சார் பேரு செப்பன்டையா.....

 






மயிலாப்பூர் டைம்ஸ்


சார் பேரு செப்பன்டையா....


பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இன்று ஹோட்டல்கள், மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள், புரோவிசன் கடைகள், ஃபேன்சி கிப்ட் கடைகள் அதிகமாகியுள்ளன. இதை யாருமே மறுக்க முடியாது. பெரும்பாலான திறன் சார்ந்த கடைகளை விட சேவை சார்ந்த துறை அதிக பங்களிப்பு கொண்டதாக மாறியுள்ளது. 

ஆனால் இவற்றில் நடந்துகொள்ளும் முறை மாறியிருக்கிறதா என்றால் இதற்கு என்ன பதில் சொல்லுவது என முழிக்க வேண்டிவரும். வாடிக்கையாளர் சார்ந்த அக்கறை முன்பிருந்ததை விட இன்று குறைந்துவிட்டது. மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் இரண்டாவது முறை சென்று வாங்கியபோதும் அழுகிய காய்கறிகளை போடுவதற்கு கடைக்காரர் தயங்குவதில்லை. முதல்முறை அவர் அழுகல் காய்கறிகளை போட்டபோதும் அவர் கவனமாக இல்லாமல் வேலை அவசரத்தில் அதை செய்திருப்பார் என நினைத்தேன். 

ஆனால் இரண்டாவது முறையும் கர்த்தரை கும்பிட்டுவிட்டு தக்காளியை எடுத்துப்போட்டபோது நான் அவரை நம்பினேன். கர்த்தர் அவரைக் காப்பாற்றினாலும்,  என்னைக் கைவிட்டுவிட்டார். அறைக்கு வந்தபிறகு ஆறு தக்காளிகளில் இரண்டை உடனடியாக குப்பைத்தொட்டிக்கு தூக்கிப்போடும்படி ஆகிவிட்டது. உண்மையில் நான் துக்கங்களை சந்தோஷமாக மாற்றும் கர்த்தரை கேட்கிறேன். இந்த கடைக்காரரின் பேரு செப்பன்டையா.....

இங்கு சொல்ல வந்தது, வாடிக்கையாளர்கள் மீதான கவனமும், அக்கறையும் மெல்ல அழிந்து வருவதைத்தான். காய்கறிகளை என்னிடம் வாங்காவிட்டால் இன்னொருவரிடம் வாங்க போகிறார் என நினைப்பதால்தான் மனமறிந்து மேரி மாதாவை கும்பிட்டுவிட்டு தவறு செய்ய முடிகிறது. 

நடந்து செல்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். சிலசமயங்களில் மனம் சரியில்லையென்றால் எனது அறையிலிருந்து அலுவலகத்திற்கு நடந்தே கூட வந்திருக்கிறேன். வேண்டுமென்றே ஒருமுறை கூட வரவில்லை. சிலமுறை நடக்கவேண்டுமென்று அப்படி செய்திருக்கிறேன். இப்படி நடந்ததில் முழங்காலில் உள்ள தசை சற்றே கிழிந்துவிட்டது. இதற்காக மயிலாப்பூரில் சாத்தூர் காபி பாரின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றேன். 

இந்த மருத்துவமனையின் சிறப்பு, நீங்கள் சொல்வதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் நம்மைப் பற்றிய விவரங்களை எழுதி வைப்பார்கள். கொரோனா வந்தது முதல் மருத்துவமனையில் ஒரு ஆள் உள்ளே செல்லும் அளவுக்கு ஷட்டரில் வழி செய்திருந்தார்கள்.அதில்தான் நுழைந்தேன். உள்ளே வெள்ளை உடை தேவதை ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆபீஸ் முடிந்து ராயப்பேட்டையிலிருந்து டிடிகே ரோட்டில் நடந்து சென்று சிட்டிசென்டர் அருகே ரோட்டைக் கடந்து பஜார் ரோட்டை அடைந்து  மருத்துவமனையை சென்றடைந்திருந்தேன். இதனை விளைவாக வியர்வையில் முழுமையாக குளித்திருந்தேன். 

