தீவிரவாதிகளை சீரியல் கொலைகாரர்கள் என வகைப்படுத்தலாமா? - சைக்கோ டைரி

 

 

 

 Psycho, Shower, Stabbing, Knife, Kill, Blade, Creepy

 

 

சைக்கோ டயரி


தீவிரவாதிகளை தொடர் கொலைகாரர்கள் என வகைப்படுத்தலாமா?


அறிவியல் முறையில் இல்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் சிந்தனை முறையில் ஆம் என்று கூறலாம். குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை என இரண்டிலும் வேறுபாடு கொண்ட தனியாக வாழ்க்கையை தொடர் கொலைகாரர்கள் கொண்டுள்ளனர். தீவிரவாதிகளில் தற்கொலை செய்துகொள்பவராக மாறி தன்னை வெடிக்க வைத்து பெரும் திரளான மக்களை கொல்வது என்ற சிந்தனை தொடர்கொலைகாரர்களுடன் ஒத்துப்போவதுதான். அதில் மாற்றமில்லை. இவர்கள் கொலை செய்வதில் குறிப்பிட்ட ஐடியா, முறை, சில முன்னோடிகள் என இருக்கும். இப்படி கொலை செய்வதன் வழியாக இவர்கள் தங்களை முக்கியமானவர்களாக நினைக்கிறார்கள். பிறருக்கும் இதே தகவல்களை தெரிவிக்கிறார்கள்.


தற்கொலைப்படை தாக்குதல்கள், அரசியல் காரணங்களுக்காக நடைபெறுகின்றன. இதில் கொல்லப்படும் மக்கள் பலியாவதற்கு தகுதியானவர்கள் என்றே தீவிரவாதிகள் நினைக்கின்றனர். ஆவேசமும், கோபமும் கொண்ட இளைஞர்களை எளிதாக மூளைச்சலவை செய்து அவர்களை மாற்றி விட முடியும். தீவிரவாத இயக்கங்கள் பல்லாண்டு காலமாக இதனை செய்துவருகின்றன. உலக நாடுகளில் தீவிரவாதி என்பது தொடர் கொலைகாரர் என்பதை விட மதிப்பானதாக பார்க்கின்றனர்.


வெளியில் எத்தனை தொடர் கொலைகாரர்கள் இருப்பார்கள்?


பொதுவாக வல்லரசு நாடுகளிலும் சரி, பிற வளர்ந்த வளர்ந்துகொண்டிருக்கும் வளரவே மறுக்கும் நாடுகளிலும் சரி குற்றங்களை குறைத்துக் காட்டுவது வழக்கம். தொடர் கொலைகார ர்களைப் பொறுத்தவரையிலும் முடிந்தவரை அப்படி ஆட்கள் குறைவே என்று வாதிடுவதே காவல்துறைக்கு நல்லது. அவர்களுக்கு தெரிந்த அனைத்து உண்மைகளையும் வெளியே சொன்னால் மக்கள் யாரும் இரவில் நிம்மதியாக தூங்கமுடியாது.


நாங்கள் மகன்களாக, கணவர்களாக அனைத்து இடங்களிலும் இருக்கிறோம். இதனால் நாளை உங்களது மகன்கள் அதிகம் பேர் கொல்லப்படப்போகின்றனர் என்று கூறினார் ஹைப்பர் கொலைகாரரான டெட் பண்டி. இவர் யார் என இங்கே விளக்க முடியாது. அந்தளவு உலகம் முழுக்க பிரபலமானவர்.


தொடர் கொலைகாரர்கள் நகரங்களில் இருப்பதை ஏன் அறியமுடிவதில்லை?


பொதுவாக நமது நாளிதழ்கள் முதல் பக்கத்தில் கொலைச்செய்திகளை வெளியிடுவதில்லை. அந்த இடத்தில் சில சினிமா கிசுகிசு, காதல் செய்திகளை வெளியிட்டுவிட்டு ஆறாவது, ஏழாவது பக்கத்தில் படுகொலை செய்திகளை வெளியிடுகிறார்கள். தனிஒருவன் படத்தில் ஜெயம் ரவி, நாளிதழ் செய்திகளை எப்படி மேட்ச் செய்து புரிந்துகொள்வார் என பார்த்திருப்பீர்கள். அந்த புத்திசாலித்தனம் உங்களுக்கு இருந்தால் நகரில் நடக்கும் குற்றச்செயல்களும், அதை செய்பவர்களும் யார் என எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க முடியும்.


தொடர் கொலைகளை செய்பவர்கள் அனைவருமே தனியாட்கள் கிடையாது. அவர்களுக்கு என கௌரவமான வேலை, குடும்பம், பிற விஷயங்கள் என அனைத்துமே இருக்கும். மனம் சோரும் நேரங்களில் தங்களை யார் என நினைவுபடுத்திக்கொள்ள கொலைகளை செய்கிறார்கள். கொலை செய்யாத நேரங்களில் அவர்களின் வாழ்க்கை இயல்பாகவே சென்றுகொண்டிருக்கும். வேலை இழந்த ஒருவரை விட்டு மனைவியும் பிரியும் போது மொத்தமாக வாழ்க்கை கையைவிட்டு போகிறது அல்லவா? எனவேதான் அவர் கொலையில் இறங்குகிறார். வாய்ப்பும், வசதியும் வந்துவிட்டால் ஒருவர் தனது வீட்டை மாற்றுவது போலவே இவர்களும் தங்களது இடத்தையும், குற்றம் செய்த ஏரியாவை விட்டும் விலகி சென்றுகொண்டே இருப்பார்கள்.


கொலைகளுக்கான இடைவெளியும் கூடுவதால் பலரும் இதற்கிடையே உள்ள ஒற்றுமையை இணைத்து பார்க்கமாட்டார்கள். இந்த இடத்தில் குற்றங்களை ஆவணப்படுத்துபவர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களிடம் சென்று விவரங்களைக் கேட்கும்போது எளிதாக விவரங்களைப் பெற்று குற்றவாளிகளை கண்காணிக்க முடியும்.



சீரியல் கொலைகாரர்கள் அனைவரும் வெள்ளையர்களே!


பொதுவாக ஒரு நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள மக்கள் பெரும்பாலான குற்றங்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம். அதற்கென சிறுபான்மையினரும் குற்றங்களில் ஈடுபடாதவர்கள் என்று கூறமுடியாது. தொடர் கொலைகாரர்களில் வெய்ன் வில்லியம்ஸ், டிமோத்தி ஸ்பென்சர், சார்லஸ் என்ஜி, ஏஞ்சல் ரிசென்டென்ஸ், ஜார்ஸ் ரஸ்ஸல் ஆகியோர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். படுகொலைகளில் இனவெறி என்பதை நாம் பார்ப்பது தவறானது. தொடர் கொலைக் குற்றங்களில் நிறம் முக்கியமான பேசுபொருளாக பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.


இனவெறி என்பதை ஊடகங்கள் தங்களது செய்தி வெளியீட்டில் முக்கியமான பொருளாக வைத்துள்ளன. வசதியான வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண் என்றால் தலைப்புச்செய்தியாகவும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், இந்தியர்கள், முஸ்லீம் இனத்தை் சேர்ந்தவர்கள் என்றால் நான்காவது பக்கச்செய்தியாகவும் கொலை, கடத்தல் செய்தியை பிரசுரிக்கிறார்கள். இந்தியாவிலும் தலைநகரில் இறந்தவர்கள், மருத்துவ படிப்பு படிப்பவர்கள் என்றால் செய்திகள் பிளாஷில் மின்னி விரிவான செய்திதொகுப்பு வரும். ஆனால் பின்தங்கிய மாவட்டங்களில் தலித் மாணவிகள் , சிறுமிகள் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டால் கூட தீக்கதிர் தாண்டி வேறு இடங்களில் அவை செய்தியாகாது. இதனால் குறிப்பிட்ட சமூகத்தினர் புறக்கணிக்கப்படுவதோடு, குறிப்பிட்ட குற்றங்களை செய்தவரும் தைரியமாக அடுத்தடுத்து குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார். ஊடகங்களே அவருக்கு உதவும்போது, வேறுயார் அவரை தடுக்க முடியும்?







கருத்துகள்