தேசதுரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா, மாற்றப்பட வேண்டுமா? 124 A IPC

 
ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் ஆட்சிக்கு எதிராக பேசுபவர்களை ஒடுக்குவதற்காக தேச துரோக சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் நாடு முழுக்க ஆங்கிலேயருக்கு எதிராக பேசிய, செயல்பட்ட, கலை வடிவங்களை உருவாக்கியவர்கள் சிறையில் பாரபட்சமின்றி அடைக்கப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர். 

124ஏ ஐபிசி என்ற சட்டம்தான் இன்று இந்தியாவில் அதிகமாக விவாதிக்கப்படும் சட்டம். இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டி, கார்ட்டூன், சமூக வலைத்தள பதிவுகள், அனுமன் ஜெயந்திக்கான கூச்சல்கள் என எவற்றையும் தேச துரோக சட்டம் விட்டுவைக்கவில்லை. அதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம். 

தேசதுரோகம் என்றால் என்ன?

அரசுக்கு எதிரான பேச்சு, செயல்பாடு மற்றும் மக்களை அரசுக்கு எதிராக கிளர்ச்சிக்கு தூண்டுதல் என்பதை தேசதுரோகம் என ஆக்ஸ்ஃபோர்டு அகராதி கூறுகிறது. 

வெறுப்பு, கண்டனம், விருப்பமின்மை ஆகியவற்றை வார்த்தை, செயல்பாடு மற்றும வேறெந்த வடிவத்தில் வெளிப்படுத்தினாலும் அது தேச துரோகம் என இந்திய சட்டம் 124 ஏ கூறுகிறது. 

வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது தேச துரோகத்தில் உள்ளடங்கியது. அரசை விமர்சிப்பது இதில் சேராது என 1962ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவினர் கேதர் நாத் சிங் வழக்கில் தீர்ப்பளித்தனர். 

அதிக தேசதுரோக வழக்குகள் 

ஜார்க்கண்ட் 4,641

தமிழ்நாடு 3,601

பீகார் 1,608

உத்தரப் பிரதேசம் 1,383

ஹரியானா 509

வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் 2010ஆம் ஆண்டு தொடங்கி எந்த தேச துரோக குற்றச்சாட்டுகளும் எழவில்லை. வழக்குகளும் பதிவாகவில்லை. பாஜக அரசு ஆள்வதால், அவர்களே தேசத்தை இழிவுபடுத்தி பேசி ஈடு செய்துவிடுவதால் வழக்குகள் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். 

2010ஆம் ஆண்டிலிருந்து 2021வரை  867 வழக்குகள் பதிவாகி அதில் 13,000 பேர் கைதாகியுள்ளனர். இதற்கான தகவல்தளத்தில் 13,360  நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் குற்றவாளிகள் என கூறுவது வெறும் 3 ஆயிரம் பேர்களைத்தான். 

கடந்த பதினொரு ஆண்டுகளில் தேசதுரோக குற்றச்சாட்டுகளில் அளவு 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணியான பாஜக அரசு பொறுப்பு ஏற்றபிறகுதான் நடந்துள்ளது. 

இரட்டை இலை செய்த அநீதி

பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும்போது 161 தேச துரோக வழக்குகள் பதிவாக 1,498 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதற்கடுத்து ஜெயலலிதா தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, 125 வழக்குகளை பதிவு செய்தார். இதில் 3,402 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். இதற்கடுத்த வழக்குப்பதிவுகளில் உ.பி. ஜார்க்கண்ட், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வருகின்றன. 

ஜெயலலிதா தேச துரோக குற்றச்சாட்டை, கூடங்குளம் அணுஉலை திட்டத்தை எதிர்த்த மீனவர்கள் மீது பதிவு செய்தார். 2011-12 காலகட்டத்தில் இச்செயல்பாட்டை செய்தார். கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா, குமாரசாமி, சித்தராமையா என முதல்வர்கள் மாறினாலும் தேசதுரோக சட்டம் எந்த மாறுதலுமின்றி சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. 

தேச துரோக குற்றச்சாட்டில் பெண்களின் மீது 94 வழக்குகளும், ஆண்களின் மீது 653 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதில் 127 பெண்கள் குற்றவாளிகளாக, ஆண்களில் 2,758 பேர் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். 

13,000 பேர் குற்றம்சாட்டப்பட்டால் அதில் தண்டனை கிடைப்பது வெறும் 13 பேருக்குத்தான். தண்டனை சதவீதம் 0.1 சதவீதம். பிறகு எதற்கு இந்த சட்டம் என கேள்வி எழுகிறதா? போராடுபவர்களை, கேள்வி கேட்பவர்களை மிரட்டி ஒடுக்கி உளவியல் ரீதியாக நிர்பந்தம் செய்யத்தான். 

பிணை கிடைப்பதற்கான காரணங்கள்

அதிக காலம் சிறையில் இருப்பது

குற்ற வரலாறு இல்லாதது

குற்றப்பதிவு செய்யப்படுவது

குறிப்பிட்ட குற்ற பாத்திரம் ஏற்காமலிருப்பது அறியப்பட்டால்...


பிணை நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள்


குற்றத்தின் தன்மை

முக்கிய குற்றவாளி

குற்றப்பதிவில் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது

குற்றத்தில் முக்கிய பங்காற்றியிருப்பது அறியப்பட்டால்


2021ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு, தேசதுரோக சட்டத்தை நீக்கியது. அங்கு 1948ஆம் ஆண்டு தேச துரோக சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். சிங்கப்பூர் அரசு இதனை 1965 தொடங்கி 2016 வரையில் ஆறுமுறைதான் பயன்படுத்தியுள்ளது. 

அரசின் செயல்பாட்டை பிடிக்காதவர்களை நாம் குற்றவாளி என கூற முடியாது. அப்படி பார்த்தால் நாடாளுமன்றத்தில் உள்ள பலரும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பிடித்து விடுவார்கள் என்றால் சட்ட அமைச்சர் கே சண்முகம். 

டைம்ஸ் ஆப் இந்தியா

image - hans indiaகருத்துகள்

பிரபலமான இடுகைகள்