தனது காதலனை அடைய முயலும் அடிதடி பெண்! - பேக்ஸ்ட்ரீட் ரூக்கி

 







அடிதடியான பெண் அகிம்சைவாதியான காதலை, காதலனை தேடி அலைந்து காதலைப் பெறுவதுதான் கதை. 

கன்வீனியன்ஸ் ஸ்டோர் சயட் பியோல் என்ற வெப் காமிக்கை டிவி தொடராக மாற்றியுள்ளனர். தொடர்  முழுக்க சயட் பியோல் என்ற பெண்ணின் வாழ்க்கையை மட்டுமே முக்கியத்துவப்படுத்துகிறது. அதற்கேற்ப படத்தின் முன்னணி நடிகர்கள் டே ஹியூன்(Ji Chang-wook ), சயட் பியோல் ( Kim Yoo-jung) என இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அடிப்படையில் நகைச்சுவை டபுள் டோஸில் கொண்டுள்ள தொடர்தான். ஆனால் அதிலும் கூட திருமணம், காதல், குடும்பம், வாழ்க்கை, வேலை, நிம்மதி என நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள். 



பணத்தை விட மன நிம்மதியும், நம்மை விரும்புபவர்கள் நம் அருகில் இருப்பதும்தான் முக்கியம் என்பதை நெகிழ்ச்சியான காட்சிகள், குறைந்த உரையாடல்களில் சொல்லியிருக்கிறார்கள். 

தந்தை இறந்தபிறகு ஆதரவின்றி வளரும் இரு பெண்கள், அவர்களைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் என்றுதான் கதையை சரியாக புரிந்துகொண்டால் சொல்லவேண்டும். சயட் பியோலுக்கு அப்பா கார் விபத்தில் இறந்தபிறகு, வீட்டு வாடகை கட்ட முடியாமல் எங்கு செல்வது என தெரியாத நிலை. உறவினர்கள் ஒருவாய் சோறு போட்டால் கூட அதையும் சாப்பிடு முடியாதபடி வசைகளை பொழிகிறார்கள். எனவே சயட் தனது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்கிறார்கள். இத்தனைக்கும் அவளுக்கு பணக்கார தோழி கியோம்பி இருந்தாலும் கூட உதவி கேட்பது தன்மானத்திற்கு அவமானம் என நினைக்கிறாள். சயட் பியோலின் தங்கையைப் பொறுத்தவரை அது ஒன்றும் தவறு இல்லை என நினைக்கிறாள். இதனால் இருவருக்குள்ளும் எப்போதும் சண்டை வந்துகொண்டு  இருக்கிறது. 

சயட் பியோல் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை என்பதால் பார்ட் டைம் வேலைகள்தான் கிடைக்கின்றன. இந்த நேரத்தில் தனது தோழிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை டேக்வாண்டோ கற்றதால் அடித்து உதைத்து அவர்களை காப்பாற்றுகிறாள். இதனால் அவள் வாழும் ஏரியாவில் அவளைப் பார்த்து திருடர்கள் குலைநடுங்க ஓடுகிறார்கள். அவளுக்கு சிறுவயதிலிருந்து டே ஹியூன் என்பவனின் மீது காதல். அவளை விட வயது மூத்தவன்தான்.

 ஒருமுறை தற்காப்புக்கலை பள்ளியில்  ஏற்பட்ட விபத்திலிருந்து தன்னை காப்பாற்றியவர் என்பதால் அவனை தேடியபடி இருக்கிறாள். பள்ளியில் படிக்கும்போது , டே ஹியூனை பார்க்கிறாள். அப்போதுதான் அவனது காதலி அவனை தூக்கியெறிந்துவிட்டு சென்றிருக்கிறாள். அந்த துக்கத்திலும் கூட அவனது இயல்பான குணம் மாறவில்லை. சிகரெட் வாங்கிக் கொடுக்க கேட்கும் மாணவிகளுக்கு சாக்லெட் வாங்கிக்கொடுத்து சிகரெட் குடிக்காதீர்கள் என்கிறான். இதனால் ஈர்க்கப்பட்ட சயட் பியோல்   அவனுக்கு முத்தம் கொடுக்கிறாள். கூடவே அவனது செல்போன் நம்பரையும் வாங்குகிறாள். ஆனால் அதற்கு பிறகு அவனை அவள் அழைப்பதேயில்லை. 

