தங்கள் குழந்தைகளை தாங்களே கொல்லத் துணியும் பெண்கள்! - சைக்கோ டைரி
சைக்கோ டைரி
தொடர் கொலைகாரர்கள் குறிப்பிட்ட நாடுகளை மட்டும் சேர்ந்தவர்களா?
உலகமயமாக்கல் காலத்தில் இப்படி கூறினால் எப்படி? உளவியல் பாதிப்பு என்பது அனைத்து நாடுகளில் வாழும் மக்களுக்கும் உண்டு. இங்கிலாந்து, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் தொடர் கொலைகார ர்கள் உண்டு. அமெரிக்காவில் நிறையபேர் இருப்பதாக தோன்றக் காரணம். அவர்கள் குற்றவாளிகளை பெருமளவு ஆவணப்படுத்துவதுதான். மேலும் அமெரிக்காவில் சுதந்திரமாக துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மனதின் சமநிலை தவறும்போதெல்லாம் துப்பாக்கியை எடுத்து பத்துக்கும் மேற்பட்ட ஆட்களை சுட்டுக்கொல்கிறார்கள். ஆனால் அனைத்து நாடுகளிலும் இது சாத்தியமில்லை. சிலர் ஒருமுறை இதுபோல குற்றங்களை செய்தால் ஆயுளுக்கும் சிறையில் இருக்கும்படி சட்டங்களும் உள்ளன. அமெரிக்காவில் உள்ள இடது, வலதுசாரி ஊடகங்கள் போல துடிப்பாக குற்றங்களை பல்வேறு நாட்டு ஊடகங்களும் ஆவணப்படுத்துவதில்லை. இதனால் மெக்சிகோ போன்ற நாட்டில் அதிக கொலைகள், குற்றங்கள் நடைபெற்றாலும் கூட வெளியே தெரிவதில்லை.
குற்றங்கள் அதிகமாக நடைபெறும் நாடு, குறைவாக உள்ள நாடு ஆகியவற்றில் அடிப்படையான குடும்ப அமைப்பு, வாழ்க்கை நிலை, பொருளாதாரம் ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தொடர் கொலைகாரர்களைப் பற்றிய செய்திகளை தந்தி, தினகரனில் படிக்கும்போது ஒருவருக்கு உடனே மனதில் தோன்றுவது வல்லுறவு பற்றித்தான். பெரும்பாலும் நடைபெறும் கொலைகளில் வல்லுறவு என்பது முக்கியமானதால் இப்படியொரு எண்ணம் உருவாகிவிட்டது. அதிகாரம், கட்டுப்படுத்துதல், பாலுறவு என்பதே தொடர் கொலைகார ர்களுக்கான முக்கியமான அம்சங்கள். இதில் வல்லுறவு இல்லாமல் கொலை செய்யப்படுபவர்களும் உண்டு. ஒவ்வொரு கொலைகாரரும் கொலை செய்வதில் குறிப்பிட்ட பாணியை பின்பற்றுகின்றனர்.
கொலைகாரர்களில் ஆண்கள் இருக்கும்போது அதில் பெண்களும் இல்லையென்றால் சமநிலை தவறிவிடுமே? பெண்களைப் பொறுத்தவரை அந்நியரை வரவேற்று வெத்திலை பாக்கு கொடுத்து கொல்வது குறைவு. நெருக்கமாக இருக்கும் கணவர், குழந்தை, மாமனார், மாமியார், தோழி, தோழியின் குடும்பம் என விஷம் கொடுத்து கொன்ற வரலாறுகளே அதிகம்.
முன்சாவுசென் சிண்ட்ரோம் பை பிராக்ஸி உளவியல் குறைபாடு, தாய்களை அதிகம் பாதிக்கக்கூடியது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் முன்மாதிரி தாயாக இருக்க குழந்தைகளை அடித்து உதைப்பார்கள். கடுமையான தண்டனைகளை கொடுப்பார்கள். இதனால் அந்த குழந்தையே இறந்துபோனாலும் கவலைப்பட மாட்டார்கள். அடுத்த குழந்தையை பெற்றெடுக்க முயல்வார்கள். இப்படி மேரி பெத் டின்னிங் என்ற பெண்மணி தான் பெற்றெடுத்த ஒன்பது குழந்தைகளை கொன்றார். இதில் ஒரு குழந்தை மட்டும் தத்தெடுத்தார். குழந்தைகளின் நர்சரி, மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்வதில் பெண்கள் திறமையானவர்கள். அதேசமயம் இவர்களின் புத்தி சற்றே மாறினால் முடிந்தது கதை. தொடர் கொலைகார ர்களாக மாறுவார்கள். வெற்றி, அதிகாரத்திற்கான வேகத்தில் கொலைகளை அமைதியாக செய்வதால் இவர்களை கண்டுபிடித்து தடுப்பது கடினம். இவர்களை ஏஞ்சல் ஆப் டெத் என்று கூறுவார்கள். சாவின் விளிம்பில் உள்ளவர்களின் நிலையை மோசமாக்கி, மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவார்கள்.
திருமணம் செய்து கணவர்களை கொன்று அதன் மூலம் பணம், அதிகாரம், சமூக அந்தஸ்து ஆகியவற்றை பெறும் பெண்களை பிளாக் விடோஸ் என்று குறிப்பிடுகின்றனர். தங்களுக்கு பிடிக்காத பெண்களை ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி சித்திரவதை செய்து கொல்வதும் பெண் தொடர் கொலைகார ர்களுக்கு உரியதுதான். இதில் இன்னும் அதிக தூரம் செல்லும் பெண்கள் ஆண்களை தங்களுடைய வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். விலைமாதுவாக இருந்து தொடர் கொலைகாரியாக மாறிய அய்லீன் வுர்னோஸ் வேறுபட்டவர். இவர் தன்னிடம் உடலுறவுக்கு வந்த ஆண்களை கொன்று குவித்தார். எதற்காக? அய்லீன், ஆண்களை வெறுத்தார் என்று ஒரே காரணம்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக