கீழே உள்ளது வெறும் மயிரு என்று சொல்ல முடியுமா? மிக அவசியமானதுதான் என நினைத்துக்கொண்டேன். திருமணம் செய்து பெண்ணை சென்னைக்கு அழைத்து வந்து வீடு பிடித்து வைத்து பாதுகாப்பது பற்றி யோசித்தால் பதற்றமாக இருக்கிறது. மண்கரடு அருகில் உள்ள சாமியாடும் தாத்தா இறந்துபோய்விட்டார்.


இறந்துபோனவரின் உடலில் இருந்து வெளியேறிய மலத்தை கூட டக்கென அள்ளியெறிந்து சுத்தம் செய்ய வீட்டினர் முன்வரவில்லை. வினோதமான சாவுதானே? அம்மாவின் மூத்த அண்ணனும் எனது பெரிய மாமனுமான கந்தசாமி, ஆடுமேய்க்க சென்று இதயம் அடைத்து செத்து கிடந்தார் என தகவல் சொன்னார்கள். எங்கள் வீட்டில் ஒரு பழக்கம் உண்டு. ஆபத்தான விஷயங்களை வேகமாக சொல்லிவிடுவார்கள். ஆனால் சாதாரண விஷயங்களை சுவருக்கு காதுண்டு என சூதானமாக ரகசியம் போல சொல்லி அயரவைப்பார்கள். அப்படித்தான் பெரிய மாமனின் சாவையும் சொன்னார்கள். எனக்கு எந்த உணர்வும் இல்லை. அவர் எங்கள் குடும்பத்தோடு ஒட்டி உறவாடியெல்லாம் வாழவில்லை. துக்க வீட்டில் அவரது காலை தொட்டுக்கும்பிட அம்மா கேட்டார். சரி என கும்பிட்டுவிட்டு நடு மாமனின் வீட்டில் சென்று உட்கார்ந்து கொண்டேன்.


.அன்பரசு

-------------------------------


Time, Money, Puppet, Time Is Money, Dial



பணம் பிடுங்கி உறவுகள்!

13.2.2021


அன்பு நண்பர் சபாபதிக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நான் நலம். எங்கள் வீட்டில் இருந்து நான் சென்னைக்கு கிளம்பியதும் அம்மாவுக்கு உடல்நலம் கெட்டுவிட்டது. இந்த கடிதத்தை நான் எழுதும்போது ஈரோடு அரசு மருத்துவமனையில் அம்மா சேர்ந்திருப்பாள். அப்பாவுக்கு அம்மா பற்றிய கவலை எப்போதும் இருந்தது கிடையாது. காசு செலவாகிறது என சட்டையைத் தொட்டு பார்த்துக்கொண்டு இருப்பார் அவருடைய வாழ்க்கை டீ, மாரி பிஸ்கட், எழவு பேப்பர் தினமலர், நூடுல்ஸ் உணவு என பயணிக்கிறது. அம்மாவிற்கு உடல் நலம் கெட்டுள்ளபோது அருகில் இருக்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. வேறு வழியில்லை. இப்போது நான் பார்க்கும் பத்திரிகை வேலை மட்டுமே வீட்டில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்ப உதவுகிறது. வீட்டில் இருப்பவர்கள் ஓய்வெடுக்க வேண்டிய வயது இது. மூத்த சகோ, எவ்வளவு பிடுங்க முடியுமோ அத்தனையும் பிடுங்கிக்கொண்டு கோவையில் ஆட்சி செலுத்துகிறார். அவருக்கும் இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.


அப்பாவைப் பொறுத்தவரை அவருக்கு நில ஆதாரங்கள் கிடையாது. எங்கள் தெருவில் உள்ள அனைவருக்குமே நிலம் பின்னணியில் உள்ளது. இதனால் தைரியமாக இருக்கிறார்கள். எனக்கு கிடைத்த வேலையால் என்னையும் பார்த்துக்கொண்டு வீட்டையும் பார்க்க முடிகிறது. மாத வேலை என்பது சிறிது காலத்தில் கட்டாயமாகிவிட்டது.


சென்னைக்கு திரும்ப வந்தபோது நிறைய மாற்றங்களைப் பார்த்தேன். பல புதிய ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ள அதேசமயம், சரவணபவன் ஹோட்டலின் கிளைகள் நிறைய மூடப்பட்டுவிட்டன. லாயிட்ஸ் ரோட்டில் உள்ள சரவணபவன் இப்போது அங்கே இல்லை. என்ன சங்கடமோ? நாளை எனது ஆசிரியர் கே.என்.எஸ்ஸைப் பார்க்கப் போகிறேன். கொஞ்சநேரம் அவரைப் பார்த்துவிட்டு கிளம்பி வந்துவிடுவேன். வேறு ஒன்றும் இல்லை.


மம்தா பானர்ஜி பற்றிய நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன். ஏறத்தாழ எழுபது பக்கங்களைப் படித்துவிட்டேன். அலுவலகத்தில் கொரோனா பற்றிய பயம் இன்னும் போகவில்லை. யாராவது இருமினாலே மனிதவளத்துறை மேலாளரிடம் பேசி உடனே வீட்டுக்கு அனுப்பி வைக்க முயல்கிறார்கள் சக பணியாளர்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்க முடியும்? அன்புதான்.


.அன்பரசு







கருத்துகள்