தலைவிதியை மாற்றி எழுத முடியுமா? - காதலைக் காப்பாற்ற போராடும் கைரேகை நிபுணன்- ராதேஷ்யாம்

 

ராதே ஷ்யாம் 

ராதாகிருஷ்ண குமார்

மனோஜ் பரம ஹம்சா

இசை - ஜஸ்டின் பிரபாகரன்

பின்னணி - தமன் எஸ் 

புகழ்பெற்ற கைரேகை வல்லுநரான விக்ரம் ஆதித்யாவிற்கு, சொந்த வாழ்க்கையில் நடக்கும் காதலும் அதைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா என்பதும்தான் கதை. 

படம் எழுபது, எண்பதுகளில் நடக்கும் கதை. ராதே ஸ்யாம் என்பதற்கு கிருஷ்ணன் அல்லது ராதா கிருஷ்ணன் என பொருள் கொள்ளலாம். ஏன் இயக்குநர் தனது பெயரைக் கூட முதல் படத்திற்கு வைத்துக்கொண்டார் என நினைக்கலாம்.

வேத பாடசாலையில் உள்ள குருவான சத்யராஜ், பார்வையற்றவர். கைரேகையை தொட்டுணர்ந்து சொல்லும் தீர்க்கமான ஆற்றலுடையவர். இவரது சீடர் தான் விக்ரம் ஆதித்யா. இவருக்கும் இஸ்ரோ விஞ்ஞானியான தலைவாசல் விஜய்க்கும் நடக்கும் விவாதமே படத்தின் போக்கை சொல்லிவிடுகிறது. இதில் சத்யராஜ் ஜோதிட சாஸ்திரத்தை நம்பினாலும், மனிதனின் சிந்திக்கும் அறிவு செய்யும் மாயத்தை உணர்ந்தே இருக்கிறார். இதில் இவரது கிரேட் சிஷ்யரான விக்ரம் ஆதித்யா, சற்று மாறுபட்டு விதியை கணித்தால் மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இருக்கிறார். 

இதனால் நிறைய பிரபலங்களிடம் அப்படியே உண்மையை சொல்லி வம்பு தும்புகளை சம்பாதித்துக்கொள்கிறார். மேலும் அவருடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் அவர் தனது டைரியில் குறித்துக்கொண்டே வருகிறார். இதன் அடிப்படையில் அவர் தனது அனுபவங்களை அனுபவிக்கவும் தவறுவதில்லை. இப்படி கணிப்பது இறுதியில் அவரது இறப்பையும் கூட காட்டி விடுகிறது. 
இறக்கும் நாள் தெரிந்துவிட்ட நிலையில் அவர் ரோம், லண்டன் என பல்வேறு நாடுகளுக்கு சுற்றுகிறார். நிறைய பெண்களை சந்திக்கிறார். பழகுகிறார்கள். உடல் உறவு கொள்கிறார்கள். ஆனால்  காதல் மட்டும் இல்லை. அதை ஆதாரமாக கொண்டு திருமணமும் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இதற்கு அடிப்படையாக எனக்கு காதல் ரேகை கிடையாது என்று சொல்லுகிறார். 

இந்த நேரத்தில்தான் ரயிலில் அவர் விசித்திரமான பெண் ஒருத்தியைப் பார்க்கிறார். அந்தப் பெண், தன்னை சில நிமிடங்களுக்கு உற்றுப்பார்ப்பவர்களை பீதி ஏற்படுத்த இடுப்பை தனது சால்வையால் காட்டி மறுமுனையை அவர்களின் கையில் கொடுத்து விட்டு ரயிலின் வெளியே பாய்கிறாள். மறுமுனையை கவனமாக இழுத்துப்பிடித்து நொந்துபோன பலரும் அவளை மென்டல் என சொல்லிவிட்டு கடக்க, கிரேட் விக்ரம் ஆதித்யா முதலில் வியந்தாலும், துணியின் மறுமுனையைப் பிடித்தபடி அவரும் அந்தப் பெண்ணின் முகத்திற்கு முன்னே வந்து நிற்க அவள் அதிர்ச்சியடைந்து விடுகிறாள். 

