இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்!

 








பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளை வீணாக்கியிருக்கிறது. இதனை எப்படி புரிந்துகொள்ளலாம். தொழில், கல்வி, நம் வாழ்க்கை, இதுவரை போட்டிருந்து திட்டங்கள் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதிகம் அடி வாங்கியது, சமூக வாழ்க்கையை தொலைத்த குழந்தைகள்தான். இதில் வேறு மூடநம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் நோயைப் பற்றிய அச்சத்தை அறிவியல் மூலமாக தீர்க்காமல், கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள், பிரார்த்தனை செய்யுங்கள் என கூறிக்கொண்டிருந்தன. 

இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். பள்ளி சென்றுகொண்டிருந்த, பள்ளி செல்லவேண்டிய பிள்ளைகள் அனைத்துமே இன்று சமூக வாழ்வை தொலைத்து தனியாக உள்ளனர். 

மும்பையில் மூன்றாவது வகுப்பு படிக்கும் மாணவி அவள். மாஸ்க்கை கழற்றச்சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் கழற்றவில்லை. ஆசிரியருக்கோ, நோய் பயமில்லை என்று சொல்லி தொண்டை தண்ணீர் வற்றியதுதான் மிச்சம். அவர் அந்த மாணவியின் முகத்தை பார்த்தே 600 நாட்களுக்கு மேலாகிறது. அதே மாணவி நடன வகுப்பில்  கலந்துகொண்டாள். அப்போது சக மாணவனின் கையை பிடித்ததுதான் தாமதம். உடனே போய் சானிடைசர் போட்டு கையை சுத்தப்படுத்தினாள். சுகாதாரம் பற்றிய பதற்றம் அந்த மாணவிக்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், அவள் விரும்பிய யாரேனும் ஒருவர் இப்படி தொற்று ஏற்பட்டு இறந்துபோயிருக்கலாம். அதனால் அவள் மனதில் நோய்த்தொற்று பற்றிய பயம் தோன்றியிருக்கும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர். 

மாணவர்கள் இப்போது வகுப்பில் உட்காரும் இடங்களும் மூலைகளாக உள்ளன. மேலும் அவர்கள் யாரும் பிறரின் முகம்பார்த்து பேசுவதில்லை. பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்துக்கொண்டு அல்லது கையைப் பார்த்துக்கொண்டே பேசுகிறார்கள். இது சமூகரீதியான பதற்றம் என அடையாளப்படுத்துகிறார்கள் உளவியலாளர்கள். இப்படி பள்ளி செல்லும் பிள்ளைகள் இருந்தால், அவர்கள் குழுவாக செய்யும் செயல்பாடுகளில் பெரிதாக பங்கேற்க வாய்ப்பு குறைவு. 

2

பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்துவதும், மாணவர்கள் அங்கிருக்க மாட்டேன் என அழுவதும் வழக்கம். பின்னாளில் அவர்களே பள்ளி செல்ல விரும்புவார்கள். ஆனால் இன்று இந்த பழக்கமும் செமத்தியாக அடிவாங்கியிருக்கிறது. இதன் விளைவாக, நான்கு வயது வரையில் கூட குழந்தைகள் தனியாக இருப்பதற்கு பயப்பட்டு அலறுகிறார்கள். அவர்களை சமாதானம் செய்யேவே முடியவில்லை என்று இப்போது பலரும் புலம்புகிறார்கள். 

வன்முறையான இயல்பு மாணவர்களிடம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கூட மாணவர்கள் ஆசிரியர்களை அடிப்பது போன்ற வீடியோக்களை பலரும் பார்த்திருப்பார்கள். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் இப்படியா என்பதையும் கூட விவாதம் செய்தனர். தனியாக வீடுகளில் அதிக நாட்கள் இருந்த மாணவர்கள் இப்போது விளையாட்டில் சிறியதாக தள்ளிவிடுவது, யாரேனும் ஒருவர் தொடுவது ஆகியவற்றைக் கூட அனுமதிப்பதில்லை. உடனே அதற்கு கடுமையாக உடல்ரீதியாக பதில் சொல்லுகிறார்கள். அடி, உதை தான் இதற்கு தீர்வு. 

இன்னொரு முக்கியமான விஷயம், பல மாணவர்கள் ஆன்லைனில் பல்வேறு விஷயங்களை பேசி புரிந்துகொண்டதால் பேனா, பென்சிலை பிடித்து எழுத வரவில்லை. இதுவும் மனரீதியாக அவர்களை சோர்வுக்கு உள்ளாக்குகிறது. குறிப்பாக ஆசிரியர் வகுப்பில் இதை எழுதிக்கொள்ளுங்கள் என்று கூறும்போது அதை உள்வாங்கி வேகமாக எழுத முடியாமல் மாணவர்கள் தடுமாறுகிறார்கள். 

3

600 நாட்களுக்கு மேல் பலரும் வெளியாட்கள் யாரையும் பார்க்கவில்லை. தனியாகவே இருக்கிறார்கள். குடும்பத்தினர் மட்டுமே அருகில் இருந்தனர். இதனால் அவர்களின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சக நண்பர்களுக்கு புதிதாக இருக்கும். சிலர் உயராக இருப்பார்கள். சிலர் ஆலமரம் போல அகலமாகி இருப்பார்கள். முகத்தில் பருக்கள் உருவாகியிருக்கும். குரல் உடைந்து மாறியிருக்கும். இதெல்லாம் வகுப்பில் பிறர் கவனித்து கேட்பதை சங்கடமாக சத்தியசோதனையாக மாணவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு பள்ளிகளில் ஆலோசனைகளை வழங்குவது சரியான தீர்வாக இருக்கும். 

டைம்ஸ் ஆப் இந்தியா

நேகா பாயானா

pixabay




கருத்துகள்