வாய்தா கிடைக்காத வட்டார வழக்கு! -

 










மயிலாப்பூர் டைம்ஸ்

வாய்தா கிடைக்காத வட்டார வழக்கு

இந்திய ஒன்றியத்தில் நிறைய வாய்க்கால் வரப்பு தகராறுகள் உண்டு. இவை மதம், இனம், மொழி  என பலதரப்பட்டது. இதில் முக்கியமானதாக தேசியக்கட்சிகள் மதத்தை நினைக்கின்றன. அதை முக்கியப்படுத்தி மக்களைப் பிரித்து மண்டலமாக்கினால் தேர்தலில் ஜெயித்து விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அதுவும் கூட கடினம்தான். தமிழ் பேசுபவர்களில்  நிறைய வேறுபாடுகள் உண்டு.

 அதுதான் மண்டல ரீதியான வட்டார வழக்கு. கோவையிலும், ஈரோட்டிலும், திருவண்ணாமலையிலும் பேசுவது தமிழாக இருந்தாலும் அதில் என்ன பேசுகிறார்கள், எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று புரிந்துகொள்வது கடினம். குறிப்பிட்ட பொருளை என்ன வார்த்தை கொண்டு சொல்ல வருகிறார்கள் என்பதில்தான் அனைத்தும் மாட்டிக்கொள்கிறது. நான் சென்னைக்கு வந்த புதிதில் பேசும்போது, என்னுடைய ஊரில் இருப்பதாக நினைத்துக்கொண்டே பேசுவேன். இதெல்லாம் அறையில் இருந்த எனது ஊர்க்கார அண்ணன்களுக்கு சரிதான். அவர்கள் புரிந்துகொண்டார்கள். எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதுவே வெளியில் போய் பேசும்போது நிறைய பிரச்னைகள் கிளம்பின. 

மயிலாப்பூரில் லக்கி என்ற ஸ்டேசனரி கடை உண்டு. அங்கு சென்று பென்சில்களையும், ரப்பர், வரைவதற்கு தேவையான சில பொருட்களை வாங்கினேன். அப்போது நான் இமேஜ் நிறுவனத்தில் கிராபிக் டிசைன் படித்துக்கொண்டிருந்த காலம். எனக்கு கிராபிக் டிசைன் என்பதற்கு அடிப்படையான ஓவியம் என்பதை கற்றுக்கொடுக்க கிறிஸ்துவ ஆசிரியர் ஜேம்ஸ்,  விடாக்கண்டனாக முயன்றுகொண்டிருந்தார். நானும் முயற்சி செய்யாமல் இல்லை. அப்படி மூச்சை தம் கட்டி வரைந்ததில் ராயப்பேட்டை அஜந்தாவில் உள்ள இந்துஸ்தான் டிரேடிங் கம்பெனியில் வாங்கிய நோட்டின் காகிதங்கள்தான் கிழிந்து போயின. இன்றுவரை கோணல் மாணலாக உருவம் வரைகிறதே ஒழிய நேராக ஒரு கை, கால்களை வரைய முடியவில்லை. 

 எங்கேயோ போய்விட்டேன்தானே? லக்கி ஸ்டேஷனரி கடை ஓனரிடம் ஒரு பொருளை மாற்றிக் கொடுங்கள் என்ற கேட்க வேண்டியிருந்தது. நேராக கடைக்குப் போய்விட்டேன். ஓனர்தான் சிவப்புக்கோடுகள் போட்ட சட்டை போட்டுக்கொண்டு பொருட்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார். 

சார் அப்பயாவே இந்த பொருளை வாங்கிட்டுப் போனேன். எனக்கு இதில் வேற கொடுங்க. இது வேண்டாம் என்று  உணர்ச்சி வேகத்தில் சொன்னேன். 

நான் சொன்னதைக் கேட்டதும் அவர் சிரிக்கத் தொடங்கிவிட்டார். ஏன் சிரித்தார் என்று எனக்கு தெரியவில்லை. 

ஆனால் நான் சொன்னதில் ஏதோவொன்று அவரை சிரிக்க வைத்திருக்கிறது என தேடிப் பார்த்ததில் அப்பயாவே என்பதுதான் சிக்கியது. ஆஹா.. இனி பார்த்து பேசுடா முருகேசு என சொல்லிக்கொண்டேன். 

அதிலிருந்து நான் பிற ஆட்களிடம் பேசும்போது எப்போதும் அவருக்கு நான் சொல்லுவது புரியுமா என்று பார்த்துதான் பேசுகிறேன். மொழியின் பயன்பாடே தகவல்களை பிறருக்கு பகிர்ந்துகொள்வதுதான். நான் என் மொழி பெரியது என விடாப்பிடியாக பேசினால் விஜயகாந்த் உருது மட்டுமே தெரிந்த பாகிஸ்தான் வில்லனிடன் தமிழ் பன்ச் அடிப்பது போல காமெடியாகிவிடும். 