உள்ளே நுழைந்தபோது மாமி ஒருவர் தனது கணவரோடு உட்கார்ந்திருந்தார். கூடவே தம்பதி தங்களது குழந்தைகளோடு அமர்ந்திருந்தனர். குழந்தை காய்ச்சலால் சோர்ந்து கிடந்தது. ஆனாலும் அங்கு நிலவிய அமைதியை போக்க என்ன செய்வது? அதற்காக பெருமாளே அனுப்பிவைத்திருப்பார் போல... மாமி ஆஜராகியிருந்தார். 

இடதுகாலில் அடிபட்டு பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. நடப்பதற்கான தாங்கு இரும்பையும் வைத்திருந்தார். வெளியே நின்ற மாருதி சுசுகி அவருடையதாக இருக்க அதிக வாய்ப்பு இருந்தது. நான் வந்து உட்காருவதற்கு முன்பிருந்தே பேசிக்கொண்டிருந்தார். நான் வந்து சிறிய மர முக்காலியில் உட்காரும்போதும் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார். இப்படி பேசுகிறாரே கணவர் பதிலுக்கு என்ன பேசினார் என்று பார்த்தால்,.. அவர் ஸ்மார்ட்போனை நோண்டியபடி தப்பிக்க முயன்றார். ஆனாலும் அவரது மனைவி தான் சொல்லும் ஒவ்வொன்றுக்கும்  கணவர் உம் கொட்டவேண்டும் என எதிர்பார்த்தார். 

மாமி அதற்குள் நாடு தாண்டிய பயங்கரவாத த்திற்குள் நுழைந்தார். எதிரே உட்கார்ந்திருந்த குழந்தையிடம் பேச ஆரம்பித்தார். 

டே குழந்தை உம் பேரு என்ன? என்ன ஸ்டாண்டர்ட் படிக்கிறே? 

மாமி கேட்டால் எதிரே உள்ளவர்கள் சும்மா இருக்க முடியுமா? காய்ச்சலில் கிடந்த குழந்தையை உசுப்பி மழலைக் குரலில் பெயரைச் சொல்ல வற்புறுத்தினர். பேர சொல்லு பேர சொல்லு என சொல்லிக்கொண்டிருக்க  மாமியின் கணவர் கண்ணாடியை உயர்த்தி போட்டுக்கொண்டு போனையே பார்த்துக்கொண்டிருந்தார். 

ஒருவழியாக  எலும்பு டாக்டர் டீஷர்ட்டும், டிராக் பேண்டுமாக இறங்கி வந்தார். 

முதலில் குழந்தை தம்பதி உள்ளே சென்றனர். அடுத்து மாமி கிளம்பினார். அப்போதுதான் அங்கு அமைதி நிலவியது. கௌண்டரில் இருந்த வெள்ளுடை தேவதைகள் இப்போது மூவராகியிருந்தனர். ஒருவர் நோட்டை எடுத்துக்கொண்டு  என்னிடம் வந்தார். 

உங்க பேரு, போன் நம்பர் எழுதுங்க


என்னோட பேரு அன்பரசு.. ஒரு வருஷத்துக்கு முன்னாடி என்னோட டீடெய்லெல்லாம் சிஸ்டத்தில் பதிவு செஞ்சாங்களே..

அப்படியா.. இப்போதைக்கு உங்க பேரும், போன் நம்பரும் எழுதிடுங்களேன். 

பிறகு சற்றுநேரம் ஆன பிறகு, டாக்டர் வேகமாக வெளியே வந்தார். எனக்கு காலில் முழங்கால் அருகே வலி. வலதுகாலை நன்றாக ஊன்றி நடக்க முடியவில்லை. இடது காலில் முழு உடல் எடையும் தாங்கித்தான் நடக்க முடிந்தது. கொரோனா சோதனைகளை செய்த பிறகு உள்ளே அனுமதித்தனர். 

எங்கே வலிக்குது, எத்தனை நாளா என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டே  எக்ஸ்ரே எடுப்பதற்கான முயற்சிகளை நர்சிடம் சொல்லிவிட்டு ஊசி போட படுக்க வைத்தார். 