டே ஹியூன் கன்வீனியன்ஸ் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறான். கடையை லாபமாக நடத்த அவன் போராடிய  அளவு அதனை இழுத்து அவனது குடும்பம் முயல்கிறது. குறிப்பாக அவனது அப்பா, அக்கா என இருவருமே படாதபாடு படுத்துவதால் கடை நஷ்டத்தில் ஓடுகிறது. டே ஹியூன் 24/7 மணி நேர கடையை  தனி மனிதனாக நடத்தி தூங்கி வழிகிறான். அப்போதுதான் வேறுவழியில்லை. பார்ட் டைம் வேலை செய்பவர் ஒருவர் தேவை என நினைக்கிறான். அந்த வேலைக்குத்தான் சயட் பியோல் வருகிறாள். தனது காதலனோடு இருக்கவேண்டும் என்பதுதான் அவளுக்கு ஒரே நோக்கம். இதில் கிடைக்கும் பணம் என்பதை விட டே ஹியூனின் அன்பை சம்பாதிக்கவே முயல்கிறாள். ஆனால் டே ஹியூனுக்கு  கார்ப்பரேட் ஆபீசில் வேலை செய்யும் காதலி இருக்கிறாள். இதனால் அவனது கவனம் சயட் பக்கம் திரும்பவே இல்லை. 

வேலையில் சின்சியராக இருக்கும் சயட், அக்கறையாக பேசி வாடிக்கையாளர்களை மடக்கி கடையை வேலைக்கு சேர்ந்த ஒரே மாதத்தில் மேலே கொண்டுவருகிறாள்.  இதற்கிடையில் சயட்டின் பால்ய கால தோழன் கிம் ஜூன் ஹூக் சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு சயட்டின் மீது காதல். ஆனால் சயட்டிற்கு டே ஹியூன் மீது காதல். டே ஹியூனுக்கு தனது காதலைப் புரிந்துகொள்ளாத கார்ப்பரேட் காதலில் யூன் ஜூ மீது காதல். இதில் எந்த காதல் நிலைக்கிறது, எது கரைகிறது என்பதுதான் இறுதி பகுதி. 

சண்டைக்காட்சிகள் அனைத்திலும் சயட் பியோலாக நடித்துள்ள கிம் யூ பிரமாதப்படுத்தியுள்ளார். இதற்கென தனிப்பயிற்சி பெற்று நடித்துள்ளது காட்சியில் தெரிகிறது. சயட் அதிரடி என்றால் அவளை பூரிப்பான புன்னகையில் தள்ளும் டே ஹியூன் யாரையும் கடிந்தகொள்ளாத மனிதன். யாரையும் காயப்படுத்தக் கூடாது என்பதற்காகவே குடும்பம், காதலி, வேலை என அனைத்து இடங்களிலும் காயப்படுகிறான் , மன்னிப்பு கேட்கிறான். எங்குமே தனது இயல்பை அவன் இழப்பதில்லை. சயட் பியோலை மனப்பூர்வமாக விரும்பி வரும் வேளையில் அவனது தாய் யூன் ஜூவிடம் பழகு எனும்போது மட்டும்தான் கோபமாகி சீறுகிறான். அவனது இந்த இளகியமனமும், பிறருக்கு உதவும் எண்ணமும்தான் சயட்டை வசீகரிக்கிறது. இவர்கள் இருவரும் அவரவரின் காதலை மனதில் உணர்ந்தார்களா என்பதுதான் முக்கியமான பகுதி. 

சயட்டின் நேர்மையான அதிரடி தோழிகள், டே ஹியூனின் ஹோ செபியன் கால எரோடிக் காமிக்ஸ் தோழன் டெல் சியூக், தொடரில் வரும் சின்ன சின்ன கிராபிக்ஸ் சமாச்சாரங்கள், ஏப்ரல் குழுவின் கிரேஸி பாடல், காதல் தருணத்தில் வரும் குறும் பாடல்கள் என அனுபவித்து ரசிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. 

கிரேஸி கிரேஸி  காதல்

கோமாளிமேடை டீம் 











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்