திருவண்ணாமலையில் புத்தக வேலைகளை செய்துகொண்டிருந்தோம் . பிறகு அந்த வேலைகள் முடிந்தபிறகு, பள்ளிக்கூட கட்டுமானத்தில் இருந்தபோது கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆட்களோடு வேலை செய்தோம். வேலை கடுமையாக இருந்தது. அதைவிட கடுமையாக இருந்தது அவர்கள் நான் பேசும் வட்டார வழக்கு மொழியை கிண்டல் செய்துகொண்டே இருந்ததுதான். பீட்டர் ஜெயராஜ் என்பவர் அதற்கு பரிகாரம் செய்தார். இதனால் புளியானூரிலிருந்து நடந்தே திருவண்ணாமலை வரும்படி பாக்கியத்தை எனக்கு ஈந்தார். 

அதை விடுங்கள். மயிலாப்பூரிலுள்ள பஜார் தெரு. ஏகப்பட்ட மனிதர்கள் புழங்கும் தெரு. அங்குள்ள காசித்தேவர் கடையில்தான் பொரி, கடலை, கடலை மிட்டாய் என வாங்கித் தின்று பசியாறுவது வழக்கம். நான் அவர் கடைக்கு சென்று நிலக்கடலை பத்து ரூபாய்க்கு என்றேன். வேர்க்கடலையை என்றார். நிலக்கடலை கொடுங்க என்ற மறுபடியும் சொல்ல, வேர்க்கடலைன்னு சொல்லு என காகிதத்தை மடித்து கட்டத் தொடங்கினார். எங்கள் வட்டாரத்தில் நிலக்கடலை என்றால் அவர் வாழ்ந்து வந்த மதுரைப் பக்கத்தில் வேர்க்கடலை என்பது புழங்குகிறது. இதற்காக நற்றமிழ் அகராதி வாங்கிக்கொடுத்து எது சரியானது என்று ஆராய்ச்சியா செய்யமுடியும். இப்போதெல்லாம் அவருக்கு புரிந்தால் போதும் என வேர்க்கடலை என்றுதான் கேட்கிறான். தீனிப்பிரச்னை சுளுவாக முடிகிறது .

அறைக்கு வந்து டீயைக் குடித்துவிட்டு துணியை குளியறையில் துவைக்கத் தொடங்கினேன்.  அடுத்தடுத்து ஆட்கள் குளிக்க, துவைக்க, காலை கழுவ என வந்துவிடுவார்களென நினைத்து பயம் இருந்தது. அப்போதுதான் எனக்கு அடுத்த அறையில் வசிக்கும் சுவாமிநாதன் வந்தார். அவரின் விசேஷம், ஜவ்வாது பவுடரை மக்கில் கலக்கி தலையோடு ஊற்றிக் குளிக்கிறாரோ என்று பயப்படும்படி வாசனை முன்னாடி வந்துவிடும். ஆனால் வியர்வையோடு கலந்து அடிக்கும்போதுதான் பரம்பொருளை கும்பிட்டுக் கொள்ளத் தோன்றும். அவருக்கு பேசத் தோன்றினால் இப் யூ டோன்ட் மைண்ட் என தொந்தரவு செய்தார். நீங்கள் சோறு தின்றாலும், கணினியில் வேலை செய்தாலும்.... பேச்சுலர் மனுஷன் என்ன செய்தாலும் சரி என வைத்துக்கொள்ளுங்கள். கழிவறை சென்று வந்தவர், என்னைப் பார்த்ததும் நின்றுவிட்டார்.  

ஷேவிங் பண்றப்போ காயம் ஆயிறுது என்ன செய்ய சார்? ஏதாவது ஐடியா குடுங்க 

நான் இதிலெல்லாம் என்ன அனுபவஸ்தனா... என்று 

ஷேவிங் க்ரீம் போட்டு ஷேவ் பண்ணுங்க சார். காயமாகாது என்றேன். 

எனக்கு கன்னம் வழு வழுன்னு இருக்கணும் சார். அதுக்காக கடையில் எதிர் போட்டேன். அதனால இப்போ அடிக்கடி கன்னத்தில் காயமாகுது

எதிர் போடறது ன்னா என்ன சார்?

கத்தியை மேலே திருப்பி வழிக்கணும். அதுதான் எதிர் போடறது. அப்படி செஞ்சா, கொஞ்ச நாளில் கன்னம் இறுக்கமாயிரும்னு கடையில சொன்னான். நான் கேட்கலை. அதான் உங்ககிட்ட ஐடியா கேட்டேன். 

நான் கடையில் ஷேவிங் செய்தது கிடையாது. ஆனால் கன்னம் வழு வழுவென இருப்பதற்காக இப்படியொரு டெக்னிக்கா என ஆச்சரியமாக இருந்தது. இன்னைக்கு ஒரு வார்த்தையை தெரிஞ்சுக்கிட்டேன் என்று சந்தோஷம். வேறென்ன? எனது அலுவலக நண்பர், ஒருவனுடைய தாய்மொழியை இன்னொருவன் அடையாளம் கண்டு பேசும்போது அவன்  அடைகிற சந்தோஷமே தனி என்றார். குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்த ஆள் கிடைத்தாலும் அப்படி பேசுகிற பேச்சு இன்னும் நன்றாக இருக்கும். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. 













 

கருத்துகள்