எப்படி அடிபட்டது?

ஆபீஸ் நடந்துபோவேன். பள்ளத்தில் கால் வெச்சிருப்பேன் சார். 

ஆனா உங்களுக்கு வலி ஜாஸ்தியா இருக்கே?

எங்கே வேலை செய்யறீங்க? 

பத்திரிகையில சார்

என்ன மாதிரியான வேலை?

சப் எடிட்டர்...

நான் இதை சொன்னபோதும், டாக்டரைப் பொறுத்தவரை நான் ஏதும் சொல்லவில்லை என்றே நினைத்துக்கொண்டு ஊசியைப் போட்டார். பிறகு என்ன நினைத்தாரோ அப்பா பெயரை சொல்லுங்க என்றார்

சண்முகம் என்றேன். 

சரி, நீங்க அங்க போய் உட்காருங்க உள்ளே போட்டிருந்த மர பெஞ்சைக் காட்டினார். 

எனக்கு டாக்டர் வலியை புரிந்துகொள்ள அழுத்திய முழங்காலின் வலப்புறம் கடுமையாக வலித்தது. பேண்டை குறிப்பிட்ட அளவுக்கு மேலே சுருட்டி விட்டிருந்ததை கீழே இறக்கிவிட்டேன். மூன்று தேவதைகளில் இப்போது நீலநிற உடைபோட்டவர்களும் இருந்தனர். அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டு மலக்கட்டு பிரச்னையுள்ளவர்கள் பொதுகழிவறைக்கு முன்னே நிற்பது போல வாசலில் நின்றுகொண்டிருந்தனர். 

நேராக வைத்து எக்ஸ்ரே எடுத்தவர், பின்னர் பல்வேறு தகடுகளை சேர்த்து வைத்து என்னை ஒருக்களித்து படுக்க வைத்தார். அப்போதும் வெளியான படத்தில் அனைத்தும் சரியாக இருக்கிறது. ஒரு ஸ்கேன் எடுத்துடுங்களேன். நான் சொல்ற இடத்தில் எடுத்தால் உங்களுக்கு காசு குறையும் என்றார். 

பிறகு நேராக கௌண்டருக்கு சென்றார். அங்கு சென்று, பில்லை டைப் செய்யத் தொடங்கினார். உங்க பேரு அன்பரசன்தானே என்றவர் அடுத்து உங்க அப்பா பேரு சொல்லுங்க என்றார். எனக்கு தலையே சுற்றியது. இப்போதுதானே சொன்னேன் என வாய் வரைக்கும் வந்தது. ஆனால் சொல்லிவிடமுடியாதே? 

டிஜே தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன் தன்னை அடிப்பவர்களிடம் ஒரு கேள்வி மட்டுமே கேட்பார். சாரு பேரு செப்பன்டையா... என்பார்.  அதுபோல சிக்கலில் நான் மாட்டிக்கொண்டேனா என எனக்கே சந்தேகமாக இருந்தது. கடந்த ஆண்டு டைபாய்டிற்காக மருத்துவமனையில் தங்கியிருந்தபோது இதே டாக்டர் எனது பெயர், தொழில் பற்றி கேள்வி கேட்டது மறக்கவில்லை. ஆனால் அவர் மறந்துவிட்டார். 

அவருக்கான ஆலோசனை கட்டணமாக 500 ம், மருந்து கட்டணமாக 700ம் செலவானது. மருத்துவரை விட மருந்தகத்தில் இருந்த போன்சாய் நர்ஸ் நல்லவராக தெரிந்தார். முழு மாத்திரை வேண்டுமா என்று கேட்டு இதம் தந்தார். பாதி மாத்திரை மட்டும் வாங்கிக்கொண்டேன். சித்திரவதைகள் வந்தாலும் கடவுள் ஏதோ இடத்திலாவது நம்முடன் இருக்கிறார் என நினைத்துக்கொண்டேன். வானில் மெல்ல தூறல்கள் விழத்தொடங்க, மாத்திரைகளை வாங்கிக்கொண்டு காலைத் தாங்கியபடி அறையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். 











 










 







கருத்துகள்