அவள் தான் பிரேர்னா. மருத்துவராக இருக்கும் அவள்தான் விக்ரம் ஆதித்யாவின் இறுதிக்காலத்திற்கு துணையாக இருக்கப்போகிறாள் என்பது அவளுக்கே தெரியாது. ஆதித்யாவிற்கும் இந்தப் பெண்ணுடனான உறவு, ஜாலியாக கடந்துசெல்லும் பிளிர்ட்ஷிப் உறவாக இல்லை. ஆனால், அவருக்கு தனது எதிர்காலம் தெரிவதால் எந்த நம்பிக்கையையும் பிரேர்னாவுக்கு கொடுப்பதில்லை. ஆனால் பிரேர்னாவுக்கும் ஒரு மோசமான எதிர்காலம் இருக்கிறது. அவள் அதனை ஆதித்யாவிற்கு சொல்லுவதில்லை. இந்த உண்மை தெரிந்தபோது ஆதித்யாவிற்கும் பிரேர்னாவிற்குமான உறவு என்னவானது? ஆதித்யா தனது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஒரு சதவீத மாறுதலை ஏற்றாரா? விதியை புத்தியால் மாற்ற முடிந்ததா என்பதுதான் இறுதிப்பகுதி. 
படம் ஒடவில்லை என்பது உண்மை. படத்தில் நாயனுக்கு பெரிய சவால் தரும் காட்சிகள் கிடையாது. அவர் ஒரு ஜீனியஸ். ஆனால் அவரின் இறப்பு கண்ணுக்கு தெரியும்போதும் ரைட் இப்போது இருக்கும் விஷயத்தைப் பார்போம் என வாழ்கிறார். அதுதான் படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. ஜெகதிபாபு பாத்திரத்தை வில்லன் போல காட்டிவிட்டு சட்டென ஒதுக்கிவிடுகிறார்கள். அந்த பாத்திரம் ஆதித்யாவிற்கு எதிராக இருப்பது போல் கூட காட்சிகளை வைத்திருந்தால் படத்திற்கு சுவை கூடியிருக்கலாம். 

படத்தில் பிரேர்னாவிற்கு முத்தம் கொடுக்க அவளது வீட்டுக்கு வந்து வாசலில் நின்று பேசும் காட்சியில் ஆதித்யா - பிரபாஸ், பிரேர்னா -பூஜா இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அடுத்து, மோதிரப் பெட்டியில் வைத்து ஹேர்கிளிப் ஒன்றை பரிசாக கொடுத்து அதற்கான விளக்கம் சொல்லும் காட்சி. இந்த காட்சி உணர்ச்சிரீதியாகவும் காட்சி ரீதியாகவும் சிறப்பாக வந்திருக்கிறது. கதையை, படத்தை நிறையப் பேர் கிண்டல் செய்யலாம். ஆனால் படம் ஃபேன்டசியானது.  வன்முறையை, கொலையை கொண்டாடுகிற படங்கள் வந்து வென்றுகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அன்புக்காக அதைப்பெறும் போராட்டம் என்ற நிலையில் வரும் ராதே ஷ்யாம் வெல்லுவதற்கான வாய்ப்புகள் குறைவு. படத்திலும் அதன் போக்கில் அதற்கான பிரச்னைகள் உள்ளன. மனோஜ் பரம ஹம்சாவின் ஒளிப்பதிவு, தமனின் பின்னணி இசை, ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் என படத்தை மனப்பூர்வமாக பார்த்து ஒன்ற வைக்க சில அம்சங்கள் இருக்கின்றன தான். 

அழகான புனைவு!

கோமாளிமேடை டீம் 
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்