கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி!

 
கொத்தடிமையாக வேலை செய்தவர்களை மீட்கும் செய்திகளை நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் அதற்குப் பிறகு என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிவதில்லை. அதுதான் ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றிவிட்டாரல்லவா அப்புறம் என்ன என நினைத்து விடுகிறோம். அதற்குப் பிறகுதான் அவர்களது வாழ்க்கையில் முக்கியமான பகுதி தொடங்குகிறது. இனி பிழைப்பிற்கு என்ன செய்வார்கள் என்பது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், எஸ்ஆர்எல்எம் எனும் திட்டத்தின்படி, கொத்தடிமை தொழிலாளர்களுக்கு சில பயிற்சிகளை கற்றுத் தந்து அவர்களது பொருட்களை சிறகுகள் என்ற பிராண்டில் அமேசானில் சந்தைப்படுத்தி வருகின்றது. 

மூங்கில் பொருட்களை கொத்தடிமை தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். இதில் மொபைல் போன் ஸ்டாண்ட், பிரஷ்களை வைக்கும் ஸ்டாண்ட் என பல்வேறு பொருட்களை உருவாக்கி வருகிறார்கள். 

வேலூர் காட்பாடியில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்து வந்தவர் சண்முகம். 2013ஆம் ஆண்டு இவர் அங்கிருந்து மீட்கப்பட்டார். பிறகு ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வேலைகளை செய்து வந்தாலும் குடும்பத்தை வைத்து காப்பாற்றும் அளவுக்கு சம்பாத்தியம் கிடைக்கவில்லை. பிறகுதான் அரசின் எஸ்ஆர்எல்எம் திட்டம் பற்றி தெரிய வந்தது. 

பெங்களூருவில் கைவினைப் பொருட்களை செய்வதற்கான ஒருவார கோர்ஸைப் படித்தார். அதற்கான சான்றிதழைப் பெற்றார். பிறகுதான் தனது இருளர் இன மக்களுக்கு பல்வேறு வித பயிற்சிகளைக் கொடுத்து கைவினைப் பொருட்களை செய்யத் தொடங்கினார். இவர்களை ஒருங்கிணைக்க சுய உதவிக் குழுவை உருவாக்கினார். 

இப்போது கைவினைப்பொருட்களை மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதன் மூலம் இன்னும் அதிக வருவாய் கிடைக்கும் என சண்முகம் நம்புகிறார். 

பழங்குடி மக்கள் துறை மூலமாக சண்முகத்தின் சுய உதவிக்குழுக்களுக்கு 6.4 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து வீட்டுக்கு தேவையான அலங்காரப் பொருட்களை உருவாக்கி வருகின்றனர். இதற்கான உதவிகளை வழங்கி வருபவர் மாவட்ட ஆட்சியரான ஆல்பி ஜான் வர்க்கீஸ். 

தி டைம் ஸ் ஆப் இந்தியா 

சண்முகசுந்தரம் ஜே

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்