இந்தியாவின் எல்லைகளைப் பிரித்த ராட்கிளிப்! - இந்தியா 75
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி. நள்ளிரவு. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. விதியுடனான சந்திப்பும் கூட நடந்தது. ஆனால் அதில் முக்கியமான பிரச்னை ஒன்று இருந்தது. இந்தியா எங்கே முடிகிறது, பாகிஸ்தான் எங்கே தொடங்குகிறது என்ற எல்லைப் பிரச்னைதான்.
அப்போதைய ஆட்சியாளரான மவுண்ட் பேட்டனுக்கு இருந்த பிரச்னை பிரிக்கப்பட்ட இரண்டு நாடுகளும் எல்லைக்காக மீண்டும் குற்றம்சாட்டி சண்டை போடக்கூடாது என்பதுதான். அவர் இதற்காக எல்லைகளை பிரிப்பதற்கான யோசனையை உருவாக்கினார். இந்திய அரசுக்கு, அமைதியான முறையில் அதிகாரத்தை விட்டுக்கொடுப்பதற்கான காலத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்கெனவே இழந்துவிட்டது.
1942ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கிரிப்ஸ் கமிஷனும் தோல்வியுற்றது. 1946ஆம் ஆண்டு மூன்று உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கமிட்டியும் இரு நாடுகளை பிரிப்பது அவசியம் என்று கூறிவிட்டது. இதில் முக்கியமாக எழுந்த பிரச்னை, துணைக்கண்டத்தை எப்படி பிரிப்பது என்பதே.
எல்லைகளை பிரிக்க அழைக்கப்பட்டவர் ஒரு வழக்குரைஞர். இவர் பெயர் சிரில் ராட் கிளிப். 48 வயதானவர் அதிக நாடுகள் பயணித்தது கிடையாது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகளை ஐந்தே வாரத்தில் பிரித்து சாதனை படைத்து சர்ச்சையானார்.
வழக்குரைஞராக திறம்பட வேலை செய்தவர், போர்காலத்தில் பிரிட்டிஷ் அரசின் தகவல் தொடர்புத்துறையில் தணிக்கைத்துறையின் தலைவராக இருந்தார். இவர், ஹெய்லிபெரி எனும் பள்ளி, ஆக்ஸ்போர்டு கல்லூரியில் படித்தவர். நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட் அமெரிக்காவுக்கு சென்றதைக் கூட எதிர்த்து பிரசாரம் மேற்கொண்டார். ஜெர்மன் நாட்டில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிக் கூட தவறான தகவல்களை பிரசாரம் செய்தார் ராட்கிளிப் என பேட்ரிக் பிரெஞ்ச் என்பவர் எழுதினார்.
ஜூலை 8 அன்று நியூ டெல்லிக்கு வந்தார் ராட்கிளிப். பஞ்சாப் ராணுவம் அவருக்கு பாதுகாப்பை வழங்கியது. யாரும் அவரை செல்வாக்கு செலுத்தி முடிவுகளை மாற்ற முடியாது என நாமும் எழுத ஆசைதான். ஆனால் ஆங்கில ராணுவத் தலைவர் ஆச்சின்லெக், மவுண்ட் பேட்டன், பஞ்சாப் ஆளுநர் ஈவன் ஜென்கின்ஸ் மற்றும் பிற ஆங்கில சமூகத்தினருடன் இணைந்துதான் சாப்பிட்டார். விருந்துகளில் பங்குகொண்டார்.
ராட்கிளிப் தனது வேலை பற்றி அங்கு வேலை செய்த ஆங்கில நண்பர்களிடம் கேட்டிருந்தால் கூட நல்ல ஐடியாக்கள் கிடைத்திருக்கும். அவர் அப்படி உதவி அல்லது ஆலோசனைகள் கேட்டாரா என்று தெரியவில்லை. அவரிடம் வேவ்வெல் என்பவர் தயாரித்த வரைபடம், காலாவதியான மக்கள்தொகை தகவல்கள் மட்டுமே இருந்தன. மக்கள், ஆறுகள், கிராமங்கள், கால்வாய்கள், சாலைகள் என அனைத்தையும் அவர் 36 நாட்களில் பிரித்தாக வேண்டும். இதற்கு மேலாக இந்தியாவின் வெப்பநிலை அவரை பாதித்துக்கொண்டிருந்தது.
பாகிஸ்தானிடம் பெரோஸ்பூரின் பகுதிகளை கொடுக்க நினைத்திருந்தார் ராட்கிளிப். ஆகஸ்ட் முதல் வாரம், சிம்லாவில் தனது நண்பர்களோடு உட்கார்ந்து சாப்பிடும்போது இதை சொன்னார். கூடுதலாக இந்தியாவுக்கு குர்தாஸ்பூர் கிடைக்கிறது என்பதால் அதற்கு சரியான பதிலீடு இது என நினைத்தார். ஆனால் இந்த வார்த்தை வெளியே பரவியபோது என்ன எதிர்வினை கிடைத்ததோ தனது எண்ணத்தை பின்னர் மாற்றிக்கொண்டார் ராட்கிளிப்.
ஆகஸ்ட் 13 அன்று, தனது வேலைகளை முடித்து மவுண்ட்பேட்டனிடம் கொடுத்துவிட்டார் ராட்கிளிப். அவரோ, ஆகஸ்ட் 15ஆம் தேதிவரை அமைதி காத்தார். அடுத்தநாள் தான் எல்லைகளைப் பற்றி செய்தியை வெளியிட்டார். ஆகஸ்ட் 16ஆம் தேதி நேரு, வல்லபாய் படேல், லியாகத் அலிகான், பல்தேவ் சிங் ஆகியோர் அரசின் கௌன்சில் சேம்பருக்கு அழைக்கப்பட்டனர். மாலை 5 மணிக்கு அவர்களுக்கு எல்லைகள் பற்றி செய்திகள் கூறப்பட்டன. அவர்களின் முகங்களில் எள்ளளவும் மகிழ்ச்சி இல்லை. பூசல்கள் மறைந்து அமைதி நிலவ சில மாதங்கள் தேவைப்பட்டன.
ஆகஸ்ட் 17ஆம் தேதி ராட்கிளிப் தடாலடியாக ஊருக்கு கிளம்பிவிட்டார். அதற்குப் பிறகு அவர் இந்தியாவின் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. இந்தியா கேட்டுக்கொண்டால் நீங்கள் இந்தியாவுக்கு வருவீர்களா என்று ஒருமுறை அவரைக் கேட்டபோது , நிச்சயம் மாட்டேன். நான் அப்படி வந்தால் இரு நாட்டுக்கார ர்களும் என்னை சுட்டுக்கொன்றுவிடுவார்கள் என்று சொன்னார். அவர் எல்லையைப் பிரிக்கும்போதே இந்த உண்மை தெரிந்திருக்கிறது. ஓடியதால் பிழைத்துக்கொண்டார்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக