வெற்றிபெற்ற தருணத்தை மறக்கமுடியாது! - நிகாட் ஜரீன், குத்துச்சண்டை வீரர்

 





வெற்றி பெற்ற தருணம்....







நிகாட் ஜரீன்
உலக சாம்பியன் பட்டம் பெற்ற குத்துச்சண்டை வீரர்




நிகாட் ஜரீன், குத்துச்சண்டை வீரர்


வெற்றிபெற்ற பிறகு என்ன செய்தீர்கள்?

நான் அந்த இரவு முழுக்க தூங்கவில்லை. என் குடும்பம், மனதிற்கு பிடித்தமானவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். போனில் வந்த பல்வேறு குறுஞ்செய்திகளை வாசித்துக்கொண்டு இருந்தேன். 

உங்களது பயணம் துருக்கியில் 2011ஆம் ஆண்டு தொடங்கியது. முதலில் ஜூனியர், யூத், இப்போது சீனியர் என பட்டங்களை வென்றிருக்கிறீர்கள். இந்த பதினொரு ஆண்டுப் பயணம் எப்படியிருந்தது?

நிறைய ஏற்ற இறக்கங்கள் வெற்றி தோல்விகள் இந்த காலகட்டத்தில் இருந்தது. நான் தங்கமெடலை வென்றபோது நான் சந்தித்த சவால்கள், கஷ்டங்கள் தகுதியானவைதான் என்று தோன்றியது. எனக்கு நேர்ந்த சம்பவங்கள்தான் என்னை வலிமையானவளாக ஆக்கியது. 





போராட்டம் சவால்களைப் பற்றி சொன்னீர்கள். அதனால்தான் ரெஃப்ரி உங்கள் கையை உயர்த்தியதும் அந்தளவு உணர்ச்சியை வெளிக்கொட்டினீர்களா? இதுவரை நீங்கள் இப்படி இருந்ததே இல்லை?

எனது கை உயர்த்தப்பட்ட நொடியில் நான் உலகின் மிக மகிழ்ச்சியான மனிதராக மாறியிருந்தேன். ஆனால் அதேசமயம் இந்த வெற்றிக்காக எனது போராட்டம், கடந்து வந்த விஷயங்களை என்னை உணர்ச்சிகரமாக மாற்றியிருந்தது. 2016ஆம் ஆண்டில் கூட காலிறுதியில் தோற்றுப்போய் வெளியேறினேன். நான் இறுதிப்போட்டியில் வென்று தங்க மெடல் வெல்ல வேண்டும் என்பதுதான் எனது ஒரே லட்சியம். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நான் தங்க மெடலை வென்று இருக்கிறேன். எனது கடின உழைப்பு இப்போது பயன் கொடுத்துள்ளது. 

உங்களது குழந்தைப்பருவம் எப்படி இருந்தது?

பெண்கள் வீட்டுவேலைகளை செய்தபடி அதை விட்டு வெளியே வராமல் இருக்கவேண்டும் என்று கூறும் குடும்பம் எங்களுடையது. என்னுடைய அப்பா தடகள வீரர். எனவே என் ஆர்வத்தைப் பார்த்து ஊக்கப்படுத்தினார். ஆனால் அவரைச் சுற்றியிருந்தவர்கள் எதற்கு பெண்ணுக்கு குத்துச்சண்டை பயிற்சி, அது ஆண்களின் விளையாட்டு. இவளுக்கு அடிபட்டுவிட்டால் கல்யாணம் எப்படி நடக்கும் உனக்கு நான்கு மகள்கள் இருக்கிறார்களே என்று பேசினார்கள். 

அப்பா அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை. மகளே நீ குத்துச்சண்டையில் வெற்றி பெற்றால் இன்று உன்னை விமர்சிப்பவர்கள் நாளை புகைப்படம் எடுக்க ஆர்வமாக வருவார்கள் என்றார். அப்பா எப்போதுமே விமர்சனங்கள் என்னை பாதிக்க விட்டதில்லை. இப்படி பெற்றோர் கிடைக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கவேண்டும் தான். 

2009ஆம் ஆண்டு எனது பயணத்தைத் தொடங்கினேன். தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றேன். பிறகு தேசிய அளவில் பயிற்சி முகாமுக்கு தேர்வானேன். துருக்கியில் 2011இல் நடைபெற்ற போட்டியில் சர்வதேச மெடலை வென்றேன். ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்குவது லட்சியம். அதை நோக்கி உழைத்து வருகிறேன். 

ஏற்ற இறக்கங்களைப் பற்றி சொன்னீர்கள். அதில் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி சொல்லமுடியுமா?

எனக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் உண்மையான நண்பர்கள் யார் என்று அறிந்துகொண்டேன். நான் எனது நண்பர்கள் என்று நினைத்தவர்கள், எனது நிலையைப் பற்றி விசாரிக்க கூட இல்லை. பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு காயத்திலிருந்து வெளியே வந்தேன். 2018ஆம் ஆண்டு முதல் போட்டிகளில் பங்கேற்றேன். இனி நான் எதையும் திரும்பி பார்க்கப்போவதில்லை. 

சல்மான்கானின் ரசிகை என்று உங்களைப் பற்றி கேள்விப்பட்டோம். உங்களது வாழ்க்கையை படமாக எடுத்தால் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

அப்படி இந்தி சினிமாவாக எடுப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி எடுத்தால் இப்போதைக்கு ஆலியா பட் சரியாக இருப்பார். அவருக்கும் என்னைப் போலவே முகத்தில் சிறுசிறு பள்ளங்கள் உள்ளன. அவர் சரியாக இருப்பார். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்